அரசியல்தமிழகம்

ஆளுநர் – முதல்வர் சந்திப்பு : சட்டம் ஒழுங்கு பிரச்சனையா?

ஆளுநர் அலுவலகத்திலிருந்து முதல்வர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு சில விபரங்களை கேட்டுள்ளனர். அந்த விபரங்கள் அனைத்தும் தமிழகத்தில் ஆக்டிவாக இயங்கி வரும் சில இயக்கங்கள் பற்றியது என்கிறார்கள். அதிமுக ஆட்சி இருந்தவரை பதுங்கி இருந்த அந்த இயக்கங்களின் நிர்வாகிகள் அண்மைக்காலமாக வெளிப்படையாக நடமாட ஆரம்பித்துள்ளதாகவும், அவர்களின் செயல்பாடுகள் மர்மமாக இருந்ததும் மத்திய உளவுத்துறையின் கவனத்திற்குச் சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆளுநர் மாளிகைக்கு மத்திய உள்துறையிலிருந்து தகவல் அனுப்பியிருக்கிறார்கள்.

இதன்பிறகுதான் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசியுள்ளார் மு.க.ஸ்டாலின். திடீரென ஆளுநர், முதல்வர் சந்திப்பு உறுதியான தகவலை முதலில் வெளியில் கசிய விட்டது ஆளுநர் மாளிகை தரப்பினர்தான். ஏனென்றால் அதற்கு முதல்நாள் தான் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆளுநரைச் சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர்.

தென்மாவட்டங்களில் நடைபெறும் பழிக்குப்பழி கொலைகள், திமுக எம்பி கடலூர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது, பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியை கொடூரமாக நெல்லை திமுக எம்பி ஞானதிரவியம் தாக்கியது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆளுநரிடம் அண்ணாமலை எடுத்துரைத்திருந்தார். இதற்கு மறுநாளே ஆளுநரை முதல்வர் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது அனைவரும் அறிந்ததுதான். சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து பேசுவதற்குத்தான் என்றார்கள். ஆனால் அப்படி ஒரு தகவல் வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள டிஐபிஆர் அதிகாரிகள் நீட் தேர்வு விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் கேட்டு ஆளுநரை முதல்வர் சந்திக்க இருப்பதாக தகவல்களை பரப்பினர்.

ஆனால் உண்மையில் ஆளுநர் முதல்வரை வரவழைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து சில சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளத்தான் என்கிறார்கள். தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்ற பிறகு இரண்டு முறை என்ஐஏ சோதனை தமிழகத்தில் நடைபெற்றுள்ளது. முதல்முறை நடைபெற்ற சோதனை இஸ்லாமிய அடிப்படைவாதிகளை குறிவைத்து நடைபெற்றது. அதன் பிறகு தற்போது நடைபெற்ற சோதனை தமிழகத்தில் பிரிவினை பேசும் சிலரை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக எல்டிடிஇ, நக்சலைட் ஆகிய இயக்கங்களை குறிவைத்து என்ஐஏ சோதனை நடந்து முடிந்துள்ளது.

இந்த சோதனை நடத்தப்பட்டதன் காரணமே ஆளுநர் ரவி மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கைதான் என்கிறார்கள். தமிழீழம், தீவிர நக்சல், இடதுசாரி சித்தாந்தங்களைக் கொண்ட சிலர் கடந்த காலங்களில் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அவர்களின் பிரிவினை கோஷம், சட்டவிரோத செயல்பாடுகள் அதிகரித்ததை உளவுத்துறை மோப்பம் பிடித்துள்ளது. இதனை ஆளுநர் மாளிகைத் தரப்பு மத்திய அரசுக்கு தகவல் அனுப்பியதும் என்ஐஏ அதிகாரிகளை தமிழகத்திற்கு அனுப்பியிருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.

சுமார் பன்னிரெண்டு இடங்களில் நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய நிர்வாகி சபேசனை என்ஐஏ கைது செய்துள்ளது. இவர் சென்னையிலிருந்து போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தி வந்ததாக கூறுகிறார்கள். இந்தக் கைது தொடர்பாக ஆளுநர் மாளிகைக்கு மத்திய அரசு தரப்பிலிருந்து தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து தான் முதல்வரை சந்திக்க ஆளுநர் தரப்பிலிருந்து விருப்பம் தெரிவித்ததாக கூறுகிறார்கள். ஆளுநர் எதற்கு அழைக்கிறார் என்பதை முதல்வர் அலுவலகமும் அறிந்தே வைத்திருந்தது. அதாவது தமிழகத்தில் நடைபெற்ற என்ஐஏ சோதனை, விடுதலை புலி கைது போன்ற சம்பவங்கள் பற்றி பேசவே ஆளுநர் முதல்வரை அழைத்துள்ளார். ஆனால் அப்படி ஒரு தகவல் வெளியில் கசிந்தால் என்னாகும் என்று பதறிய முதல்வர் ஆளுநரை சந்திப்பது நீட்தேர்வு தொடர்பாக என்று உண்மையை மறைத்து செய்தி வெளியிட்டுள்ளனர். அதேசமயம் ஆளுநர் ரவியைப் பொறுத்தவரை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களை ஒடுக்குவதில் தனிக்கவனம் செலுத்துவதாக கூறுகிறார்கள். அந்தவகையில் கடந்த காலங்களில் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததை காரணமாக வைத்து தற்போது அந்த இயக்கங்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால் ஆளுநரின் நடவடிக்கை அதிரடியாக இருக்கும் என்கிறார்கள் ஆளுநர் மாளிகை வட்டாரத்தினர்.

அதாவது எதற்காக தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டாரோ அந்தப் பணியினை ஆளுநர் ரவி தொடங்கி விட்டதாகவே கூறுகிறார்கள்.

சூரியன்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button