“ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்”- தாணு விரைவில் சந்திப்போம்.. – கமல்
தமிழ் திரையுலகில் பிரமாண்டமான படங்களைத் தயாரித்து, தனக்கென தனி இடத்தை வைத்திருந்தவர் கலைப்புலி தாணு. சில வருடங்களாக கடன் பிரச்சினைகள் காரணமாக படங்கள் எதுவும் தயாரிக்காமல், முடங்கி இருந்தார். இந்நிலையில் திரையுலகின் தந்தை டி. இராமானுஜத்தின் நூற்றாண்டு விழா மே 16 ஆம் தேதி கொண்டாடுவது என முடிவு செய்யப்பட்டது. அந்த விழாவில் உலக நாயகன் கமல்ஹாசனை சிறப்பு அழைப்பாளராக அழைக்க முடிவு செய்துள்ளனர். விழாவிற்கான அனைத்து செலவுகளையும் தாணுவே ஏற்றுக்கொண்டுள்ளார்.
அந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துவந்த போது.. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்களுள் ஒருவரான போஸ் என்பவரை அழைத்து “உத்தம வில்லன்” பிரச்சினையை பெரிது படுத்தி கமல்ஹாசனை பொதுவெளியில் அசிங்கப்படுத்து என தூண்டி விட்டிருக்கிறார் கலைப்புலி தாணு. அதேபோல் போஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு நான்கு பக்கங்கள் கொண்ட கடிதத்தை அனுப்பினார். அதனை பொதுவெளியிலும், பத்திரிகை நிறுவனங்களுக்கும் அனுப்பினார். கலைப்புலி தாணுவின் எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்தினார் போஸ்.
இதற்குமுன் “ஆளவந்தான்” படத்தில் தனக்கு நஷ்டம் ஏற்பட்டது என்பதை கமல்ஹாசன் கண்டுகொள்ளவில்லை என்கிற கோபத்தில் இருந்த தாணு, கமல்ஹாசனும், சரிகாவும் விவாகரத்து பெற்ற நிலையில், அப்போது ஆளவந்தானைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரித்த “புன்னகை பூவே” என்கிற படத்தில் சரிகாவை குத்துப் பாட்டுக்கு ஆட வைத்தார். பின்னர் அந்த பாடலுக்காகவே பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தினார். அப்போது “ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்” என கமல் மீதுள்ள வன்மத்தை சரிகா முன்னிலையிலேயே கக்கினார்.
இதெல்லாம் கடந்த காலங்களில் கமலுக்கு எதிராக தாணு செயல்பட்ட விதங்களில் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே தான். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. தற்போது டி. இராமானுஜம் நூற்றாண்டு விழாவிற்கு கமல்ஹாசனை அவரது காரை திறந்து மேடைக்கு அழைத்துச் செல்லும் பணியை ( கமலின் உதவியாளர் போல் ) சிறப்பாக செய்துள்ளார் தாணு. மேடையில் அமர்ந்ததும், அவருக்கு அருகிலேயே இவருக்கும் நாற்காலியை போட்டு அமர்ந்துள்ளார்.
பின்னர் கமலிடம்.. இந்த விழாவிற்கான அனைத்து செலவுகளையும் நான்தான் செய்துள்ளேன் என பெருமையாக பேசியிருக்கிறார். அப்போது எனக்கு தேதி கொடுத்தீர்கள் என்றால் பல பிரச்சினைகளில் இருந்து வெளியே வந்துவிடுவேன் என கெஞ்சியிருக்கிறார். தாணுவின் பேச்சை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த கமல், விரைவில் சந்திப்போம் என ஒரே வார்த்தையில் தலையை ஆட்டியுள்ளார்.
சினிமாவில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதற்கு இதுபோன்ற எத்தனையோ உதாரணங்கள் உண்டு.