பார் உரிமையாளர் நெல்லையப்பன் தற்கொலை விவகாரம் : மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு
மாமல்லபுரம் டி.எஸ்.பி அலுவலகத்தில் பார் உரிமையாளர் நெல்லையப்பன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கேளம்பாக்கம் பகுதியில் டாஸ்மாக் கடை அருகே பார் உரிமத்தை அதிமுக பிரமுகரிடம் இருந்து மேல் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தவர் நெல்லையப்பன் (36). இந்நிலையில், பார் வாடகையை அதன் உரிமையாளர் தொடர்ந்து அதிகரித்து வந்ததாலும், போலீஸார் கட்டாய மாமூல் கேட்டு தொந்தரவு தந்ததாலும் தன்னால் பாரை தொடர்ந்து நடத்த முடியாமல் நெல்லையப்பன் கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பார் வாடகை அதிகரிப்பு தொடர்பாக மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் நெல்லையப்பன் கடந்த மே.28 அன்று புகார் அளிக்க வந்துள்ளார். ஆனால் போலீஸார் புகாரை வாங்க மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், டிஎஸ்பி அலுவலகம் முன்பு உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தீக்குளிப்புக்கு முன் நெல்லையப்பன் அவரது முகநூல் பக்கத்தில் வீடியோ காட்சி ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் டாஸ்மாக் கடைகளில் பார் நடத்தும் நேரடி உரிமம் பெற்றவர்களின் நெருக்கடியாலும், திருப்போரூர், கேளம்பாக்கம் காவல்ஆய்வாளர்கள் மற்றும் மாமல்லபுரம் டிஎஸ்பி ஆகியோரின் கட்டாய மாமூல் வசூலாலும் கடன் தொல்லையில் சிக்கி அவதிப்படுவதாக பதிவிட்டிருந்தார்.
கடன் தொல்லையால் காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி அலுவலகம் அல்லது மாமல்லபுரம் டிஎஸ்பி அலுவலகத்தின் முன்னால் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
தீவிர சிகிச்சையில் இருந்த நெல்லையப்பன் மாஜிஸ்ட்ரேட்டிடம் தனது மரணம் குறித்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்த வழக்கில் அவர் அளித்த மரண வாக்குமூலம் மற்றும் சமூக வலைதளத்தில் அவர் பதிவு செய்த வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக மாமல்லபுரம் டி.எஸ்.பி. சுப்பாராஜு, திருப்போரூர் இன்ஸ்பெக்டர் கண்ணன், கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர்கள் 3 பேரும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர்.
இதில் முக்கிய குற்றவாளியான அ.தி.மு.க. பிரமுகர் ஆனந்தன் என்பவர் தலைமறைவாக இருந்தார். காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.பி. சந்தோஷ் ஹதிமானி உத்தரவின் பெயரில் தனிப்படை போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் ஆனந்தனை போலீசார் கைது செய்தனர்.அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு மேலும் சில முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே நெல்லையப்பன் தற்கொலை குறித்து, ஊடகங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. நெல்லையப்பன் தற்கொலை குறித்து 4 வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி சந்தோஷ் ஹதிமானிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.