கடலில் மூழ்குவோரை காப்பாற்ற சிறப்பு உயிர்க்காப்புக் குழு.!
சென்னையில் கடலில் குளிக்கும் இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிர் இழப்பதைத் தடுக்கப் பல்வேறு பிரிவினரைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு உயிர்காப்புக் குழுவைத் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தொடக்கி வைத்தார்.
சென்னையில் பொதுமக்கள் பெருமளவில் கூடும் மெரினாக் கடற்கரை உலகிலேயே மிகப்பெரிய கடற்கரைகளில் ஒன்றாகும்.
மெரினாவில் மட்டுமல்லாமல் எண்ணூர், ராயபுரம், பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை கடற்கரைகளையும் பொதுமக்கள் பொழுதுபோக்கு இடங்களாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னைக் கடற் பகுதிகள் ஆழமிக்கவை என்பதால் கடலில் இறங்கிக் குளிக்கவோ, விளையாடவோ கூடாது எனத் தடை உள்ளது. அலையின் வேகம் அதிகமாக இருப்பதால் அதை அறியாமல் சிலர் உற்சாக மிகுதியால் கடலில் இறங்கும்போது அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது.
சென்னைக் கடற் பகுதிகளில் மட்டும் 2016ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நீரில் மூழ்கி இறந்ததாகவும், காணாமல் போனதாகவும் 506 வழக்குகள் பதிவாகி உள்ளன.