அரசியல்

ஜெயலலிதாவின் இருப்பும், இறப்பும் உணர்த்தும் உண்மைகள் !

ஜெயலலிதா என்ற ஒற்றை பெண்மணியின் அரசியல் இருப்பும், இறப்பும் பல்வேறு உண்மைகளை நமக்கு உணர்த்துகின்றன. 1982ஆம் ஆண்டு எம்ஜிஆர் அவர்களால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகிறார் ஜெயலலிதா. கட்சியில் சேர்ந்த சூட்டோடு கொள்கை பரப்பு செயலாளர் பதவியை தருகிறார் எம்.ஜி.ஆர். சத்துணவு உயர்மட்டக்குழு தலைவர் என்கிற அரசுப் பதவியும் வருகிறது. அமைச்சர் பதவிக்கு இணையான இந்தப் பதவியே, ஜெயலலிதாவை தமிழகம் முழுவதும் அரசியல் ரீதியாக உணரச்செய்தது.


1984 ஏப்ரலில் மாநிலங்களவை உறுப்பினராகி அண்ணா அமர்ந்த அதே இருக்கையை கேட்டுப்பெற்றார். மாநிலங்களவை உறுப்பினராக இருந்து மாநில முதலமைச்சர் ஆனவர்கள் தமிழகத்தில் இருவர் மட்டுமே. ஒன்று அண்ணா. மற்றொருவர் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் எளிதாக ஜெயலலிதா வசம் வந்தது.

தொடர் வெற்றிகளை ஜெயலலிதாவால் சுவைக்க முடியவில்லை. தகுதி இழப்பு, தகுதி நீக்கம் என்று வழக்குகளின் தீர்ப்பு அவரது பதவிகளை பந்தாடியது. ஜெயலலிதாவின் அரசியல் இருப்பு என்பது எம்ஜிஆரால் வழங்கப்பட்டது என்றாலும், அதனைத் தொடர்ந்து தக்கவைக்க அவரது உழைப்பும், முயற்சியும், ஆளுமையும் துணை நின்றது. கட்சி நிர்வாகிகளை அவர் ஆட்டுவித்தார். பார்த்தால் பசி தீரும் என்று அவர் தொண்டர்களுக்கு காட்சி அளித்தார். அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் தமது நாற்காலிகளின் நுனியில் மட்டுமே அமர்ந்திருந்தனர். எப்போது வேண்டுமானாலும் எழுந்து செல்வதற்கு அவர்கள் தயாராக இருந்தனர்.

அவரது மறைவுக்குப் பிறகு கட்சியும், ஆட்சியும் தொடர்கிறது. ஆனால் ஜெயலலிதா பெற்றுக் கொடுத்து இன்று ஆண்டு அனுபவிக்கும் ஆட்சி அவரது ஆட்சியாக இல்லை. யாருக்கோ, யாருடைய கண்அசைவின் படியோ அரசு எந்திரம் நகர்கிறது. இந்த ஆட்சியாளர்கள் நாட்களை எண்ணிக் கொண்டிருந்தாலும், அச்சம் இல்லாமல் ‘மேலே இருப்பவர்களின்’ அருளாலும், ஆசியாலும் இவர்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது. தாங்கிப் பிடிக்க ஆள் இருக்கும்போது தாக்குப்பிடிக்க முடியாதா என்ன? மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை தமிழக அமைச்சர்களின் சிலரது பேச்சு நமக்கு உணர்த்துகிறது. காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்து மேய்வது போல் என்ற சொல்லாடல் உண்டு. ஜெ.வால் அடக்கி வைக்கப்பட்டவர்கள் அடங்கியிருந்தவர்கள் இப்போது வாய் நீளமும், கை நீளமும் காட்டி வருகின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வசனம் “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் வாய்மட்டும்தான் காதுவரை உள்ளது”
இதே வசனத்தை மாற்றி, “ஜெயலலிதாவுக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள். ஆனால் அறிவுதான் கொஞ்சம் கம்மி”
உண்மையிலேயே ஜெயலலிதா தேர்ந்த அரசியல்வாதி, தனது கட்சியினரையும் அமைச்சர்களையும் அவர் பேசவே விடவில்லை. அவர்கள் பேசத்தொடங்கினால் எப்படி பேசுவார்கள் என்பதை இப்போது நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஜெயலலிதா என்ற மிகப்பெரும் அரசியல் ஆளுமை இன்று தமிழகத்தில் இல்லை. ஆண்களின் ஆதிக்கம் கொடி கட்டி பறந்த இந்திய அரசியலில், ஒற்றைப் பெண்ணாக இருந்து ஒட்டுமொத்த ஆண்களையும் பணிய வைத்த பெருமை ஜெ.வுக்கு உண்டு. இந்த ஒரு காரணத்திற்காகவே வரலாறு அவரை வரவில் வைத்துக்கொள்ளும்.

வல்லவனுக்கும் வழுக்குப்பாறை உண்டு. இது ஜெயலலிதாவுக்கு சாலப்பொருந்தும். மகாவல்லமை பொருந்திய ஜெயலலிதா ஒரு சிறைவாசி போல் வாழ்ந்து சிறைவாசி போல் மறைந்துவிட்டார். மரணம் அவருக்கு விடுதலை கொடுத்துள்ளது. வயலுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடி புல்லுக்கும் அங்கே கசியும் என்பர். ஜெயலலிதா முகத்துக்கு அளித்த வாக்குகளால் இபிஎஸ்-ம், ஓபிஎஸ் -ம் பிழைத்து வருகின்றனர். செத்தும் கொடுத்த ஜெயலலிதா புகழ் நிலைத்திருக்கும்.

  • வே.க.இளங்கோ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button