தமிழகம்

25 லட்சம் மதிப்புள்ள இரும்புடன் கடத்திச்சென்ற லாரி பறிமுதல் ! கடத்தல் பின்னணியில் முக்கியப் புள்ளி !.?

சென்னையில் நீண்ட நாட்களாக ட்ரெய்லர் லாரிகளில் இரும்பு ராடுகளை திருடும் கும்பலை மாதவரம் போலீசார் கைது செய்துள்ளனர். இந்த கும்பல் ட்ரெய்லர் லாரிகளையும் இரும்புகளையும் திருடி விற்பனை செய்வதையே தொழிலாக கொண்டுள்ளவர்கள் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இரு தினங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமண பெருமாள் என்பவர் டிரைலர் லாரியில் மணலி ஆண்டாள் குப்பத்திலிருந்து ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலைக்கு 25 டன் எடை கொண்ட இரும்புராடுகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.

அந்த லாரியை மாதவரம் மஞ்சம்பாக்கம் டோல்கேட் அருகே லாரியின் டிரைவர் சாலையின் ஓரமாக நிறுத்தி ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் லாரியின் ஓட்டுநர் லட்சுமணப்பெருமாளின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரை சரமாரியாக அடித்து உதைத்து வாயில் துணியைக் கட்டி லாரியிலிருந்து இறக்கி விட்டுவிட்டு, லாரியை கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் அருகில் இருந்தவர்கள் உதவியுடன் லாரியின் உரிமையாளருக்கு டிரைவர் நடந்த சம்பவம் பற்றி தகவல் சொன்னதோடு, மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த தகவல் உடனடியாக ஆவடி காவல் ஆணையராக செங்குன்றம் காவல் மாவட்ட கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு தெரிவித்ததின் பேரில் உடனே குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளார். உயர் அதிகாரியின் உத்தரவு எடுத்து மாதவரம் பால் பண்ணை காவல் ஆய்வாளர் வேலுமணி உடனடியாக வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். பின்னர் தனிப்படை போலீசார் லாரியில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியின் மூலம் லாரியை பின் தொடர்ந்து சோழவரம் அருமந்தை பகுதியில் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த லாரியையும் அதனை கடத்திச் சென்றவர்களையும் வருமான அவர்களையும் பிடித்ததோடு 25 டன் எடை கொண்ட இரும்பு ராடுகளுடன் லாரியை மீட்டு காவல் நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் மாதவரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் வேல் மாத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகானந்தம், தினேஷ் வானகரத்தைச் சேர்ந்த சிவக்குமார் பாண்டியன், வந்தவாசியை சேர்ந்த லோடுமேன் முருகன், சாத்தான்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் ஆகிய ஆறு நபர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்ததில், இவர்கள் பழைய இரும்பு வியாபாரம் செய்பவர்கள் என்றும், லாரியில் வரும் இரும்பு பொருட்களை திருடி அதற்கு பதிலாக மணல் மூட்டைகளை லாரியில் ஏற்றி விடுபவர்கள் என்பதும், பிறகு லாரியில் இருந்து இறக்கிய இரும்பு பொருட்களை லட்சக்கணக்கில் விற்பனை செய்து சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

பின்னர் மேற்கண்ட ஆறு நபர்களையும் கைது செய்த மாதவரம் பால் பண்ணை போலீசார் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மீட்கப்பட்ட இரும்பு ராடுகளின் மதிப்பு லாரியுடன் சேர்த்து 25 லட்சம் என கூறப்படுகிறது. மேலும் போலீசார் விசாரணையில் சோழவரம் சுற்றுவட்டார பகுதிகளில் இது போன்ற இரும்பு திருட்டுத் தொழில் கொடிகட்டி பறப்பதாகவும், தொழில் போட்டியின் காரணமாகத்தான் இச்சம்பவம் நடந்துள்ளதா ? என்பது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக அங்குள்ள போலீசார் கூறுகையில்.. சோழவரம் பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வரும் பல நபர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டதில், தனுஷ் என்பவர் பெயரை அவர்கள் கூறியதாகவும், அந்தப் பகுதியில் அவர் பவர் உள்ளவராக காட்டிக் கொண்டு வலம் வருவதாகவும், மேலும் அவர் பிரபல பத்திரிகையின் பெயரைச் சொல்லி அப்பகுதியில் உள்ள அரசு அதிகாரிகளையும் காவல்துறையினரையும் மிரட்டி வலம் வருபவர் எனவும் கூறினார்கள் என போலீசார் தெரிவித்தனர். இந்த திருட்டு நடந்து 24 மணி நேரத்திற்குள் லாரியையும் அதில் ஏற்றி சென்ற இரும்பு ராடுகளையும் பிடித்த தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

மேலும் சில மாதங்களுக்கு முன் சோழவரம் பகுதியில் இரும்பு திருட்டு சம்பந்தமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அந்த கொலை சம்பந்தமாக சோழவரம் போலீசார் ஆறு நபர்களை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் திருட்டு இரும்பு வியாபாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த இரும்பு திருட்டு வியாபாரிகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் இந்த பகுதியில் மீண்டும் மீண்டும் இரும்பு திருட்டும் அது சம்பந்தமான கொலைகளும் நடைபெற வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக ஆவடி மாநகர காவல் ஆணையர் சங்கர் ஐபிஎஸ், செங்குன்றம் காவல் மாவட்ட கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் இதுசம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினரும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

– கேஎம்எஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button