தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான டன் ரேஷன் அரிசிகள் ஆந்திராவுக்கு கடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
இது சம்பந்தமாக விசாரித்தபோது.. திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து ஆரம்பாக்கம் சோதனைச்சாவடி வழியாக ஆந்திர எல்லையின் முகப்பு பகுதியான தடாவில் உள்ள பிரபல அரிசி கடத்தல் மாபியா நாளானி குமார் என்கிற சூலூர் பேட்டை குமாருக்கு, தடாவில் உள்ள தடா குமார் என்பவர் மூலமாக தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசிகளை மொத்தமாக வாங்கி, சூலூர் பேட்டை நாளானி குமார் என்பவர் ஆந்திராவில் விற்பனை செய்து பணம் சம்பாதித்து வருவதுடன், அதே ரேஷன் அரிசியை பட்டை தீட்டி மீண்டும் தமிழ்நாட்டிற்கு பொன்னி, சம்பா என்கிற பெயரில் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
இந்த ரேஷன் அரிசி கடத்தலில் வடசென்னை வ.உ.சி நகர், தண்டையார்பேட்டை வைத்தியநாதன் பாலம் அருகில் உள்ள சர்வீஸ் ரோடு பருப்பு குடோன் அருகில் வாட்டர் சர்வீஸ் கடை வைத்திருக்கும் நந்தா என்பவர் தினந்தோறும் 10 லாரிகளில் சுமார் 60 டன்கள் வரை தடா குமார் என்பவருக்கு ரேஷன் அரிசி அனுப்பி வருகிறார். இந்த நந்தாவுக்கு அப்பகுதியில் ரௌடிகள் பலம் இருப்பதால், இவருக்கு போட்டியாக வடசென்னை பகுதியில் வேறு யாரும் தொழில் செய்ய முடியாது. TN 22 AQ 7579 மற்றும் சில வாகனங்களில் அனுப்பி வருகிறார். பெரம்பூர் பகுதியில் வலம் வரும் வசந்த் தினந்தோறும் சுமார் 40 டன் TN10 Q 8338 வாகனத்தில் அனுப்பி வருகிறார். சென்னை வண்ணாரப்பேட்டை ஞானவேல் என்பவருக்கு சொந்தமான சாத்தான்காடு பகுதியில் உள்ள குடோனிலிருந்து தினந்தோறும் 50 டன், சிட்லபாக்கம் சரவணன் என்ற கனி சுமார் 60 டன்கள் என அனுப்புகிறார்களாம்.
இதே போல் திருமுல்லைவாயில் பாலாஜி என்பவர் தினசரி 30 டன், செங்கல்பட்டிலிருந்து செஞ்சி சண்முகம் என்பவர் தினசரி 50 டன் இது தவிர எளாவூர் குமார், கும்மிடிப்பூண்டி சீனு ஆகிய இருவரும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சிறு சிறு வியாபாரிகளிடமிருந்து சில்லறையாக ரேஷன் அரிசிகளை வாங்கி தினந்தோறும் சுமார் 100 டன்கள் வரை தடா குமார் மூலமாக சூலூர் பேட்டை குமாருக்கு அனுப்புகிறார்களாம்.
இதேபோல் தினந்தோறும் தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு கடத்தப்படும் ரேஷன் அரிசிகள் சுமார் ஐநூறு முதல் ஆயிரம் டன்கள் வரை இருக்கும் என்கிறார்கள். இந்த ரேஷன் அரிசிகளை பதுக்கி விற்பனை செய்யும் தடா குமார் மற்றும் நாளானி குமார் சூலூர்பேட்டை அக்கம்பேடு பகுதியில் வசித்து வருகிறார்கள். இவரது பினாமிகளாகவும் தொழில் பங்குதாரராகவும் சூலூர் பேட்டை ஹரிநாத் ரெட்டி, நாளானி குமாரின் மகன் சாய் ஆகியோர் உள்ளனர்.
இவர்களுக்கு பினாமிகளாக சென்னை நந்தா, பெரம்பூர் வசந்த், வண்ணாரப்பேட்டை ஞானவேல், சிட்லபாக்கம் சரவணன், செஞ்சி சண்முகம், கும்மிடிப்பூண்டி சீனு, திருமுல்லைவாயில் பாலாஜி போன்ற நபர்கள் இந்த ரேஷன் அரிசி கடத்தலில் படுஜோராக ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவர் மீதும் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அப்பாவிகள் மீது பொய் வழக்கு போடும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவினர், இவர்கள் மீது ஏன் வழக்குப் பதிவு செய்வதில்லை என்கிற கேள்வியும் எழுகிறது. மேலும் இந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை தடுக்க வேண்டும் எனில், CSCID போலீஸ் இரும்பு கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தவிர தமிழக CSCID போலீஸ் ஆந்திரா கடத்தல் மாபியா தலைவன் மற்றும் அவரது கூட்டாளிகளையும், ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்.
மேலும் நாளாணி குமார் என்பவர் தமிழ்நாடு போலீஸ் எங்களை ஒன்றும் செய்ய முடியாது. நாங்கள் சித்தூர் எஸ்.பி, திருப்பதி டி.எஸ்.பி இவர்களை சரிகட்டி வியாபாரம் செய்து வருகிறோம். அது தவிர சென்னை ரெட்ஹில்ஸ் முதல் கும்மிடிப்பூண்டி ஆரம்பாக்கம் வரை உள்ள அனைத்து காவல் நிலையங்களையும் சரி செய்துள்ளோம். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் தாசில்தார்கள் என அனைவரையும் சரி செய்து தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசிகளை ஆந்திராவிற்கு கடத்தி வருகிறோம். தடா குமார், சூலூர் பேட்டை குமார் என்கிற பெயரை சொன்னாலே எந்த அதிகாரியும் தடுக்க மாட்டார்கள் என மார்தட்டி வருகிறார்கள் என்கிறார்கள்.
ஆகவே உணவு கடத்தல் பிரிவு ஐஜி மற்றும் தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி, வடக்கு மண்டல கூடுதல் ஆணையர், ஆவடி காவல் ஆணையர், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆந்திராவில் செம்மரம் வெட்டிதாக தமிழர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு, சுட்டுக்கொலை செய்கிறார்கள் ஆந்திர காவல்துறையினர். ஆனால் தமிழகத்திலிருந்து ரேஷன் அரிசியை கடத்தும் கடத்தல் மாஃபியா கும்பல் மீது தமிழக போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் கருணை காட்டுவது எதனால் என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இந்த கடத்தல் மாஃபியா கும்பலோடு அரசியல்வாதிகள் தொடர்பு இருப்பதால்தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் எனவும் பேசப்பட்டு வருகிறது. எது எப்படியோ தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் முதலமைச்சரின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படாத வகையில், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
கே.எம்.எஸ்
செய்தியாளர்