“எலக்சன்” படத்தின் திரைவிமர்சனம்
ஆதித்யா தயாரிப்பில், விஜயகுமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ஜார்ஜ் மரியம், பவெல் நவகீதன் உள்ளிட்டோர் நடிப்பில், தமிழ் இயக்கத்தில், சக்தி வேலன் வெளியிட்டுள்ள படம் ” எலக்சன்”.
கதைப்படி.. வேலூர் மாவட்டத்தில் உள்ள நல்லூர் கிராமத்தில் வசித்துவரும் நடராஜன் ( விஜயகுமார் ) இளம் வயதிலிருந்தே செல்வி ( ரிச்சா ஜோஷி ) என்கிற பெண்ணுடன் பழகி வருகிறான். வளர்ந்ததும் இருவரும் காதலிக்கிறார்கள். இந்த விஷயம் இருவரின் பெற்றோருக்கும் தெரியும். இந்நிலையில் அப்பகுதியில் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. நடராஜனின் தந்தை நல்ல சிவமும் ( ஜார்ஜ் மரியன் ), செல்வியின் தந்தையும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள். நல்லசிவம் ஆளும்கட்சியின் பேச்சாளர். அவர் தனது நண்பருக்கு சீட் கேட்க, கட்சித் தலைமை வேறு நபருக்கு ஒதுக்குகிறது. செல்வியின் தந்தை கட்சிக்கு எதிராக சுயேட்சையாக நின்று தோல்வியடைகிறார். தனது தோல்விக்கு நல்லசிவம் தான் காரணம் என அவரது வீட்டிற்கு வந்து கலாட்டா செய்து இனிமேல் இருவருக்கும் எந்தவித உறவும் இல்லை என நட்பை துண்டித்து விட்டுச் செல்கிறார்.
பின்னர் தனது மகளுக்கு உடனடியாக வெளிநாட்டு மாப்பிள்ளையை பேசி முடித்து திருமண ஏற்பாடுகளை செய்ய, நடராஜன் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பஞ்சாயத்து பேச, பலனளிக்காமல் இருவரும் பிரிகிறார்கள்.
அதன்பிறகு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் வருகிறது. நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு நடராஜனை, நிற்கச் சொல்லி அவரது தங்கையின் கனவர் மூர்த்தி வற்புறுத்துகிறார். ஏற்கனவே கட்சி, விசுவாசம் என தந்தையின் வாழ்க்கை வீனாப்போனதுதான் மிச்சம். இதில் எனக்கு எதுக்கு அரசியல் என ஒதுங்குகிறார் விஜயகுமார்.
அதன்பிறகு என்னானது ? அவரது காதலி என்ன ஆனார் ? தேர்தலில் போட்டியிட்டாரா ? இல்லையா என்பது மீதிக்கதை..
கிராமப்புற உள்ளாட்சித் தேர்தலில், கட்சி செல்வாக்கைவிட தனிமனித செல்வாக்கு முக்கியம். வேட்பாளர்களுக்கு தனிச் சின்னம் தான் ஒதுக்கப்படும். வெற்றி, தோல்வி என்பது குடும்பத்தின் கௌரவமாக கருதப்படும் என்பதையும், உள்ளாட்சி தேர்தலில் நடைபெறும் சம்பவங்களையும் எதார்த்தமாக, கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் தமிழ்.
இயக்குநர் ரஞ்சித் படங்களைப் போல் ஆங்காங்கே தலித் அரசியலையும் பேசியிருக்கிறார். பாடல்கள் ரசிக்கும்படியாக உள்ளது.
படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.