பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை தென்மாவட்டங்களில் பெரும்பாலானோர் ஒரு சாதிய தலைவராக கொண்டாடி வருகின்றனர். சாதி பற்றி பேசுவது எனது இரத்தத்தை உறிஞ்சி குடிப்பதற்கு சமம் என்று முத்துராமலிங்கத் தேவரே கூறியிருக்கிறார். ஆங்கிலேயர் காலத்தில் வாய்ப்பூட்டுச் சட்டம் இவருக்கும், பாலகங்காதர திலகருக்கும் தான் போடப்பட்டது. இவர் ஒரு விடுதலை போராட்ட வீரர். இவர் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் பிறந்து வளர்ந்தாலும் பெரும்பாலான நாட்கள் மதுரை திருப்பரங்குன்றம் அருகே பசுமலையில்தான் இருந்திருக்கிறார். அவர் மறைந்ததும் பசுமலையில் தான்.
பசுமலையில் தேவர் உயிர் பிரிந்த போது அவர் வளர்த்த இரண்டு மயில்களும் இறந்துள்ளது. இவரது பிறந்த நாளிலே அவரது உயிர் பிரிந்தது. இவர் தீவிர முருக பக்தர். உடல் பரிசோதனைக்கு மருத்துவரை தேவர் சந்தித்தபோது ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டால் நீண்டநாள் வாழலாம் என்று கூறியிருக்கிறார். உடனே தேவர் மருத்துவரிடம் எனக்கு முருகன் கொடுத்த ஆயுட்காலத்தை நாம் மாற்ற வேண்டாம். எனது உயிர் எப்போது போகவேண்டுமோ போகட்டும் என்று முருகன் மீதுள்ள ஆன்மீக நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். முதன்முதலில் ஆன்மீக அரசியலை புகுத்தியவர் முத்துராமலிங்கத் தேவர்தான்.
ஒருமுறை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் தனது தாயாரிடம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை அறிமுகம் செய்து வைக்கும்போது உன்னுடைய இரண்டாவது மகன் என்று அறிமுகம் செய்துவைத்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் நான் பிறக்க நேர்ந்தால் முத்துராமலிங்க தேவர் வீட்டில்தான் பிறக்க வேண்டும் என்று சுபாஸ் சந்திரபோஸ் பெருமையோடு பேசியிருக்கிறார். 42 கிராமங்களில் தனக்கு இருந்த நிலங்கள் அனைத்தையும் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கே வழங்கிய தலைவர் முத்துராமலிங்கத் தேவர்.
பாராளுமன்றம், சட்டமன்றம் தேர்தல்களில் ஒரே சமயத்தில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு பிரச்சாரத்திற்குச் செல்லாமலேயே வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். ஆங்கிலப் புலமை பெற்ற சிறந்த பேச்சாளராக ஆங்கிலேயர்களால் அறியப்பட்டவர். தனது வீரதீர பேச்சுகளால் ஆங்கிலேய அரசுக்கு எதிராக விடுதலை வேட்கையை மக்களின் மனதில் ஏற்படுத்தியவர்.
இன்று ஒரு பிரிவினர் தேவரை கொண்டாடுகின்றனர். இன்னொரு பிரிவினர் எதிர்க்கிறார்கள். அவர் ஒரு சாதியவாதி என்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால் ஒருபோதும் தேவர் சாதியம் பேசியதில்லை. பிற சமூகத்தினருக்காக தன்னையே அர்பணித்துக் கொண்டவர்தான் முத்துராமலிங்கத் தேவர். 1979 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் செய்து அவர்களும் இறைவனை வழிபட வேண்டும் என்று புரட்சி செய்தவர் முத்துராமலிங்கத் தேவர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மில்தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடி சிறை வாழ்க்கையை அனுபவித்தவர்.
நாட்டின் விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காகவும், தொழிலாளர்களுக்காகவும் போராடிய விடுதலைப் போராட்ட வீரரை அரசியல் ரீதியாக ஒரு குறிப்பிட்ட சாதிய தலைவராக அடையாளப்படுத்தி தோற்றுவித்துள்ளார்கள். அனைத்து சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக போராடிய தலைவரை ஒரு குறிப்பிட்ட சாதித்தலைவராக அரசியல் காரணங்களுக்காக ஒரு சிலரால் தவறான வரலாறு புனையப்பட்டுள்ளது. சாதி ஒழித்து சாதியம் ஒன்றுபட்டு அனைத்து சமூக மக்களாளும் கொண்டாடப்பட வேண்டிய தலைவர் தான் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
அனைத்து சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக போராடி பல்வேறு சாதனைகளைப் படைத்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை ஒரு குறிப்பிட்ட சாதித்தலைவராக பார்க்காமல் சாதித்த தலைவராக மட்டுமே கொண்டாடப்பட வேண்டும் என்பதே அனைத்து சமூக மக்களும் விரும்புகின்றனர்.
– ராஜாஸ்