பல்லடத்தில் தலைதூக்கும் கூலிப்படையினரின் அட்டூழியம் ! 3 பெண்கள் உட்பட 6 பேர் மீது கொலைவெறி தாக்குதல்
திருப்பூர் மாவட்டம் கோவில்வழி பகுதியை சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கல்லூரி சாலை பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் சூர்யபிரகாஷிற்கும் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று காலை முதல் பெண் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடி கடைசியாக பல்லடத்தை அடுத்த அம்மாபாளையத்தில் சூர்யபிரகாஷ் தங்கியிருந்த வீட்டிற்கு சென்று தேடியுள்ளனர். பின்னர் சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்தில் பெண்ணின் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து பல்லடம் போலீசார் துரிதமாக செயல்பட்டு பெண்ணையும் சூர்யபிரகாஷையும் கண்டுபிடித்து விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் நடந்த இடம் நல்லூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதால் பெண்ணை போலீஸ் பாதுகாப்புடன் நல்லூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காதலுனும் அவரது உறவினர்களும் ஆம்னிவேனில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதனிடையே ஆம்னி வேன் பல்லடத்தை அடுத்த அருள்புரம் அருகே சென்றுகொண்டிருந்த போது பைக் மற்றும் 3 கார்களில் வந்து வழிமறித்து ஆண் பெண்கள் என அனைவர் மீதும் கொடூரமாக கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். பின்னர் வெறி அடங்காமல் காதலனுக்கு பதிலாக அவரது மாமா சதீஷ்குமாரை வேனில் கடத்திச்சென்று தாக்கியுள்ளனர்.
பின்னர் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற பல்லடம் போலீசார் தாக்குதலில் பலத்த காயமடைந்த மனோஜ்குமார், அருணாதேவி, கிருஷ்ணவேணி, துளசிமணி, ஜோதிமணி, மாசிலாமணி ஆகியோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட கள்ளிமேட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இந்த தாக்குதலை பெண் வீட்டாரின் ஏற்பாட்டில் கூலிப்படைக்கு ஏற்பாடு செய்து காதலன் மீது தாக்குதல் நடத்தியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பிரபல அரசியல் கட்சியின் நிர்வாகியான அன்பு ரமேஷ், செல்வகுமார் உள்ளிட்ட 15 திற்கும் மேற்பட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதனிடையே அன்பு ரமேஷ் மீது அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கூலிப்படை கலாச்சாரம் வேறூன்ற விடாமல் தடுத்து நிறுத்தி இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.