டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் – எம்.எல்.ஏ வை வரவேற்கும் பல்லடம் பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிபாளையம் சாலையில் அமைந்துள்ளது 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை. குடியிருப்புக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதியில் அமைந்துள்ள இந்தக் கடையில் பார் வசதி கிடையாது. ஆனால் மது வாங்குபவர்கள் சாலையில் நின்று வெட்டவெளியில் குடித்துவிட்டு கும்மாளம் அடித்துக் கொண்டும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் சாலையில் பெண்கள் நடந்து செல்ல அச்சப்படும் நிலைக்கு தள்ளப்பட்டதால் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பல கட்டமாக புகார் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை மற்றும் சாய்ராஜ் பொதுமக்களுடன் இணைந்து டாஸ்மாக்கை அகற்ற வலியுறுத்தி சத்தியாகிரக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் முதல்கட்டமாக கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் வரும் 8 ஆம் தேதி நடைபெறவுள்ள சத்தியாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்க சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தனிடம் பொதுமக்கள் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அழைப்பின் பேரில் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவிப்பதாக எம்.எல்.ஏ. ஆனந்தன் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தனர்.