தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா : ஆன்லைனில் ஓவியம், கவிதை சொல்லுதல், பேச்சு போட்டி
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் ஊரடங்கு நேரத்தில் குடியரசு தினத்தை வீட்டிலேயே ஓவியம் வரைந்தும், கவிதை சொல்லியும், பேசியும் வீடியோக்களை அனுப்பி பள்ளி நடத்திய ஆன்லைன் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் மாணவர்களுக்கு ஓவியம், கவிதை சொல்லுதல், பேச்சு போட்டி என பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.
கொரோனாவால் பள்ளி மாணவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதை கருத்தில் கொண்டு மாணவர்கள் வீட்டிலேயே ஓவியம் வரைய சொல்லியும், கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களை ஆன்லைன் வழியாக வீடியோவாக அனுப்ப சொல்லி பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் ஸ்ரீதர், செல்வமீனாள், முத்துலெட்சுமி ஆகியோர் அலைபேசி மூலம் மாணவர்களை தொடர்பு கொண்டு ஊக்குவித்தனர்.
மாணவர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே இது போன்ற போட்டிகளில் பங்கேற்க செய்வது அவர்களது உடல்நலம் மற்றும் மனநலத்துக்கு உதவுவது ஆகும். ஓவியம், கவிதை, பேச்சு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி திறந்த பிறகு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாட வகுப்புகளும், பல்வேறு மத்திய, மாநில அரசுகள் நடத்தும் ஆன்லைன் போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க வைப்பதும் ,சதுரங்க பயிற்சிகள் நடைபெற்று வருவதும் ஊரடங்கு காலத்தில் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என்று பெற்றோர்கள் தெரிவித்தனர்.
குடியரசு தினத்தன்று கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் ஈடுபடும் முன் களப்பணியாளராக பணியாற்றும் அரசு மருத்துவமனை செவிலியர்களை பாராட்டும் விதமாக குடியரசு தின கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. காரைக்குடி அரசு மருத்துவமனை முதுநிலை செவிலியர் ராமலெட்சுமி கொடி ஏற்றி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில், கொரோனா நல்ல முறையில் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.முககவசம் கட்டாயம் அணியுங்கள். கொரோனா காரணமாக மாணவர்கள் இல்லாமல் இந்த நிகழ்வு நடைபெறுவது எனக்கு வருத்தமாக உள்ளது. விரைவில் நல்ல முறையில் கொரோனா தொற்று குறைந்து மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என நம்பிக்கை உள்ளது. இந்த பள்ளியில் தேசிய கொடி ஏற்றியது எனக்கு மிகுந்த பெருமையாக உள்ளது என அரசு செவிலியர் பேசினார். ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சாக்லேட் தவிர்த்து கடலை மிட்டாய் இனிப்பு வழங்கப்பட்டது.
இப்பள்ளியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மாணவர்களின் பிறந்த நாள்களுக்கும், சுதந்திர தின விழா, குடியரசு தின விழா என அனைத்து விழாவிற்கும் சாக்லேட் தவிர்த்து கடலை அச்சு மிட்டாய் இனிப்பாக வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.ஆசிரியர்கள் ஸ்ரீதர், கருப்பையா நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
–நமது நிருபர்