முடங்கிய பட்டாசு தொழில்… சாவின் விழிம்பில் பட்டாசு தொழிலாளர்கள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனைத்து பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இப்பட்டாசு ஆலைகளில் நேரடியாக சுமார் 2 லட்சத்துக்கு மேற்பட்டோரும், பட்டாசு உப தொழில்களான அச்சு, போக்குவரத்து உள்ளிட்ட தொழில்களில் 3 லட்சத்துக்கு மேற்பட்டோரும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
பண்டிகையின்போது பட்டாசு வெடிப்பதால் காற்று மற்றும் ஒலி மாசு புகார் தொடர்பாக நீதிமன்றங்களில் தொடரப்படும் வழக்குகள் மற்றும் பட்டாசு விற்பனைக்கு விதிக்கப்படும் தடைகள் காரணமாகவும் இத்தொழில் சரிவை சந்தித்து வருகிறது.
கடந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதால் விற்பனையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன், பட்டாசு விற்பனையின் மிகப்பெரிய சந்தையாகத் திகழும் வட இந்தியாவின் 5 மாநிலங்களில், கடந்த தீபாவளியையொட்டி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதாலும் சிவகாசியில் பட்டாசு தொழில் முடங்கியது.
டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் காற்று மாசின் அளவு குறையவில்லை என்பதால், காற்று மாசு ஏற்படுவதற்கு பட்டாசு வெடிப்பது காரணம் இல்லை என்பது தெரியவந்தது.
அதையடுத்து, டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கு இருந்த தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது.
இந்நிலையில், நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பதற்கும், விற்பதற்கும், வெடிப்பதற்கும் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடரப்பட்டுள்ளதும், அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதும் பட்டாசு உற்பத்தியாளர், விற்பனையாளர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காற்று மாசு ஏற்பட பட்டாசு காரணம் இல்லை என தெரிந்தும், உச்ச நீதிமன்றம் மீண்டும் ஒரு வழக்கை எடுத்துக்கொண்டுள்ளதால் பட்டாசு தொழிலுக்கு மீண்டும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
இவ்வாறு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டால் பட்டாசுத் தொழில் தானாக முடங்கும் நிலையும், பட்டாசு தொழிலைச் சார்ந்துள்ள 106 உப தொழில்களும் முடங்கிப்போகும் நிலையும் உருவாகும் என அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தால் தொழிலைத் தொடர்வது என்றும், பாதகமாக அமைந்தால் தொழிலை விட்டுவிட்டு வேறு வேலைக்குச் செல்வது என்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
மேலும், ‘உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ள இந்த வழக்கின் தீர்ப்பு எப்படி இருந்தாலும் சரி, ஆனால், தாமதமின்றி விசாரணையை முடித்து தீர்ப்பளிக்க வேண்டும்’ என்ற கோரிக்கையையும் அனைத்திந்திய பட்டாசு சங்கங்களின் கூட்டமைப்பு முன்வைத்துள்ளது. இதை வலியுறுத்தி நேற்று முதல் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பட்டாசு ஆலைகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். பட்டாசு தொழிலை நம்பிய பல லட்சம் தொழிலாளர்களை காப்பாற்றுமா மத்திய மாநில அரசுகள்.?