தமிழகம்

வாரிசு இல்லாத வயதானவர்களை கொலை செய்து சொத்தை அபகரிக்கும் கும்பல்

தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக நில அபகரிப்பு புகார்கள் மீதான புகார்களை உடனடியாக விசாரித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வந்த காவல்துறையினர் சமீபகாலமாக காவல் நிலையங்களுக்கு வரும் நில அபகரிப்பு புகார்களை விசாரிக்காமல் கிடப்பில் போட்டிருப்பதாக சில காவலர்கள் கொடுத்த தகவல்கள் நமது குழுவினர் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் நம்மை அதிர்ச்சி அடைய வைத்தது.

மதுரவாயல் காவல் நிலையத்திற்குட்பட்ட நும்பல் பகுதியில் 91 வயதான ஜெயபால் என்ற முதியவர் வசித்து வந்திருக்கிறார். அவருக்கு வாரிசு இல்லாத காரணத்தால் அவரது வீட்டிற்கு அருகில் வசித்து வந்த தம்பிதுரை த/பெ புதியவன் என்பவரை தனக்கு உதவியாளராக தன்னுடன் வைத்திருந்தாராம். இந்நிலையில் தம்பிதுரை ஜெயபாலுக்கு வாரிசு இல்லை என்பதை உணர்ந்து அவரது சொத்தை அபகரிக்க திட்டமிட்டிருக்கிறார்.

தனது திட்டம் நிறைவேற பிரசாத் என்பவரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு போலியாக பத்திரம் தயார் செய்து ஜெயபாலை ஏமாற்றி கையொப்பம் வாங்கினாராம். பின்னர் இந்த போலியாக தயாரித்த பத்திரத்தை கடன்பத்திரமாக மாற்றி அதனை ரத்து செய்து பத்திரப்பதிவு அலுவலரின் உதவியுடன் தம்பிதுரை தனது பெயருக்கு மாற்றி விற்பனை செய்து பணத்தை பெற்றிருக்கிறார். அதன்பிறகு அந்த இடத்தில் இருந்தால் தனக்கு ஆபத்து என்று அந்த வீட்டிலிருந்து காலி செய்து கிருஷ்ணா நகர் மசூதி தெருவில் வசித்து வந்தாராம். சில மாதங்கள் கடந்த நிலையில் ஜெயபாலின் நண்பர் ஜெயபாலை பார்க்க வந்திருக்கிறார். அப்போது உங்களுடைய நிலத்தை தம்பிதுரை உங்களது மகன் என்று கூறி விற்பனை செய்து நிலத்திற்கான முழுத்தொகையையும் பெற்றுக் கொண்டார். அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருவதாக கூறியிருக்கிறார். இதனைக் கேட்ட ஜெயபால் அதிர்ச்சி அடைந்து உடனே தம்பிதுரையிடம் இதுபற்றி கேட்டிருக்கிறார். அதற்கு தம்பிதுரை அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்லை. உங்கள் நண்பர் பொய் சொல்கிறார். அவரை நம்பாதீர்கள் என்று பதில் சொல்லி சமாளித்திருக்கிறார். அதன்பின்னர் ஜெயபாலை வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்து வெளியில் நடமாட விடாமல் செய்திருக்கிறார். பிறகு தன்னுடைய நண்பர்கள் பால்ராஜ், சூர்யபிரகாஷ், சூரி, சுந்தர்ராஜன் அவரது மனைவி ஜமுனா, வெங்கடேஷ் ஆகியோரை கூட்டு சேர்த்து ஜெயபாலை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கிறார். இவர்கள் திட்டத்தை நிறைவேற்ற ஜெயபாலின் வீட்டிற்குள் சென்று அவரது பின்பக்க தலையில் பலமாக தாக்கியிருக்கிறார்கள். அவர் மயங்கி கீழே சரிந்திருக்கிறார். ஆனால் அவரது உயிர் பிரியவில்லை. உடனே வெளியே வந்து அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை நம்ப வைப்பதற்காக அவர் கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதாகவும், அவரை மருத்துவமனையில் சேர்க்க கொண்டு செல்வதாகவும், நாடகமாடி அவரை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று சிகிச்சை அளிக்கச் செய்திருக்கிறார். மருத்துவமனை நிர்வாகத்தை கூட்டு சேர்த்துக் கொண்டு ஜெயபால் நெஞ்சுவலியால் இறந்ததாக ஆவணங்களையும் தயார் செய்திருக்கிறார். ஜெயபால் வசித்த ஐயப்பன்தாங்கல் பகுதியில் உள்ள வீட்டின் முகவரியை கொடுக்காமல் தேனாம்பேட்டை முகவரியை இறப்புச் சான்றிதழில் கொடுத்திருக்கிறார்.

அதன்பின் ஜெயபாலின் உடலை வளசரவாக்கம் மின்மயானத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அங்கு வேலை செய்யும் முனுசாமி, சீனிவாசன், தேவராஜ் ஆகியோர் ஜெயபாலின் உடலில் காயங்கள் இருந்ததால் அவரது உடலை எரிக்க மறுத்திருக்கிறார்கள். உடனே தம்பிதுரை மற்றும் அவரது கூட்டாளிகள் மின்மயான ஊழியர்களுக்கு முப்பதாயிரம் பணத்தைக் கொடுத்து இதில் எந்தப் பிரச்சனையும் வராது. அவரது மகன்தான் தம்பிதுரை என்று பொய்யான தகவலை கொடுத்து ஜெயபாலின் உடலை எரித்து இருக்கிறார்கள்.

தேனாம்பேட்டை வீட்டில் கட்டிலில் இருந்து கீழே விழுந்த ஜெயபாலை ஐயப்பன் தாங்கல் மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டிய அவசியம் என்ன? என்ற சந்தேகம் கூட மருத்துவமனை நிர்வாகத்திற்கு வராதது ஏன்?

தேனாம்பேட்டை முகவரியில் இறந்த ஜெயபாலின் உடனை கண்ணம்மா பேட்டை சுடுகாட்டில் அந்தப்பகுதி நபர்தான் என்று சான்றிதழ் பெற்று சுடுகாட்டில் கொடுத்து அடக்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் வளசரவாக்கம் சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது ஏன்? இதுபோன்ற சந்தேகங்களுக்கு காவல்துறைதான் விசாரித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
இந்த கும்பல் மீது சமூக ஆர்வலர் சங்கர் என்பவர் அண்ணாநகர் துணைஆணையரிடம் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் புகார் கொடுத்திருக்கிறார். ஆனால் இன்னும் இதுசம்பந்தமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

சமூக ஆர்வலர் சங்கர்

மேலும் இதுசம்பந்தமாக நாம் அவரிடம் கேட்டபோது நான் தம்பிதுரைக்கு கடந்த வருடம் எனது கடையை வாடகைக்கு விட்டிருந்தேன். மூன்று மாதம் கடையின் வாடகையை தந்தார். பின்னர் கடையின் வாடகையை கேட்கும் போதெல்லாம் ஏதாவது காரணத்தை சொல்லி காலம் கடத்தி வந்தார். அவர் கொடுத்த முன்பணம் முழுவதும் கழிந்துவிட்ட நிலையில் தற்போது ஒரு வருடத்தை கடந்த நிலையிலும் பணத்தையும் தராமல் கடையையும் காலி செய்யாமல் ஏமாற்றி வருகிறார். நான் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எந்தப் பயனுமில்லை. நேரில் சென்று கேட்டபோது இவருடன் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சூரி, ராஜீ, சுந்தர்ராஜ் போன்ற நூம்பல் பகுதி ரவுடிகளை தன்னுடன் வைத்துக் கொண்டு வாடகையும் தரமுடியாது, கடையையும் காலி செய்ய முடியாது. மேலும் இங்கு வந்தால் உன்னை கொலை செய்து மொத்த இடத்தையும் எடுத்துக் கொள்வோம். ஓடிப்போ என்று என்னை விரட்டுகிறார்கள். இதேபோல் பலமுறை என்னையும், என் மகனையும் கொலை செய்ய முயற்சித்தார்கள். ஆனால் அவர்களிடம் சிக்காமல் தப்பித்து விட்டோம். மேலும் அந்தப் பகுதியில் இவர்களைப் பற்றி விசாரிக்கையில் இந்தக் கும்பல் இதேபோல் பல இடங்களில் வாடகைக்கு குடி போவது போல் சென்று வாரிசில்லாத வசதியான அப்பாவிகளை கொலை செய்து அவர்களின் இடத்தை போலியான ஆவணங்களை தயார் செய்து அபகரிக்கும் கும்பல் என்று தெரியவந்தது.

AC ஜான்சுந்தர்

ஜெயபால் என்பவரை இதே பாணியில் கொலை செய்து போலி ஆவணங்கள் தயார் செய்து வீட்டில் இருந்த நகை, பணம் மற்றும் சொத்துக்களை அபகரித்துவிட்டு நிம்மதியாக வெளியே சுற்றி வருகிறார்கள். போலி பத்திரம் மற்றும் போலி ஓட்டுநர் உரிமம் என அரசு ஆவணங்களை போலியாக தயாரிக்கும் ஒரு கும்பலை வைத்து இந்த மாதிரி சதிச்செயல்களில் ஈடுபடுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது. இவர்கள் மீது பலமுறை மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவித பயனும் இல்லை. அதனால் தான் எனது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு வழங்கி கொலை முயற்சியில் ஈடுபடும் இந்தக் கும்பல் மீது நடவடிக்கை எடுக்குமாறு அண்ணாநகர் துணைஆணயர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்களில் புகார் கொடுத்து இருக்கிறேன் என்று நம்மிடம் கூறினார்.

காவல்துறை உயர் அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரித்து நடவடிக்கை எடுத்து வாரிசு இல்லாத வயதானவர்களை பாதுகாத்து சமூக ஆர்வலர் சங்கர் போன்றோரின் போராட்டத்திற்கும் நல்ல முடிவைத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் நாமும் காத்திருப்போம்.

-குண்டூசி.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button