திருமணத்திற்கு முன் மாமியாருடன் ஒத்திகை ! எல்.ஜி.எம் விமர்சனம்
தோணி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சாக்ஷி தோனி தயாரிப்பில், ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில், ஹரிஸ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்ட நடிகர், நடிகைகள் நடிப்பில் வெளிவந்துள்ள படம் “எல்.ஜி.எம்”.
கதைப்படி… இரண்டு ஆண்டுகளாக கவுதம் ( ஹரிஸ் கல்யாண் ) , மீரா ( இவானா ) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள். இருவர் வீட்டிலும் பேசி பெற்றோரை சம்மதிக்க வைத்து, இரு வீட்டாரும் முறைப்படி சந்திக்கின்றனர். அப்போது மீரா, கவுதமிடம் திருமணத்திற்கு பிறகு நாம் உனது அம்மாவுடன் இருக்கப் போகிறோமா ? தனியாக இருக்கப் போகிறோமா ? எனக் கேட்க கவுதம் தனது தாயிடன் தான் ( நதியா ) இருக்கப் போகிறோம் என்றதும், ஒருவரையொருவர் பழகாமல் எப்படி நான் உனது அம்மாவுடன் ஒரே வீட்டில் வசிக்க முடியும் ? எனக் கூறி இந்த திருமணத்தில் இஸ்டம் இல்லை என்கிறாள்.
பின்னர் உனது அம்மாவுடன் பழகி நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ள இரண்டு குடும்பத்தினரும் ஒரு ட்ரிப் போகலாம் என ஐடியாவும் கொடுக்கிறார். கவுதமும் சம்மதித்து தனது அம்மாவுடன் ட்ரிப் செல்ல சம்மதிக்கிறான். ஆனால் இந்த ட்ரிப் செல்லும் நோக்கம் கவுதம் அம்மாவுக்கு தெரிந்ததும் எல்லாம் தலைகீழாக மாறுகிறது.
அதன்பிறகு என்னானது ? அம்மாவை சம்மதிக்க வைத்து மீராவுடன் கவுதம் இணைந்தானா ? இல்லையா என்பது மீதிக்கதை…
வருங்கால மாமியாரை புரிந்துகொள்ள திருமணத்திற்கு முன் பழக வேண்டும் என்கிற மருமகளின் ஐடியா நல்லதாகத் தெரிந்தாலும், படத்தின் முழு திரைக்கதையும் சீரியல் வடிவில் நகர்வதால் சுவாரஸ்யம் இல்லாமல் நகர்கிறது. யோகி பாபு காட்சிகளில் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார்.
தோணி முதன் முதலில் தயாரித்திருக்கும் திரைப்படம் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்புடன் படம் பார்க்கச் சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே.. தோணி போன்ற பிரபலங்கள் திரைத்துறையில் அடியெடுத்து வைக்கும் போது, இந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த இயக்குனர்களிடம் கதைகேட்டு நல்ல கதையைத் தேர்வு செய்து படத்தை தயாரித்திருக்கலாம் என்பதே பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கிறது.
சினிமா துறையில் அனுபவம் வாய்ந்த சத்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டால் படம் மிகப்பெரிய வெற்றிபெறும் என எதிர்பார்த்து சென்றவர்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.