அரசியல்தமிழகம்

ரிசர்வ் தொகுதிகளில் திமுக தோல்விக்கான காரணங்களை அலசிய ஐபேக்..!

தமிழகத்தில் வரப்போகிற 2021 சட்டசபை தேர்தலில் எப்படியும் அதிக தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு ஆளும் கட்சியான அதிமுகவும், 10 ஆண்டுகளாக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியாகவே இருக்கிற திமுகவும் பலகட்ட பரபரப்புகளை செய்து வருகிறது.


அதன் ஒரு பகுதியாக திமுக சத்தமில்லாமல் பிரசார பணிகளை தொடங்கி விட்டது. வேளான் மசோதாவை எதிர்த்து பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள். இப்போது தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் மாநிலம் முழுதும் ஆன்லைன் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.

ஒரு பக்கம் திமுக பிரசார வியூகங்களை வகுத்து வந்தாலும் இன்னொரு பக்கம் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்வு செய்யும் பணிகளையும் முடித்திருக்கிறது. இதற்காக நியமிக்கப்பட்ட ஐபேக் டீம் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் 3 பேர்களின் பெயர்களை பட்டியலிட்டு அவர்களின் பிளஸ் மைனஸ் என முழு ஜாதகத்தையும் திமுக தலைமையிடம் வழங்கியிருக்கிறது.

ஐபேக் டீம் கொடுத்துள்ள பட்டியலில் இடம் பெற்றவர்கள் தவிர புதிய வேட்பாளர்கள் இடம் பிடிப்பது குதிரை கொம்புதான்.

அதேநேரம், திமுகவில் எப்போதும் தலைதூக்கும் ஜாதி பாசம் இந்தமுறையும் தன் வேலையை காட்டினால் ஜெயிக்கிற தொகுதிகளை கூட இழக்க வேண்டி வரும் என மாநிலம் முழுதும் பல இடங்களில் இப்போதே மெல்ல குரல் எழும்ப ஆரம்த்துள்ளது.
ஒரு சில இடங்களில் ஜாதி பார்க்கும் நிர்வாகிகள் குறித்து தலைமையிடம் புகார்களும் குவிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அறிவாலயம் வந்த கள்ளக்குறிச்சி திமுகவினர் திடீரென அறிவாலயம் வாசலில் திமுக தலைவர் ஸ்டாலின் வரும் நேரத்தில் உதயசூரியன் ஒழிக’ என கோஷம்போட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த கோஷம் போட்டபிறகுதான் அதன் அர்த்தம் தெரிந்து அதிர்ந்து போய் கோஷத்தை நிறுத்தினார்கள். விஷயம் இதுதான் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் பெயர் உதயசூரியன் அவர் அங்குள்ள திமுக நிர்வாகிகளை மதிக்காமல் அந்த தொகுதியில் உள்ள அதிமுக எம்எல்ஏ குமரவேலுடன் கைகோர்த்துக் கொண்டு உள்ளடி வேலைகள் செய்து வருவதாக புகார் சொல்ல வந்தவர்கள் உணர்ச்சி வேகத்தில் உதயசூரியன் ஒழிக கோஷம்போட… பின்னர்தான் கட்சியின் சின்னமும் உதயசூரியன் என்பது உறைத்திருக்கிறது…

பின்னர் தலையில் அடித்து கோஷத்துக்கு மன்னிப்பு கேட்டு விட்டு உதயசூரியன் மீது புகாரும் அளித்து விட்டு சென்றிருக்கிறார்கள். இது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். இதே நிலைதான் மாநிலம் முழுதும் இருக்கிறது. பல இடங்களில் அதிமுகவினரோடு கைகோர்த்து கொண்டு திமுக நிர்வாகிகள் செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இப்போது பலமாக எழுந்துள்ளது.

அதோடு, கடந்த முறை ஜெயிக்க வேண்டிய பல தொகுதிகளில் தோற்றுப்போனதற்கும் இந்த உள்ளடி வேலைகளும், ஜாதி பாசங்களும்தான் காரணம் என பட்டியல் இடுகிறார்கள்.

தமிழக சட்டமன்றத் தொகுதிகளில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 44 ரிசர்வ் தொகுதிகளாக உள்ளது. 2 தொகுதிகள் ரிசர்வ் இனப் பழங்குடியினருக்கானது.
இந்த ரிசர்வ் தொகுதிகளில் பெரும்பாலானவை திமுக சுலபத்தில் ஜெயிக்கக்கூடிய தொகுதிகளாக உள்ளன. அங்குள்ள வாக்குவங்கியின் நிலவரப்படி உண்மையான ரிசர்வ் இன வேட்பாளர்களை இனம் கண்டு நிறுத்தினால் வெற்றி நிச்சயம் என்றாலும் ஜாதி பாசத்தால் பல தொகுதிகளில் கலப்பு மணம் செய்தவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி ஜெயிக்க வேண்டிய தொகுதிகளை கடந்த தேர்தலில் கோட்டை விட்டிருக்கிறது திமுக என குற்றம்சாட்டுகிறார்கள் திமுகவின் முக்கிய நிர்வாகிகள்.

ஆனால் அதிமுகவை பொறுத்தவரை இதுபோன்ற ரிசர்வ் தொகுதிகளில் தனி கவனம் செலுத்துகிறார்கள். வேட்பாளர் தேர்விலும் அவருக்கான தேர்தல் செலவுகள் செய்வதிலும் அதிமுக தனி கவனம் செலுத்தி எல்லா செலவுகளையும் கட்சியே ஏற்றுக் கொண்டு சத்தமில்லாமல் கோஷ்டி பூசல்களை களைந்து விட்டு வெற்றி பெற்று வருகிறார்கள். இந்த நடைமுறையை ஏனோ திமுக பின்பற்றுவதில்லை.
இதற்கு உதாரணமாக…

கடந்த 2011 தேர்தலில் 46 ரிசர்வ் தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி 43 இடங்களில் அபார வெற்றி பெற்றிருந்தது.
ஆனால், தி.மு.கவில் திருவிடைமருதூர் தொகுதியில் கோவி.செழியன், கூடலூர் தொகுதியில் திராவிடமணி என இரண்டு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

அதே போல கடந்த 2016 தேர்தலில் அதிமுக 32 இடங்களில் வெற்றி பெற்றது. தி.மு.க.வால் 14 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.
அதிமுகவை விட திமுகவில்தான் ஆதிதிராவிடர் நல அணி ரொம்ப வலிமையானது. திமுகவின் தலைமையில் உள்ள பல முக்கிய பதவிகள் தொடங்கி அடிமட்ட நிர்வாகிகள் வரை பலரும் ரிசர்வ் மக்களாக இருந்தாலும் ஏனோ வேட்பாளர் தேர்வில் மட்டும் திமுக கோட்டை விட்டு ஜெயிக்க வேண்டிய தொகுதிகளை அதிமுக வசம் தூக்கிக் கொடுத்து வருகிறது.

கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் ரிசர்வ் தொகுதிகளில் உண்மையான தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து நிறுத்தியிருந்தால் ஈசியாக ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும். ஆட்சி கை நழுவி போனதற்கு மிக முக்கிய காரணமும் இந்த ரிசர்வ் தொகுதிகள் பறிபோனதுதான். இதை திமுகவின் சீனியர்கள் பலரும் வேதனையோடு பகிர்ந்து கொண்டாலும் மூத்த மிக மூத்த சீனியர்கள் சிலரின் ஜாதி பாசதத்தால்தான் பல இடங்களில் தோல்விகள் ஏற்பட்டது என்பதையும் மறைக்காமல் ரகசியமாக புலம்பி வருகிறார்கள் பல திமுக தொண்டர்கள்.

அதிமுகவை விட திமுகவுக்கு ரிசர்வ் தொகுதிகளில் அதிக செல்வாக்கு இருந்தும் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்ற சர்வேவை இந்தமுறை ஐபேக் டீம் எடுத்திருக்கிறார்கள். அதில் கிடைத்த ரகம் அதிர்ச்சி… தொகுதி முழுக்க அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விட திமுக வாக்காளர்களும் அதிகம், ஆதரவாளர்களும் அதிகம். கட்சியினரும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறவர்கள். இருந்தும் தோல்வி அடைந்தற்கு காரணம் தலைமையோடு நெருக்கமாக இருக்கும் மூத்தவர்களின் ஜாதி பாசம் என்கிற அதிர்ச்சி தான் அது.

ரிசர்வ் தொகுதியில் எங்கே ஜாதிபாசம் வருகிறது… ரிசர்வ் தொகுதி என்றாலே அங்கே அவர்களை தவிர வேறுயாரும் போட்டியிட முடியாதே அப்படியிருக்கும்போது அங்கே எங்கே ஜாதி பாசம் வரும் என நினைக்கிறவர்களுக்கு கலப்பு மணம் என்ற ஒரு சத்தமில்லாத சாணக்கியத்தனத்தால் பரிதாபமாக பல தொகுதிகளை திமுக கை நழுவ விட்டுள்ளது.

அதிமுகவில் ரிசர்வ் தொகுதியில் ஒரு வேட்பாளரை தேர்வு செய்தால் அவரிடம் பண வசதி இல்லாமல் விட்டாலும் கட்சி முழு செலவையும் ஏற்றுக் கொள்ளும், அதோடு, அதை கண்காணிக்க அந்த ரிசர்வ் தொகுதியின் பொறுப்பாளராக அங்கே மாற்று சமூகத்தினரை நியமித்து தேர்தல் வேலை பார்ப்பார்கள். வேட்பாளர் தோற்றால் பதவி போகும்… ஜெயித்தால் ஆக்டிங் எம்எல்ஏவாக தொகுதியில் வலம் வரலாம். இப்படி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்து வருகிறது அதிமுக.

ஆனால், திமுகவில் அப்படியெல்லாம் இல்லை. ரிசர்வ் தொகுதிகளிலும் உண்மையான ரிசர்வ் மக்களுக்கு சீட் வழங்காமல் கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு குறிப்பாக கணவர் வேறு சமூகமாக இருப்பார், மனைவி ரிசர்வ் லிஸ்ட்டில் இருப்பார். மூத்த நிர்வாகிகளை சரி செய்து மனைவிக்கு சீட் வாங்கி தருவார்கள். வெற்றி பெற்றால் கணவர்களே ஆக்டிங் எம்எல்ஏக்களாக வலம் வருவார்கள். அதிலும் குறிப்பாக ரிசர்வ் தொகுதியில் நின்று ஜெயித்த மனைவியின் சமூகத்தை விட தான் சார்ந்த சமூகத்து மக்களுக்குதான் அந்த ஆக்டிங் எம்எல்ஏக்கள் அதிக சலுகைகள் தருவார்கள். இதன் காரணமாகத்தான் பல தொகுதிகளில் திமுக தோல்வி அடைந்தது.
இதற்கும் உதாரணங்கள் உண்டு…

திமுகவின் பொதுச் செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிற திமுகவின் மிக மூத்த தலைவர் துரைமுருகனின் வேலூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.குப்பம் தனி தொகுதியில் 2016-ல் தி.மு.க. வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் ஒரு பெண். பெயர் அமுலு. இவர் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். இவர் குடியாத்தம் ஒன்றிய செயலாளராக உள்ள கல்லூர் ரவியின் தம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கல்லூர் ரவி வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். வேட்பாளராக அம்லு பெயர் அறிவிக்கப்பட்டதும் “அமுலுவைத் தவிர வேறு யாருக்கு வேண்டுமானாலும் சீட் தாருங்கள்’ என அந்த தொகுதியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தலைமைக்கு கோரிக்கை வைத்து கடும் எதிர்ப்பை காட்டியபோதும் மாவட்ட தலைமையும் கண்டு கொள்ளவில்லை, கட்சி தலைமையும் சரியாக அதை கவனத்தில் எடுக்கவில்லை.

விளைவு ஜெயிக்க வேண்டிய அந்த தொகுதியில் திமுக படு தோல்வி அடைந்தது. அதேபோல் முன்பு வேலூர் மாவட்டமாக இப்போது பிரிக்கப்பட்ட இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரிசர்வ் தொகுதியிலும் இதேபோல ஒரு கூத்து அரங்கேறியது.

முதலில் திமுக வேட்பாளராக தலைமையால் அறிவிக்கப்பட்டவர் பவானி வடிவேல் என்கிற பெண். பவானி ரிசர்வ் பிரிவை சேர்ந்தவர்தான். ஆனாலும், கே.வி.குப்பம் போலவே இங்கேயும் பவானியின் கணவர் வடிவேலு வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். இதுவும் கலப்பு மணம்தான். இங்கேயும் வேட்பாளராக பவானி வடிவேல் பெயர் அறிவிக்கப்பட்டதும் தொகுதி முழுதும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

காரணம் பவானி வடிவேலுவின் கணவர் வடிவேலுவை சுற்றி இருக்கும் நபர்கள் எல்லாரும் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள்தானாம்.
அதன் காரணமாக தொகுதியில் உள்ள திமுக நிர்வாகிகள் பலரும் வேட்பாளரை மாற்றாவிட்டால் தேர்தல் வேலை செய்ய மாட்டோம் என போர்க் கொடி தூக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதே தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ தமிழ்செல்வன், ராஜ்குமார், வழக்கறிஞர் அணியின் மாவட்ட துணைத்தலைவர் எழில்இனியன் உட்பட பலரும் சீட் கேட்டிருந்தார்கள்.

இதில் தொகுதி முழுதும் எந்த கோஷ்டி பூசலிலும் இதுவரை சிக்காமலும், நகர நிர்வாகிகளிடமும், மாவட்ட நிர்வாகிகளிடமும் நன்கு அறிமுகமான வழக்கறிஞர் எழில்இனியன் பலமுறை சீட் கேட்டும் ஏனோ வழங்கப்படவில்லை.

அதேநேரம் மாவட்டத்தின் ஆதரவுடன் சீட் கிடைத்த பவானிக்கு எதிர்ப்பு ஏற்பட்டதும் வேறு வழியின்றி வேட்பாளர் மாற்றபட்டார். அதிலும் தகுதிவாய்ந்த வேட்பாளரை போடாமல் தொகுதி நிர்வாகிகளிடம் ஆதரவே இல்லாத ராஜ்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் வெற்றி பெற வேண்டிய அரக்கோணம் தொகுதியில் திமுக தோல்வியை சந்தித்தது.

இந்தமுறை ஐபேக் டீம் மாநிலம் முழுதும் எடுத்த சர்வேயில் திமுக தோல்விக்கான உண்மையான காரணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த முறை வேட்பாளர் தேர்வில் முக்கியமான சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம். குறிப்பாக ரிசர்வ் தொகுதியில் அந்த தொகுதியை சேர்ந்தவர்தான் வேட்பாளர், கோஷ்டி பூசல் இல்லாமல் இருக்க வேண்டும். செலவு செய்யும் தகுதி இருக்க வேண்டும். தொகுதியில் பரிச்சயமானவராக இருக்க வேண்டும். குறிப்பாக படித்திருக்க வேண்டும் இப்படி பல விஷயங்களை கவனித்து வேட்டாளரை தேர்வு செய்ய பரிந்துரை செய்திருக்கிறது ஐபேக் டீம்.

காந்தி, மாவட்டச் செயலாளர்


அதேபோல புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை ரிசர்வ் தொகுதியில், மக்களிடமோ கட்சியினரிடமோ அறிமுகமே இல்லாத டாக்டர் அன்பரசனுக்கு சீட் கிடைத்தது. ஆனால், அதே தொகுதியில் மக்களிடம் நன்கு பரிச்சயமானவரும் பாரம்பரியமான தி.மு.க. குடும்பத்தவருமான கீரை தமிழ்ராஜா சீட் கேட்டும் கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே அந்த தொகுதியில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.

வேட்பாளர் தேர்வில் தொகுதிக்கு சம்பந்தமேயில்லாதவர்களுக்கு சீட் தரும்போது, அங்கு ஏற்கனவே கட்சிக்காக உழைத்த ரிசர்வ் இனத்தவர் கடும் அதிருப்தி அடைகிறார்கள். குறிப்பாக தகுதியாக இருந்தும் சீட் கேட்டு கிடைக்காத நிர்வாகிகள் மொத்தமாக அப்செட் ஆவதால் தேர்தல் வேலைகளில் சுணக்கம் ஏற்படுகிறது.

மாவட்ட செயலாளர்கள் பலரும் ஜாதி பாசத்தால் ரிசர்வ் தொகுதிகளில் ரிசர்வ் மக்களுக்கு பெரிய ஆதரவு தராததும் ரிசர்வ் தொகுதிகளில் திமுக தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது.

இந்தமுறை மாவட்டம் சிபாரிசு இருந்தாலும் தகுதியிருந்தால் மட்டுமே சீட் கிடைக்குமாம். கடந்தமுறை சீட் கேட்டு கிடைக்காத பலருக்கு இந்தமுறை கண்டிப்பாக சீட் கிடைக்கும் என கூறப்படுகிறது… அந்தவகையில் கந்தர்வகோட்டையில் மிக பாரம்பரிய திமுக குடும்பமான கீரை தமிழ்ராஜாவுக்கு இந்தமுறை சீட் கிடைக்க வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

அதே போல இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் அந்த மாவட்ட வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளராக இருக்கும் எழில் இனியனுக்கு இந்த முறை கண்டிப்பாக சீட் கிடைக்கும் என தெரிகிறது. அதே தொகுதியை சேர்ந்தவர் என்பதும் நன்கு படித்தவர் செலவு செய்வதற்கு தகுதியானவர் எனபதும் எழில் இனியனின் கூடுதல் தகுதிகள். அதோடு இவர் சினிமா தயாரிப்பாளராகவும் இருப்பது கூடுதல் பலம் சேர்க்கிறது. கோஷ்டி பூசலில் சிக்காமல் எல்லா மட்ட நிர்வாகிகள், கட்சியினரிடம் நல்ல செல்வாக்கை வைத்திருப்பதால் இந்த முறை அரக்கோணம் தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு அதிகமாம்.

எது எப்படியோ ரிசர்வ் தொகுதிகளில் தகுதி வாய்ந்தவர்களுக்கு திமுகவில் சீட் வழங்கினால் வெற்றி உறுதி. இதை கருத்தில் எடுக்குமா கட்சித் தலைமை!

கோடங்கி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button