மருத்துவமனைக்கு அருகிலேயே கொட்டப்படும் மருத்துவ கழிவுகள்..! : அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை, ராஜீவ் காந்தி சாலை தரமணியில், CPT எனும் மத்திய தொழில்நுட்பக் கல்லூரி (Central Polytechnic college) VHS (The Voluntary Health Services) எனும் புகழ்பெற்ற மருத்துவமனை ஆகியவை அருகருகே அமைந்துள்ளன.
இதில், மத்திய தொழில்நுட்பக் கல்லூரியின் நுழைவு வாயிலின் அருகில் பிரிக்கப்பட்ட ஊசி உறைகள், பயன்படுத்தப்பட்ட ஆன்டிபயாட்டிக் மற்றும் பிற மருந்துகளின் அட்டைப் பெட்டிகள், நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சிறுநீரகக் குழாய்களின் உறைகள், பயன்படுத்தப்பட்ட கையுறைகள் என பல்வேறு வகையான மருத்துவக் குப்பைகள் அதிக அளவில் கொட்டிவைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் மருத்துவமனைகளில் `பச்சை’ நிற கவர்களில் சேகரிக்கப்படும் குப்பைகள், இங்கு பிரிக்கப்படாமல் கட்டியபடியே சிதறிக்கிடந்தன.
CPT-யில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் சர்வ சாதாரணமாக இதைக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். மதிய உணவு இடைவேளையில் இந்தக் குப்பையின் மிக அருகிலேயே உள்ள பெட்டிக்கடையில் சில மாணவர்கள் மதிய உணவையும், திண்பண்டங்களையும் வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
இப்படி சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்கும் இது போன்ற குவிக்கப்பட்ட குப்பைகளிலிருந்து அதிக அளவு துர்நாற்றம் வீசிக்கொண்டு உள்ளது.
இது குறித்து அருகில் கடை வைத்துள்ள சிலரிடம் கேட்டபோது, “யாரு வந்து இங்க கொட்டறாங்கன்னு தெரியல. நைட் ஆனா வந்து கொட்டிட்டுப் போயிடறாங்க. யாருகிட்ட போய் புகார் சொல்லறதுன்னே தெரியல” என்றனர்.
மேலும் இங்கு கொட்டப்படும் குப்பைகளை யாரோ தீ வைத்து கொளுத்தி விடுகிறார்கள். அதனால் பாதி எரிந்தும் எரியாமலும் எப்போது பார்த்தாலும் ஒருவித துர்நாற்றம் வந்துகொண்டே இருக்கிறது என்றனர்.
VHS மருத்துவமனையில் சுற்றுச்சுவர் ஓரமாக கொட்டப்பட்டுள்ள இந்தக் குப்பைகள் குறித்து, அந்த மருத்துவமனையின் செயல் அதிகாரி விஜயலட்சுமி கூறுகையில், நூறு சதவிகிதம் எங்களுடைய வேஸ்ட்டாக இருக்க வாய்ப்பு இல்லை. நாங்கள் முறைப்படி ஒரு நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து, தினமும் காலையில் எங்களுடைய மருத்துவக் கழிவுகளை அவர்களிடம் கொடுத்து விடுகிறோம். அதற்கான ரசீது எங்களிடம் உள்ளது" என்கிறார். மேலும் இது குறித்து மருத்துவமனையின் இயக்குநர் யுவராஜ் குப்தா கூறுகையில்,
அது எங்கள் குப்பையாக இருக்க வாய்ப்பு இல்லை. எங்கள் மருத்துவமனையில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளையும் இது போன்ற குப்பைகளையும் அந்தந்த சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நாங்கள் வழங்கி விடுகிறோம். மருத்துவமனை வளாகத்திற்குள் எங்களுடைய biowaste management நூறு சதவிகிதம் முறையாக கடைபிடிக்கப்படுகிறது. எங்களிடம் இருந்து எடுத்துச் செல்லும் நிறுவனங்கள், கேட்டுக்கு வெளியே என்ன செய்கிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்.
பொதுவழித்தடமாகவும், மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாகவும் இருக்கும் இடத்தில் குவிக்கப்படும் குப்பைகளை அகற்ற மருத்துவமனையோ அல்லது மாநகராட்சி ஒப்பந்த நிறுவனமோ முன் வர வேண்டும் என்பதே அப்பகுதியில் உள்ள மக்களின் கோரிக்கையாக உள்ளது.