பல்லடத்தில் திடீர் எரிமலை ! பதற்றத்தில் பொதுமக்கள் !
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அதிகாலையில் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 கிலோ மீட்டர் அளவிற்கு தெரியுமளவு திடீரென கரும்புகை தெரிந்ததை கண்டு பொதுமக்கள் பதற்றமடைந்தனர். பல்லடத்தை அடுத்த பெரும்பாளி பகுதியில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகே நகர்புற வாழ்விட மேம்பாட்டு திட்ட அடுக்கு மாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு மிக அருகே தனியாருக்கு சொந்தமான பழைய பிளாஸ்டிக் குடோன் உள்ளது. மேலும் அருகே கட்டிட தொழிலாளிகள் தங்க தற்காலிக குடியிருப்பும் உள்ளது.
இந்நிலையில் காலையில் திடீரென பிளாஸ்டிக் குடோனில் இருந்து புகை மூட்டத்துடன் மளமளவென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. மேலும் நேரம் ஆக ஆக கரும்புகை விண்ணை தொடும் அளவிற்கு புகை மண்டலமாக காட்சி அளித்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பற்றிய தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். மேலும் அருகில் கழிவு பஞ்சு குடோன் இருந்தது.
இந்நிலையில் பற்றி எரிந்த கரும்புகை பல மைல் தூரத்திற்கு காற்று மாசு ஏற்படுத்தியது. மேற்படி பழைய பிளாஸ்டிக் குடோன் முறையாக அனுமதி வாங்கி செயல்படுகிறதா? அவ்வாறு செயல்பட்டால் குடியிருப்பு மற்றும் உயர் தொழில் நுட்ப நெசவுப்பூங்கா அமைந்துள்ள பகுதியில் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது? பிளாஸ்டிக் ஒழிப்பில் அரசு முனைப்பு காட்டி வரும் நிலையில் இது போன்று ஆபத்தான முறையில் செயல்படும் குடோன் உரிமையாளர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கை.
மேலும் இது போன்று எரிமலைகள் பல்லடத்தில் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதால் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறக்கத்தை கலைத்து சுறுசுறுப்புடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.