அரசியல்தமிழகம்

சாலை போடுவதிலும் மழை நீர் வடிகால் அமைப்பதிலும் பல கோடி ஊழல்! :அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன்

மழை காலத்தையொட்டி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலைகள் போட்டதில் பலகோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், இந்த முறைகேட்டில் அமைச்சர் வேலுமணிக்குத் தொடர்பு இருப்பதாகவும் ஆதாரங்களை வெளியிட்டு, ஆட்சியாளர்களை அதிரச்செய்துள்ளது அறப்போர் இயக்கம்.
இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் வரும் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், மழைக்காலத்தை முன்னிட்டு, சாலைகளைச் சீரமைக்கும் பணிகளுக்காக 740 கோடி ரூபாய் மதிப்பளவுக்கு டெண்டர்கள் விடப்பட்டன. இந்த டெண்டர்கள் விடப்பட்டதில் பலகோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் டெண்டர் வெளியிடப்பட்டன. இதற்கான போட்டியில் குறிப்பிட்ட மூன்று அல்லது நான்கு நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றிருப்பதுடன், அனைத்து டெண்டர்களும் அந்த நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. இப்படிக் குறிப்பட்ட நபர்களுக்கு மட்டுமே சாலைகள் அமைப்பதற்கான டெண்டர்கள் வழங்கப்பட்டிருப்பது, ஒரே டெண்டரை இரண்டு நிறுவனங்கள் பிரித்துக் கொள்வது என இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
இதுமுற்றிலும் டெண்டர் விதிமுறைச் சட்டங்களுக்கு எதிரானது. இப்படியான முறைகேடுகள், சம்பந்தப்பட்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் தொடங்கி, உயர் அதிகாரிகள் வரையிலான பலரின் ஆதரவு இல்லாமல் நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை. மிகத்தெளிவாகக் கூறவேண்டும் என்றால், துருவாசலு, ஆர்.வி.எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் மற்றும் மேனகா அண்ட் கோ ஆகிய நிறுவனங்கள், இரண்டு டெண்டர்களில் போட்டியிடுகின்றன. முதல் டெண்டரை ஆர்.வி.எஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் எடுக்கிறது. இரண்டாவது டெண்டரை துருவாசலு மற்றும் மேனகா அண்ட் கோ என்ற இரண்டு நிறுவனங்களும் ஒரேவிலையை நிர்ணயித்த நிலையில், இறுதியில் இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே டெண்டரை பிரித்துக் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இதேபோன்று, சுப்பிரமணி, சசி கன்ஸ்ட்ரக்‌ஷன், டி.ஜே. ஆறுமுகம் ஆகிய மூன்று நிறுவனங்கள் முறையே மூன்று டெண்டர்களில் பங்கேற்றன. முதல் டெண்டரில் சுப்பிரமணி மற்றும் சசி கன்ஸ்ட்ரக்‌ஷன் என்ற நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இவற்றில் முதல் டெண்டரை சுப்பிரமணி நிறுவனம் எடுக்கிறது. அதேபோன்று, மற்றொரு டெண்டரில் சசி மற்றும் டி.ஜே. ஆறுமுகம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் பங்கேற்று, அந்த டெண்டர் சசி கன்ஸ்ட்ரக்‌ஷனுக்குத் தரப்பட்டுள்ளது. மற்றொரு டெண்டரை சுப்பிரமணி மற்றும் டி.ஜே.ஆறுமுகம் ஆகிய இரு நிறுவனங்களும் பங்கேற்று, அந்த டெண்டரை டி.ஜே.ஆறுமுகம் நிறுவனம் பெற்றுக் கொள்கிறது. எனவே, இதுபோன்று அவர்களுக்குள் முன்கூட்டியே பேசிவைத்துக் கொண்டு, டெண்டர்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். குறிப்பிட்ட டெண்டர் தங்களுக்கு வேண்டும்‘ என்ற நிலையில் உறுதிசெய்து கொண்டு, மூன்று நிறுவனங்கள் மட்டுமே எல்லா டெண்டர்களையும் எடுத்துக் கொண்டிருப்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது.வெளிப்படையாகச் சொல்லவேண்டும் என்றால் அந்த நிறுவனங்கள் விரும்பியவாறு அவர்களுக்குத் தேவையான டெண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. டெண்டர் விதிமுறை என்பது உலகம் அறிந்த விஷயம். அப்படியிருக்கையில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் இந்த விதிமுறைகள் தெரியவில்லையா?இதேபோல் மற்றொரு டெண்டரில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நிறுவனங்களே பங்கெடுத்து டெண்டரை இறுதி செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.குருமூர்த்தி எண்டர்பிரைசஸ்’ என்னும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் குருமூர்த்தி. அவரின் மனைவி கௌரி உரிமையாளராக உள்ள ஜி.ஜி.இன்ஃராஸ்ட்ரக்சர் என்ற நிறுவனத்துடன், குருமூர்த்தியின் நிறுவனமும் இணைந்து 15 கோடி ரூபாய்க்கு டெண்டர் எடுத்துள்ளனர். இந்த டெண்டர் விடப்பட்டதிலும் கூட்டுச் சதி நடந்திருப்பது தெரியவந்துள்ளது. விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட இதுபோன்ற டெண்டர்கள் ஒருபுறம் என்றால், ஏற்கெனவே நன்றாக உள்ள சாலைகளைப் புதிதாகப் போடுவதற்காகவும் டெண்டர்கள் விடப்பட்டு அதிலும் ஊழல் நடைபெற்றுள்ளது.
ராமாராவ் என்பவருக்கு அளிக்கப்பட்ட டெண்டரின் அடிப்படையில் போடப்படவேண்டிய 195 சாலைகளில் 40 சாலைகளை நாங்கள் நேரடியாகக் களத்துக்குச் சென்று பார்த்தோம். அவற்றில் 10 சாலைகள் மட்டுமே மீண்டும் புதிதாகப் போடவேண்டிய நிலையில் உள்ளன. 12 சாலைகள் மிகவும் நல்ல நிலையிலேயே உள்ளன. 18 சாலைகள், சற்றே புனரமைக்கப்பட்டாலே (பேட்ச் வொர்க்) போதுமான நிலையில் உள்ளன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் பருவமழைக்கு முன்பாக, இந்த டெண்டர்களைவிட வேண்டிய அவசியம் என்ன?
ஒவ்வொரு டெண்டரிலும் சென்னை மாநகராட்சியின் விலைப்பட்டியலைவிட, 30 முதல் 50 சதவிகிதம்வரை அதிகமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் சாலையின் மேற்பகுதியைச் செப்பனிடுவதற்கான விலை பட்டியலும் சுமார் 100 சதவிகிதம் அளவு அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று சிமென்ட் சாலைக்கான `ரெடிமிக்ஸ்’ (ஜல்லி, மணல், சிமென்ட் கலக்கப்பட்டது) 55 சதவிகிதம் அளவு கூடுதல் விலைக்குக் கொடுத்துள்ளனர். இந்த ரெடிமிக்ஸ் ஒரு யூனிட் 5300 ரூபாயாக இருக்கும் நிலையில், அதை யூனிட் ஒன்றுக்கு 10,600 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளனர்.


மேலும், மழைநீர் வடிகால் அமைப்பதற்கான ஒப்பந்தம் 440 கோடி ரூபாய்க்கு விடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரிலும் விதிமுறைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளன. குறிப்பாக ஒரு மாதத்துக்குச் செய்ய வேண்டிய வேலையை 15 நாளில் முடித்துக் கொடுத்துள்ளனர். இப்படிப் பல்வேறு நிலைகளிலும் சென்னை மாநராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கான டெண்டர்கள் விடப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
இந்த முறைகேடுகளில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், தலைமைப் பொறியாளர் புகழேந்தி ஆகியோருக்குத் தொடர்பு உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த டெண்டர்கள் முறைகேடுகள் மூலம் அமைச்சர் வேலுமணிக்கு 120 கோடி ரூபாய்வரை லஞ்சப்பணம் கிடைத்திருப்பதாகவும் எங்களுக்குத் தெரியவந்துள்ளது. இந்த முறைகேடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும்“ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button