பள்ளிகளை எச்சரித்த அமைச்சர்..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தலின் அடிப்படையில் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்பட்டன.
ஆன்லைன் தேர்வுகளில் வினாத்தாள் ஆன்லைனில் அனுப்பப்பட்டு மாணவர்கள் வீட்டில் இருந்தே தேர்வு எழுதினர். ஆனால், தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிவிட்டது. மாணவர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளும் தொடங்கிவிட்டன.
இதனிடையே, நவம்பர், டிசம்பர் மாதத்துக்கான செமஸ்டர் தேர்வுகள் விரைவில் தொடங்கவுள்ளன. இந்த முறை செமஸ்டர் தேர்வை நேரடியாக இல்லாமல் ஆன்லைனிலேயே நடத்த வேண்டுமென மாணவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனவும், ஆன்லைன் மூலமே தேர்வுகளை நடத்த வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். ஆனால், உயர்கல்வித் துறை கீழ் செயல்படும் அனைத்து கல்வி நிறுவனங்களும், மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை நேரடியாக மட்டுமே நடத்த வேண்டும் என உயர்கல்வித் துறை அனைத்து பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. இதை அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக துறைகள் பின்பற்ற வேண்டும் எனவும் உயர்கல்வித்துறை அறிவுறுத்தியது.
இந்த நிலையில், செமஸ்டர் தேர்வு ஆஃப்லைன் முறையிலேயே அதாவது நேரடியாகவே நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் கல்லூரி மாணவர்கள், தேர்வு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறுகையில், “நேரடி தேர்வு எழுத வேண்டுமானால் ஒரு மாதம் கால அவகாசம் வேண்டும் என மாணவர்கள் கேட்டதால் அவர்களின் கோரிக்கை ஏற்று இரண்டு மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்டு ஜனவரி 20 ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும். மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டே நேரடி தேர்வுகள் நடத்தப்படும். ஒட்டுமொத்த மாணவர்களும் இந்த முடிவை ஏற்றுக்கொண்டுள்ளனர். நேரடி தேர்வை எதிர்த்து போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும்” என்றார்.
மேலும், அனைத்து மாணவர்களும் தினசரி கல்லூரிக்கு வர வேண்டும் என்றும், இந்த இரண்டு மாதங்களில் அனைத்து பாடங்களும் எடுக்கப்பட்டு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர் பொன்முடி, அதன் பின்னர் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும். மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைத்து எந்த முடிவாக இருந்தாலும் எடுக்கப்படும் என்றார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்படும் சம்பவம் அதிக அளவில் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, பள்ளி மாணவிகள் பள்ளியின் ஆசிரியர்களாலேயே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சுஷில் ஹரி பள்ளி சிவசங்கர், பத்மா சேஷாத்ரி பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் ராஜகோபாலன் என அடுத்தடுத்த சம்பவங்களின் அதிர்ச்சி இன்னும் நெஞ்சை விட்டு நீங்காத நிலையில், ஆசிரியர் ஒருவரின் பாலியல் தொந்தரவு காரணமாக, கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இன்று, திருச்சி மாவட்டம் தெப்பக்குளம் பகுதியில் செயல்பட்டு வரும் பிஷப் ஹீபர் மேல்நிலைப் பள்ளியில், ஆசிரியர்களுக்கான குழந்தைகள் பாதுகாப்பு பயிற்சிப் பணிமனையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது:
திருச்சியில் விழிப்புணர்வு பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தது போல் மற்ற மாவட்டங்களிலும் தொடங்கி வைக்க உள்ளோம். இதில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என தனித்தனியே பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. பள்ளிகளில் மாணவ, மாணவியருக்கு பிரச்னைகள் வரும்போது அந்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இதனால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்பதால் சில பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் பிரச்னையை பெரிதுபடுத்துவதில்லை. அப்படி அஜாக்கிரதையாக இருப்பதால் தான் மாணவர்கள் தற்கொலை போன்ற தவறான முடிவுகள் எடுத்து விடுகின்றனர். எனவே மாணவர்கள் மனம் விட்டு தங்கள் பிரச்னையை தெரிவிக்கும்போது, பள்ளி நிர்வாகம் அவர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் குறைந்தபட்சம் மாணவியின் பெற்றோரையாவது பள்ளி நிர்வாகம் அழைத்து பேசி இருக்கலாம். எனவே பிரச்னைகளை மூடி மறைக்க பள்ளி நிர்வாகங்கள் முயற்சி செய்யக்கூடாது. அதே சமயம் மாணவர்கள் தரப்பில் இருந்து வரும் எல்லா புகார்களையும் அப்படியே நம்பி விடாமல் முழுமையாக விசாரித்த பின்னரே பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதற்குக் காரணம் காழ்ப்புணர்ச்சியால் புகார்கள் வந்திருந்தால் தேவையில்லாமல் பள்ளியின் பெயர் பாதிக்கக்கூடாது என்பதற்காகத் தான்.
அதே சமயம் பள்ளியில் குழந்தைகள் மீது பாலியல் சீண்டல்கள் இருக்கும் பட்சத்தில் போக்சோ மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்த அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுக்கும். சில தனியார் பள்ளிகள் ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை முழுமையாக செலுத்துமாறு பெற்றோரை நிர்ப்பந்திப்பதாக புகார்கள் வருகின்றன. இது போன்று நிர்ப்பந்தித்து கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதிமன்றமே தெரிவித்து உள்ளது. இந்த புகார்கள் மீது முகாந்திரம் இருந்தால் துறை ரீதியாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.