உரிமம் இல்லாமல் உயிரோடு விளையாடிய மருந்துக்கடைகளுக்கு சீல் !
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த அருள்புரம் உப்பிலிபாளையத்தில் உள்ள அழகு மெடிக்கல்ஸ் என்ற பெயரில் இளையராஜா என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மருந்துக்கடையில் தானே நோயாளிகளுக்கு ஊசி போடுவதாகவும் குளுக்கோஸ் போடுவதாகவும் காயங்களுக்கு கட்டுப்போடுவதாகவும் சுகாதாரத்துறைக்கு அதிக அளவில் புகார் வந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் கனக ராணி உத்தரவின் பேரில் தேசிய சுகாதார திட்ட அலுவலர் அருண் பாபு கண்காணிப்பாளர் ஹரி கோபாலகிருஷ்ணன் சப் இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் இளையராஜா நோயாளிகளுக்கு வைத்தியம் செய்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த அழகு மெடிக்கல் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.
இதனிடையே மகாலட்சுமி நகரில் அப்சல் என்பவர் எம்.எம். மெடிக்கல் கடையில் ஆய்வு மேற்கொண்டதில் உரிய அனுமதியின்றி மெடிக்கல் கடை நடத்திவந்தது தெரிய வந்தது இதனையடுத்து எம்.எம். மெடிக்கல் கடைக்கும் அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர்.
பின்னர் விசாரணைக்காக வரும் செவ்வாய்க்கிழமை அன்று இரண்டு மெடிக்கல் உரிமையாளர்களையும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.