தகரக் கொட்டகையில் அரசு பள்ளி
பரமக்குடி அருகே திறந்த வெளியில் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளியில் மழை மற்றும் வெயில் நேரத்தில் தகரக் கொட்டகையிலும் தார்ப்பாய் மறைவிலும் பதுங்கியும் பள்ளி குழந்தைகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் நயினார் கோவில் ஒன்றியம் பி.வலசை எனும் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் திறந்த வெளியிலும் தகரக் கொட்டகைக்குள்ளும் தார்ப்பாய் மறைவிலும் மாணவக் குழந்தைகளுக்குப் பாடம் நடத்தப்படுகிறது.
இங்கு 5ஆம் வகுப்பு வரையில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 22 மாணவர்கள் வரை படிக்கின்றனர் எனக் கூறப்படுகிறது. இப்பள்ளிக்கு கட்டிட வசதி இல்லை. மரங்களின் நிழலிலும் சத்துணவு சமையலறை கூடத்திலும் பள்ளி செயல்பட்டு வருகிறது.
சுற்றுச் சுவற்றின் மேல் தகரக் கொட்டகை அமைத்துத் தார்ப்பாயைக் கொண்டு மறைத்து மாணவர்கள் அமரவைக்கப்படுகின்றனர். இதனால் சத்துணவு சமைக்க இடமின்றிப் பள்ளி மைதானத்தில் சமையல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மழை மற்றும் வெயில் காலங்களில் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்த பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பப் பெற்றோர் தயங்குகின்றனர் எனக் கூறப்படுகிறது. எனவே தொடக்கப்பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்
இது குறித்துத் தொடக்கக் கல்வி உதவி அலுவலர் இந்திராகாந்தியிடம் தொலைபேசியில் கேட்ட போது பள்ளி கட்டிடம் குறித்து அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுப் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.