2017-ல் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக தற்போது தேசத்துரோக வழக்கு சேர்க்கப்பட்டு திருமுருகன் காந்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுபற்றி மே17 இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
தூத்துக்குடி படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நாவில் பேசியதற்காக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் சென்னையில் அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி, அவற்றை ரத்து செய்து திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க முடியாது என்று உத்தரவிட்டார். 24 மணி நேர விசாரணை காலத்திற்கு திருமுருகன் அவர்களை காவலில் வைத்திருக்கலாம் என்றும் அத்தீர்ப்பு கூறியது. இந்நிலையில் மாலை 6 மணிக்கு மேல் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார்.
எழும்பூரில் உள்ள பழைய ஆணையர் அலுவலகத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டு வெளியே வந்த திருமுருகன் காந்தி வாயிலுக்கு வெளியே வரும்போது பெரும் எண்ணிக்கையிலான காவலர்கள் சூழ்ந்து கொண்டனர். விடுதலை செய்த பிறகு எதற்காக இந்த கைது என்று திருமுருகன் காந்தி அவர்களிடம் வாதிட்ட போது அதை எதையும் கேளாமல், அவரை கட்டாயமாக தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றினர். வழக்கறிஞர்கள் கேட்டும் கூட எங்கு கொண்டு செல்லப்படுகிறார் என்பதை சொல்லாமல் திருமுருகன் காந்தியை வண்டியில் ஏற்றிச் சென்றனர். ஆட்கடத்தலைப் போல ஒரு நிகழ்வினை நடத்தும் அளவிற்கு திருமுருகன் காந்தி மேல் வன்மம் இந்த அரசிற்கு இருக்கிறது.
பின்னாலே சென்ற சில தோழர்கள் கவனித்ததன் அடிப்ப்டையிலேயே அவர் ராயப்பேட்டை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்பது தெரிய வந்தது. 2017 ஆம் ஆண்டு குண்டர் சட்டத்திலிருந்து திருமுருகன் காந்தி விடுதலையாகி வெளியே வந்த போது ராயப்பேட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்ததற்காக என்று போடப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அனுமதி பெறாமல் கூட்டமாக சென்று பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார் என்று சொல்லி மூன்று வழக்குகள் 2017ஆம் ஆண்டு போடப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென புதிதாக அந்த வழக்கில் 124-கி தேசத்துரோக வழக்கினையும் பிரிவு 153 ஐயும் சட்ட விரோதமாக திடீரென இணைத்திருந்தனர். பிரிவு 153 என்பது பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பினை விளக்கி பேசியதற்காக போடப்பட்டிருக்கிறது.
திருமுருகன் காந்தியின் மீது ஐ.நாவில் பேசியதற்காக பொய் வழக்கு போட்டு சிறையில் முடக்கி விடலாம் என பாஜக-எடப்பாடி அரசுகள் நினைத்தன. இந்நிலையில் அவர் அந்த வழக்குகளிலிருந்து விடுதலையான காரணத்தினால், தேசத்துரோக வழக்கினை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த பழைய வழக்கில் இணைத்து சிறையில் அடைத்துள்ளனர்.
இரவு 12 மணியளவில் திருமுருகன் காந்தி சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தால் தேசத்துரோகம் என்று முதல் முறையாக ஒரு மோசமான வழக்கில் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டிருக்கிறார். பார்ப்பனிய ஆதிக்க அரசின் அடக்குமுறைகளுக்கு மே பதினேழு இயக்கம் ஒருபோதும் அஞ்சப் போவதில்லை. பெரியாரின் பேரன்களாய் தொடர்ந்து போராடி வெல்வோம்.
இரண்டு நாட்களாக தொடர்ச்சியாக அலைக்கழிக்கப்பட்டு தற்போது தேசத்துரோக வழக்கோடு புழல் சிறையில் திருமுருகன் காந்தி அடைக்கப்பட்டிருக்கிறார்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.