தமிழகம்

மழை நீர் சேகரிப்பு : அசத்தும் கிராமங்கள்..!

ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 ஆண்டாக மழையே இல்லாதபோதும், நிலத்தடி நீருக்கு பஞ்சமில்லாமல் மழை நீர் சேகரிப்பில் கிராமங்கள் அசத்துகின்றன. வறண்ட பூமி, தண்ணியில்லா காடு, குடிநீர் தட்டுப்பாடுக்கு எடுத்துக்காட்டாக, பேசப்பட்டுவருவது, ராமநாதபுரம் மாவட்டம். தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக மழை இல்லாமல், பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு விரிசல் விரிசலாகி காட்சியளிக்க, குடிநீருக்காக குழாய்கள் முன் நாட்கணக்கில் காலி குடங்கள் கிடக்க, எதிலும் தண்ணீர் இல்லை என்று புலம்புவோர் மத்தியில், இந்த பிரச்சனையை தாங்களே யோசித்து, அதில் வெற்றிபெற்று, எதிர்மறையான எண்ணத்தை மாற்றிக்காட்டிய கிராமங்களும் இம்மாவட்டத்தில் இருக்கத்தான் செய்கிறது.

முறையாக திட்டமிட்டு மழை நீரை சேகரித்து, தண்ணீரில் தன்னிறைவு பெற்றுள்ளது இராமநாதபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள,அம்மன் கோவில், பழங்குளம், இடைதாங்கி, பேராவூர், இளமனூர்,மாடக்கோட்டான், வழுதூர் உள்ளிட்ட 27 கிராமங்கள். யாரையும் உதவிக்கு அழைக்காமலும், உதவியை எதிர்பார்க்காமலும், தங்களாகவே, கண்மாய்கள், ஊரணிகளைச்சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாத வகையிலும், நீர்வழித்தடங்களை முறையாக சீரமைத்தும், ஆண்டுக்கொருமுறை தூர்வாரியும், பாதுகாக்கின்றனர்.

கிராமத்தின் பிற பகுதிகளில் தேங்கிய மழை நீரையும், வயல்களில் கிடைக்கும் உபரிநீரையும், வாய்க்கால் அமைத்து ஊரணிக்குள் விடுகிறார்கள். தேவைப்படும் பட்சத்தில் பம்ப் செட்டுகள் மூலமாகவும் ஊரணிக்குள் தண்ணீர் அனுப்பப்படுகிறது. கரையோரங்களில் வேம்பு மற்றும் பனை மரங்களை நட்டு, நீர் ஆவியாவது தடுக்கப்படுவதுடன், கரையிலுள்ள மண்ணரிப்பும் தடுக்கப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கும் நீர், குடிநீருக்கு மட்டுமல்லாது, கால்நடைகள் பயன்பாட்டுக்கும்,போதுமானதாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

மழை நீரின் அவசியம் உணர்ந்து அவற்றை சேகரிக்கவேண்டிய கட்டாயத்திற்கு இன்றைய மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த கிராமங்கள் அனைவருக்கும் உதாரணமாக திகழ்வதாக பாராட்டுகிறார்கள். ஒவ்வொருவரும் இந்த கிராம மக்களை முன்னுதாரணமாக கொண்டு தங்கள் பகுதி நீர் நிலைகளில், மழை நீரை சேமிக்க முன்வந்தால், குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமிருக்காது.

இதுபோல் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே தனிநபர் தனது சொந்த நிலத்தில் அமைத்த மழைநீர் மற்றும் கசிவுநீர் சேகரிப்பு குட்டை, தற்போது நிலவி வரும் கடும் வறட்சியில் அவருக்கு மட்டுமல்லாது சுற்றுவட்டார விவசாயிகளுக்கும் பயன்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை மக்கள் மத்தியில் மழைநீர் சேமிப்பு குறித்தும், நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்தும் பரவலாக விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் 2 ஆண்டுகளுக்கு முன்பே நீர் சேமிப்பின் மகத்துவத்தை உணர்ந்து, தனது சொந்த நிலத்தில் மழைநீர் மற்றும் கசிவுநீர் சேகரிப்பு குட்டை ஒன்றை ஏற்படுத்தினார் காங்கேயம் அடுத்த வள்ளியரச்சலைச் சேர்ந்த கார்த்திகேயன்.

2016ஆம் ஆண்டின் மத்தியில் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வந்த சூழலில்தான் சிவ சேனாபதி அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நடத்தி வரும் கார்த்திகேயனுக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் கசிவுநீர் குட்டை ஒன்றை ஏற்படுத்தும் யோசனை வந்தது. அதன்படி 2017ஆம் ஆண்டு தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் பொதுமக்களின் உதவியோடு பிரம்மாண்டமான குட்டை ஒன்றை ஏற்படுத்தினார்.
இந்த குட்டையில் மழைநீரோடு, பவானிசாகர் அணையில் இருந்து பாசன வாய்க்கால் வழியாக வரும் தண்ணீரும் கசிந்து சேகரமாகத் தொடங்கியது. இதனால் சுற்றுவட்டாரத்தில் நிலத்தடிநீர் மட்டமும் ஏறத்தொடங்கியது.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி தாண்டவம் ஆட, வள்ளியரச்சல் கிராம விவசாயிகளுக்கு தனது மடியில் தண்ணீரை சேமித்து வைத்து தடையின்றி உயிர் நீர் ஊட்டி வருகிறது இந்த குட்டை.

பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள், தங்களது நிலங்களில் ஒரு பகுதியை ஒதுக்கி, அதில் இதுபோன்ற குட்டை அமைத்தால் மட்டுமே எதிர்காலத்தில் பெரும் தண்ணீர் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும் என்கிறார் கார்த்திகேயன்.
பருவமழை பொய்த்தது ஒரு பக்கம் இருந்தாலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தின் மீது நாம் காட்டிய அலட்சியத்தின் பலனைத்தான் தற்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறோம் என்பதை அனைவரும் உணர வேண்டும்.

மழை நீர் சேகரிப்பில்
பொறியாளரின் புதிய முயற்சி

பல்வேறு வகையான மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் பரிந்துரை செய்யப்படும் நிலையில், ஆண்டுக்கு 12 நாட்களில் பெய்யும் மழை நீரைச் சேகரித்தால், ஆண்டு முழுவதும் ஒரு குடும்பத்திற்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளார் பெரம்பலூரைச் சேர்ந்த கலைவாணன் என்ற பொறியாளர்.


தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து போன மாவட்டங்களின் வரிசையில் முதலிடம் வகிக்கும் பெரம்பலூர் மாவட்டம் ஆலம்பாடி சாலையிலுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்திற்கு பின் பகுதியில் வெங்கடேசன் என்ற அரசு ஊழியர் வீடுகட்ட முனைந்துள்ளார். இதற்கான பொறுப்பை பொறியாளர் கலைவாணனிடம் அவர் ஒப்படைத்துள்ளார்.
கட்டுமான பணி தொடங்கிய சில நாட்களிலேயே தண்ணீர் இல்லாமல் பணிகள் தடைபட, வருங்கால தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க மாற்று வழி குறித்து வீட்டு உரிமையாளரிடம் ஆலோசித்த பொறியாளர், புதிய மழை நீர் சேமிப்பு அமைப்பை நிறுவ முடிவெடுத்துள்ளார்.


கட்டிடத்தின் அருகே சிறிய தொட்டி அமைத்து அதன் வழியாக மழை நீரை பூமிக்குள் செலுத்துவதை போல் அல்லாமல், வீட்டின் தரை தளத்தின் கீழ் பாதாள அறையினை அமைத்து மழை நீர் சேமிப்பு அமைப்பை உருவாக்கியிருக்கியிருக்கிறார்கள்.
1200 சதுர அடி பரப்புள்ள வீட்டின் தரைத் தளத்தில் அஸ்திவார சுற்றுச் சுவரை பலமாக அமைத்து, அதன் மேல் கான்கிரீட் தளம் அமைத்துள்ளனர். வீட்டின் மாடியில் பெய்யும் மழை நீர் அங்கிருந்து பைப் மூலமாக வடிகட்டும் பகுதிக்கு வருகிறது. வடிகட்டப்பட்ட மழை நீர் மற்றொரு பைப் மூலமாக வீட்டின் அடித்தளத்தில் சேமிக்கப்படுகிறது. பாதாள அறையில் சேமிக்கப்படும் நீரை காற்றும், சூரிய ஒளியும் படாமல் சிலிகான் பேக்கிங் மூலம் பாதுகாப்பாக மூடி விட்டால் அந்த மழை நீரை சுத்தமான, ஆரோக்கியமான நீராக மோட்டார் மூலம் மேல்நிலைத் தொட்டியில் ஏற்றி ஆண்டுக்கணக்கில் கூட பயன்படுத்தலாம்.
இதன் மூலமாக கட்டிடத்தில் அரிப்பு ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கூறும் பொறியாளர், உப்பு நீர்தான் அரிப்பை ஏற்படுத்தும், நல்ல நீர் அரிப்பை ஏற்படுத்தாது என உறுதியளிக்கிறார். மேலும் தரை தளத்தின் கீழே தண்ணீர் நிற்பதால் வீடு எப்போதும் குளிர்ச்சியாக காணப்படுவதோடு, தரை தளத்தில் பொருத்தப்படும் டைல்ஸ், மொசைக், கிரானைட் போன்றவை சேதமடைவது நிகழாது என்றும் கூறுகிறார் பொறியாளர் கலைவாணன்.

பூமியைத் துளைத்து போர்வெல் மூலம் உப்புத் தண்ணீரைப் பெறுவதை விட இது போன்ற மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஆண்டு முழுக்க நன்னீரைத் தரும்.
இனிவரும் காலங்களிலாவது நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க எண்ணாமல், புதிய நீர்நிலைகளை ஏற்படுத்தவும் முயற்சிக்க வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button