காப்பான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா இது குறித்து கூறுகையில், காப்பான் படத்திற்கு கட் அவுட், பேனர் வைத்து ரசிகர்கள் யாரும் கொண்டாட வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். சமூகத்தில் நடப்பவற்றை நாமும் மதிக்க வேண்டும். படம் ரிலீஸாகும் போது ரசிகர்களின் கொண்டாட்டங்கள் இருக்கும். இப்படி ஒரு விஷயம் நடந்த பிறகு கட் அவுட் வேண்டாம். அப்படி செய்துதான் என்னை கொண்டாட வேண்டும் என்ற அவசியமில்லை.
அதற்கு பதிலாக நிறைய நல்ல காரியங்களை பண்ணலாம். ரசிகர்களை தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன் கட் அவுட் வேண்டாம். ரசிகர் மன்றத்தின் மூலம் ஒரே நாளில் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக ரத்த தானம் செய்யப்பட்டுள்ளது பெருமையாக இருக்கிறது. இது போன்ற நல்ல விஷயங்களை செய்தால் போதுமானது. மனம் வருத்தப்படுவது போன்று ஒரு விஷயம் நடந்ததற்குப் பிறகு மறுபடியும் தெரிந்தே ஒரு விஷயத்தில் ஈடுபட மாட்டீங்க என்று நம்புகிறேன்.
அரசுப் பள்ளியில் ஒரு கழிப்பிட வசதி செய்து தருவது உள்ளிட்ட பல தேவைகள் எல்லா ஊர்களிலும் இருக்கிறது. அதனை செய்து தருவதன் மூலம் நமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.