மை தடவி பாலியல் அத்துமீறல் ! சாதிக்கட்சி தலைவர் மீது பெண் போலீஸ் புகார்!
மதுரையில் ஓடும் காரில் வைத்து சாமியார் மை வைக்க, சாதிக்கட்சி தலைவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் போலீஸ் ஒருவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகர காவல்துறையில் பணிபுரிந்து வரும் சந்தான லெட்சுமி என்ற பெண் காவலர் தான் இந்த குற்றச்சாட்டை மதுரை காவல் ஆணையரிடம் புகாராக தெரிவித்து இருப்பவர். இரு குழந்தைகள் உள்ள நிலையில், கணவரிடம் விவாகரத்து கேட்டு வழக்கு நடத்தி வரும் காவலர் சந்தான லெட்சுமி தனது சாதியை சேர்ந்த அரசியல் கட்சி தலைவர் பூமிராஜன் என்பவரிடம் விவாகரத்து வழக்கை பஞ்சாயத்துக்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.
கேரளா மந்திரவாதியை சந்தித்து வசிய பூஜை செய்தால் கணவர், உன்னிடமே சொக்கி கிடப்பார் என்று ஆசைவார்த்தை கூறிய பூமிராஜன், சாமியார் ஒருவர் துணையுடன் பெண் போலீஸ் சந்தானலெட்சுமியை கேரளாவுக்கு காரில் அழைத்து செல்ல புறப்பட்ட போது தலையில் மையை வைத்து மயக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகவும், சந்தானலெட்சுமி அவரை தாக்கி விட்டு தப்பியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்
மேலும் பூமிராஜனின் தந்தை தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆடியோ ஒன்றையும் வெளியிட்டார். சந்தான லெட்சுமியின் புகார் குறித்து விளக்கம் அளித்துள்ள பூமிராஜன், தனக்கு எதிராக சந்தான லெட்சுமி மூலம் காவல்துறையினர் கொலை சதியில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் காவலர் சந்தானலெட்சுமி, தொடர்ந்து தன்னை செல்போனில் பேச சொல்லி வற்புறுத்தியதாகவும் அவரது வீட்டுக்கு மதிய விருந்துக்கு அழைத்த வில்லங்க குரல் பதிவுகளையும் பூமிராஜன் வெளியிட்டுள்ளார்.
தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவரே, விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தை நம்பாமல், சாதி கட்சி தலைவரை நம்பி பஞ்சாயத்துக்கு சென்றுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தங்கள் சுய லாபத்துக்காக சிலர் சாதியை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தி வருவது இந்த விவகாரம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனிடையே காவலர் சந்தன லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், பூமிராஜன், பூமிராஜனின் தந்தை கரந்தமலை, சாமியார் ஜோதி மற்றும் ஆறுமுகம் ஆகிய 4 பேர் மீது ஏமாற்றுதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- நீதிராஜ பாண்டியன்