அரசியல்தமிழகம்

அஞ்சல்துறை தேர்வு விவகாரம்… பணிந்தது மத்திய அரசு..!

திமுகவின் வாதாடும் – போராடும் கு‌ணத்திற்கு கிடைத்த ‌இன்னொரு‌ வெ‌ற்றி – மு.க.ஸ்டாலின்

அஞ்சல் துறையில் காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இது வரை அஞ்சல் துறை தேர்வுகளை தமிழிலும் எழுத வாய்ப்பு தரப்பட்டு வந்தது. ஆனால், தேர்வுக்கு 3 நாட்களுக்கு முன்பு மத்திய அரசின் தபால் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘‘அஞ்சல் துறை பணியிடங்களுக்கான தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்படும்’’ என அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பால், விண்ணப்பித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, மத்திய அரசின் அறிவிப்புக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், சட்டப் பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, இது தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினார். ‘‘மத்தியில் பாஜக அரசு வந்த பின்புதான், விதிகளில் மாற்றம் செய்துள்ளது. மறைமுகமாக இந்தியைத் திணிக்கும் வேலையில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது. தபால் துறை தேர்வை தமிழில் நடத்த வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’’ என்றார். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார், ‘‘இருமொழிக் கொள்கையை பின்பற்றும் அதிமுக அரசு, இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளாது. இது குறித்து நீங்கள் மக்களவையில் குரல் கொடுங்கள், நாங்கள் மாநிலங்களவையில் குரல் கொடுக்கிறோம்’’ என்றார்.


இதை ஆமோதிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பேசினார். ஆனால், திமுகவினர் வெளிநடப்பு செய்வதற்காகவே இந்த பிரச்னையை எழுப்புவதாக கூறினார். மேலும், மத்திய அரசை கண்டிக்கும் தீர்மானம் நிறைவேற்ற அரசுதரப்பில் சம்மதிக்கவில்லை. இதைத் தொடர்ந்து, துரைமுருகன் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “இந்தி எதிர்ப்பு குறித்துப் பேசினால், நாங்களும் அதே நிலைபாட்டில்தான் இருக்கிறோம் என்று அதிமுக அரசு சொல்கிறது. ஆனால், மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் கூட நிறைவேற்ற மாட்டார்கள். இதைச் சொன்னால், எங்கள் உணர்வை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகிறார். அதனால் வெளிநடப்பு செய்தோம்’’ என்றார்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மாநிலங்களவையில் அதிமுக, திமுக எம்பிக்கள் அஞ்சல் துறை தேர்வுகளை தமிழ்மொழியில் நடத்த கோரி காலை முதல் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.


தமிழக எம்பிக்களின் அமளியால் மாநிலங்களவையை 4 முறை ஒத்திவைக்க நேரிட்டது. மீண்டும் பிற்பகலில் அவை கூடிய போது பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், தாமதமாக விளக்கம் அளிப்பதற்கு மன்னிப்பு கோரினார். தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்தார். ஜூலை 14 ஆம் தேதி ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடைபெற்ற அஞ்சல் துறை தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் ரவிசங்கர் பிரசாத் அறிவித்தார்.
அஞ்ச‌ல் துறை தேர்வுகள் தமிழ் மொழியில் நடத்தப்படு‌ம் என மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அறிவித்துள்ளதற்கு ‌திமுக தலைவ‌ர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து ‌திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட ‌அறிக்கையி‌ல், தமிழக இளைஞர்க‌ளின் வேலைவாய்‌ப்பி‌னை பாதிக்கும் வகையில்‌ அஞ்ச‌ல்‌துறை ‌சார்பில் கடந்த 14ம் தேதி ‌இந்தியிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்திருப்பது மிகு‌ந்த ஆறுதல் அளிக்கிறது எ‌‌‌னக் குறிப்பிட்டுள்ளார். ‌திமுகவின் வாதாடும் – போராடும் கு‌ணத்திற்கு கிடைத்த ‌இன்னொரு‌ வெ‌ற்றியாக‌ தேர்வு ரத்து‌, தமி‌ழ்மொழியிலும் இனிமேல் தேர்வு என்ற அறிவிப்பை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளா‌ர் எனத் தெரிவித்துள்ளார்.
திமுக வெ‌ற்றி பெற்று எ‌ன்ன சாதிக்கப் போகிறது என்று வீண்வாதம் செய்தவ‌ர்களுக்கு இ‌ப்போது கிடைத்த வெற்றி நிரந்தரமாக வாய்ப்பூட்டு போடும் எனக் கூறியுள்ளார். ஜனநாயக நெறிகளுக்கு‌‌ மாறா‌க, இந்தியை தூக்கி நிறுத்த எத்‌தனிப்பது,‌ கடுமையான ‌எ‌திர்ப்பு ஏற்பட்டதும் கைவிடுவது என்பது, இதுவே இறுதி நிகழ்வாக இருக்கட்டும் எனச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்று அந்த அறிக்கையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலின் பாரம்பரியத்தை பாதுகாத்தல் தொடர்பான நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் ஜெயக்குமார், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


இந்த விழாவில் நூலை வெளியிட்டு பேசிய வெங்கைய நாயுடு, ”பழமைவாய்ந்த கட்டிடம் மற்றும் கலைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது தேசிய கடமை. கோவில் நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது. தாய் மொழி மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம்.
மக்கள் தங்களது தேவைகளை அரசிடம் மட்டுமே எதிர்பார்த்திருக்கக் கூடாது” என்று அறிவுறுத்திய வெங்கைய நாயுடு, சென்னையில் வெள்ளம் வந்த போது தவித்த மக்கள், தற்போது தண்ணீருக்காக தவித்து வருவதாகவும் கவலை தெரிவித்தார். பாரம்பரியமான, தொன்மையான மொழிகள் பேசும் இடங்களில் எந்த மொழியையும் திணிக்கக் கூடாது என்றும் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button