தமிழகம்

வேலம்மாள் கல்விக் குழுமத்தில் வருமான வரித்துறை சோதனை : கணக்கில் வராத ரூ.2 கோடி ரொக்கம், ரூ.400 கோடி சொத்துகள்…

தமிழகம் முழுவதும் வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான சுமார் 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றான வேலம்மாள் கல்வி குழுமம், சென்னை, காஞ்சிபுரம், தேனி, கரூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகளை நிறுவியுள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளி முதல் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் வரை இந்தக் குழுமம் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், சென்னை, மதுரை உள்பட சுமார் 50 இடங்களில் உள்ள வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடைபெற்று வந்தது.

சென்னை சுற்றுவட்டாரத்தில் சூரப்பட்டு, பருத்திப்பட்டு, அயனம்பாக்கம், முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வேலம்மாள் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரி சோதனை நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பஞ்செட்டி வேலம்மாள் தொழில்நுட்ப கல்லூரி, வேலம்மாள் மெட்ரிக் பள்ளி, வேலம்மாள் வித்யாலயா, சிபிஎஸ்இ பள்ளி, வேலம்மாள் இன்டர்நேசனல் பள்ளி உள்ளிட்டவற்றில் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

மதுரையில் வேலம்மாள் போதி கேம்பஸ், வேலம்மாள் பொறியியல் கல்லூரி, தூத்துக்குடி சாலையிலுள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி, அதே வளாகத்திலுள்ள சி.பிஎஸ்சி பள்ளி, திருப்புவனம் லாடனேந்தலிலுள்ள வேலம்மாள் உறைவிடப் பள்ளி உள்ளிட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

இதேபோல் கரூர் காக்காவாடி வேலம்மாள் வித்யாலயா பள்ளியிலும் காலை 10.30 மணி முதல் வருமானவரி சோதனை நடைபெற்றது. 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி அருகே முத்துதேவன் பட்டியில் இயங்கிவரும் வேலம்மாள் சிபிஎஸ்சி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 10க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வேலம்மாள் கல்விக் குழுமத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை இன்னும் 2 நாட்களுக்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தஞ்சையில் உள்ள வேலம்மாள் போதி கேம்பஸ் சிபிஎஸ்சி பள்ளியில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், அப்பள்ளியின் விடுதியில் தங்கியிருந்த மாணவ, மாணவிகள் இரவோடு இரவாக மற்றொரு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தஞ்சை புதிய பேருந்து நிலையம் அருகில் இயங்கி வரும் வேலம்மாள் குழுமத்திற்கு சொந்தமான சிபிஎஸ்சி பள்ளியில் உரிய அனுமதி பெறாமல் விடுதி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்த நிலையில் விடுதியில் தங்கியிருந்த 9 மற்றும் 10ம் வகுப்பை சேர்ந்த 50 மாணவ, மாணவிகள் பள்ளி வாகனம் மூலம் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
விடுதி மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வராத நிலையில், அவர்களின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு விசாரித்ததாக கூறப்படுகிறது.

வேலம்மாள் கல்வி குழுமத்தில் வருமானவரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள், 2 கோடி ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலம்மாள் கல்வி குழுமத்தில் தொடர்ந்து நன்கொடை பெறப்படுவது தொடர்பாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அக்குழுமத்தினருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரி, ஆசிரமம் உள்ளிட்ட 60 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
4 நாட்களாக நடைபெற்ற சோதனையின் முடிவில் கணக்கில் வராத 2 கோடி ரொக்கமும், 400 கோடி ரூபாய் சொத்துக்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கணக்கில் வராத பணம் மற்றும் சொத்துகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

& நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button