தமிழகம்

தில்லை நடராசர் கோயிலை வணிகமயமாக்க முயற்சியா?

புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசியைச் சேர்ந்த பிரபல பட்டாசு ஆலை அதிபரின் மகள் திருமணம் மரபுகளை மீறி மிகவும் ஆடம்பரமாக நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது.

ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஆனிமாதம் மற்றும் மார்கழி மாதம் நடராஜருக்கும் சிவகாமி அம்பாளுக்கும் அபிஷேகம் நடத்தப்பட்டு பின்பு, மண்டபத்தின் உள்ளே சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கம்.

இந்த மண்டபத்தில் தனியாருக்கு, திருமண நிகழ்ச்சி நடத்தவோ அல்லது விழாக்களை நடத்தவோ அனுமதி கிடையாது. இந்நிலையில் கோயில் மரபுகளை மீறி ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாசியை சேர்ந்த ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலை அதிபர் ராஜரத்தினம் -பத்மா தம்பதியர் மகளான சிவகாமி, மற்றும் சென்னை ரத்னா ஃபேன் ஹவுஸ் உரிமையாளர் மகன் சித்தார்த்தன் ஆகியோரின் திருமணம் மிகவும் ஆடம்பரத்துடன் நடைபெற்றுள்ளது.
பெரும் பொருட் செலவில் பிரம்மாண்டமான கல்யாண மண்டபத்தில் உள்ள அலங்காரங்கள் போல ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பு மற்றும் உள்பகுதி ஆகியவை அலங்காரம் செய்யப்பட்டு, திருமணத்திற்கு வருபவர்கள் அமரும் வகையில் குஷன் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.
பின்னர் திருமணம் முடிந்த பிறகு தடபுடலான விருந்தும் நடைபெற்றுள்ளது. ராஜரத்தினம் பத்மா தம்பதியருக்கு மிக நீண்ட நாட்களாக குழந்தைப்பேறு இல்லாமல் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் வேண்டி சிவகாமி பிறந்ததாக கூறப்படுகிறது.

அதன் அடிப்படையில் அவர்கள் தனது மகளின் திருமணத்தை நடராஜர் ஆலயத்தில் நடத்த வேண்டும் என்று தீர்மானித்து சிதம்பரம் நடராஜர் ஆலய பொது தீட்சிதர்கள் உத்தரவு பெற்று இந்த திருமணத்தை நடத்தி இருப்பதாகவும், அதில் பட்டு தீட்சிதர் என்பவர் அதற்கான அனுமதி வாங்கி கொடுத்ததாகவும், அவர்கள் குடும்பத்தார் முதல் நாள் ஆயிரங்கால் மண்டபத்தில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்தியதாகவும், பின்பு அடுத்த நாள் காலை ஆறு ஏழு முப்பது மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் கதவுகள் பூட்டப்பட்ட நிலையில் அங்கு திருமணம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி, தற்போது வைரலாகி வருகிறது.
இந்தத் தகவல் பொதுமக்கள், பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நடராஜர் கோவில் பூஜை ஸ்தானிகரும், அறங்காவலருமான (டிரஸ்டியுமான) பட்டு தீட்சதரிடம் கேட்டபோது சிவகாசி பட்டாசு தொழிற்சாலை அதிபரின் மகளுக்கு இக்கோவிலில் திருமணம் நடைபெற வேண்டும் என்பது நடராஜரின் அருள் என்றும், இதைத்தவிர சொல்வதற்கு வேறு எதுவுமில்லை என்று முடித்துக்கொண்டார்.

இதுகுறித்து நடராஜர் கோயில் பொதுச் செயலாளர் பால கணேச தீட்சிதரிடம் கேட்டபோது, பொது தீட்சிதர்கள் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளதாகவும், அந்தக் கூட்ட முடிவின்படிதான் தன்னால் எதுவும் கூற முடியும் என்றார்.
இந்நிலையில், நடராஜர் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்து சரியானவர்களின் கைகளில் ஒப்படைக்க தமிழக அரசு தயங்கக்கூடாது என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகப் புகழ்பெற்ற திருக்கோயில்களில் ஒன்றாக போற்றப்படுவதும், பிச்சாவரம் சோழர்களால் காலம் காலமாக நிர்வகிக்கப்பட்டு வந்ததுமான சிதம்பரம் நடராசர் கோயிலில் மிக மோசமான அத்துமீறல்கள் அரங்கேற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
புனிதம் மிக்க சிதம்பரம் நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் நோக்கத்துடன் நடராசர் கோயில் நிர்வாகம் மேற்கொண்ட அத்துமீறல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.
சிதம்பரம் நடராசர் கோயிலின் பல்லாயிரமாண்டு கால வரலாற்றில் ஆயிரங்கால் மண்டபத்தில் நிகழ்ச்சிகளை நடத்த பல முயற்சிகள் நடந்த போதிலும் அவை எதுவும் வெற்றி பெற்றதில்லை. இத்தகைய வரலாறு கொண்ட ஆயிரங்கால் மண்டபத்தில் பணம் கிடைக்கிறது என்பதற்காக திருமணம் நடத்த அனுமதிப்பது நடராசர் கோயிலை வணிகமயமாக்கும் செயல்.

சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல்கள் குறித்து சுருக்கமாக கூற வேண்டுமானால் பணத்தின் முன் புனிதமும், பாரம்பரியமும் வீழ்த்தப்பட்டிருக்கின்றன என்று தான் குறிப்பிட வேண்டும்.

நடராசர் கோவில் நிர்வாகம் தவறானவர்களின் கைகளில் சிக்கித் தவிக்கிறது என்பதற்கு இதைவிட சிறந்த உதாரணத்தைக் கூற முடியாது என்றும், இதற்கான ஒரே பரிகாரம் கோயில் நிர்வாகத்தை மீட்டெடுத்து சரியானவர்களின் கைகளில் ஒப்படைப்பது மட்டும் தான். அதை செய்ய தமிழக அரசு தயங்கக்கூடாது.
எனவே, சிதம்பரம் நடராசர் கோயிலில் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் பற்றி விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும். அதுமட்டுமின்றி, காலம்காலமாக பிச்சாரவரம் சோழர்கள் நிர்வாகத்தில் சிதம்பரம் நடராசர் கோயில் புகழ் பெற்று விளங்கியது என்பதால், அக்கோயிலை தமிழக அரசு கையகப்படுத்தி, அதை நிர்வகிக்க அமைக்கப்படும் அறங்காவலர் குழுவில் பிச்சாவரம் சோழர்களை சேர்க்க வேண்டும்” என்றும் ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • நமது நிருபர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button