தமிழகம்

கடல் அமலாக்கப் பிரிவு..!

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கடல் மீன்பிடித்தல் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த கடல் அமலாக்க பிரிவு (marine enforcement wing) எனும் புதிய பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிக கடற்கரையை கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. மாநிலத்திலுள்ள 13 கடலோர மாவட்டங்களிலும் ஆயிரத்து 76 கிலோ மீட்டர் தூரம் கடற்கரை பரந்து விரிந்து அமைந்துள்ளது.

கடலில் பிடிக்கும் மீன்களை பத்திரமாக கொண்டு வந்து இறக்க 6 பெரிய மீன்பிடி துறைமுகங்களும், 35 மீன்பிடி இறங்குதளங்களும் உள்ளன. இந்நிலையில் மீன்பிடித்தல் உள்ளிட்டவற்றை ஒழுங்குப்படுத்த கடந்த 1983ம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன் பிடித்தல் ஒழுங்குமுறை சட்டம் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டம் அமலில் இருந்தபோதிலும், அதன் எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட போதிய ரோந்து கப்பல்கள், ஆட்கள் பலம் இல்லாதது போன்ற காரணங்களால் அதை தீவிரமாக அமல்படுத்த முடியவில்லை எனவும், சட்டவிரோத மீன்பிடி தொழிலாளர்களால் அதிகாரிகள் அச்சுறுத்தலுக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.
இதை தமிழக உள்துறை கூடுதல் செயலரிடம் மீன்வளத்துறை எடுத்துரைத்தது. அப்போது மீன்வளத்துறைக்கு தமிழ்நாடு கடல் மீன் பிடித்தல் ஒழுங்குமுறை சட்டத்தை அமல்படுத்த தனியாக அமலாக்க பிரிவு தேவை என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.

இதை பரிசீலித்த அரசு, கடல் அமலாக்க பிரிவு எனும் புதிய அமைப்பை உருவாக்க ஒப்புதல் அளித்தது. அதன்படி, காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவர் தலைமையில் 112 பேரை கொண்ட கடல் அமலாக்க பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இப்பிரிவுக்கு மொத்த நிதியாக 6 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டு, 2019-&20ம் ஆண்டு நிதியாண்டில் 4 கோடியே 78 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காவல்துறையினரே இப்பிரிவில் பணியாற்றுவர் என்ற போதிலும், கடல் அமலாக்க பிரிவுக்கான அடையாள சின்னத்தை அணிந்திருப்பார்கள் என மீன்வளத்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button