ஆஸ்திரேலியாவிலிருந்து நடராஜர் சிலையை மீட்ட பொன்.மாணிக்கவேல்!
37 ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை அருகே களவாடப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான, நடராஜர் சிலையை, சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலானாய்வு குழுவினர், ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து மீட்டு சாதனை படைத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்த கல்லிடைகுறிச்சியில் குலசேகரமுடையார் உடனுறை அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. பாண்டியர் காலத்தில் 700 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட இந்த கோவிலில் உற்சவ மூர்த்தியாக நடராஜர் சிலையை வைத்து பூஜைகள் நடந்து வந்தது.
கடந்த 1982 ஆம் ஆண்டு ஜூலை 6 ந்தேதி இந்த கோவிலின் இரும்புக்கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நடராஜர் , சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், திருவில்லி விநாயகர் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டுவரை வழக்கை விசாரித்தும் துப்பு துலக்க இயலாமல் வழக்கை மூடிவிட்டது காவல்துறை.
உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரி பொன் மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், இந்த சிலை திருட்டு வழக்கை தூசி தட்டி விசாரணைக்கு எடுத்தனர்.
வரலாற்று நூல்கள், பட்டயங்கள், கல்வெட்டுக்கள் மற்றும் அந்த கோவிலில் 1958ல் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கொண்டு சிலைகளை கண்டுபிடிக்கும் பணிகளை தீவிரப்படுத்தினர். இதில் இங்கு களவாடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியா நாட்டின் அடிலைடில் உள்ள ஆர்ட் கேலரி ஆப் சவுத் ஆஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
இந்த சிலை இந்தியாவில் தமிழகத்தின் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவிலில் இருந்து களவாடப்பட்ட சிலை என்பதை தொல்லியல் துறை நிபுணர் நாகசாமி ஆய்வு செய்து உறுதிபடுத்திய சான்று கடிதத்துடன் ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகத்துக்கு சிலைக் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரி பொன் மாணிக்கவேல் அனுப்பி வைத்தார். மேலும் திருட்டு பொருளை 17 ஆண்டுகளாக அருங்காட்சியகத்தில் வைத்திருப்பது தண்டனைக்கு உரிய குற்றம் என்பதையும் சுட்டிக்காட்டி தங்களிடம் சிலையை ஒப்படைக்க கோரி கடிதம் எழுதினார்.
இதையடுத்து சிலையை ஒப்படைக்க அருங்காட்சியக நிர்வாகம் ஒப்புக் கொண்டாலும், அதனை விமானம் மூலம் இந்தியாவிற்கு எடுத்து வர தமிழக அரசின் அனுமதிக்காக சிலைகடத்தல் தடுப்பு பிரிவினர் 300 நாட்களுக்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய துணை தூதர்கள் டாக்டர் காண்டேன் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரது உதவியால் நடராஜர் சிலையை அருங்காட்சியகத்தின் நிர்வாகி ராபின்சன் தனது சொந்த செலவில் இந்தியாவுக்கு விமானத்தில் அனுப்பி வைக்க சம்மத்தித்தார்.
அதன்படி ஆஸ்திரேலியாவில் இருந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்ட 30 கோடி ரூபாய் மதிப்புள்ள பழமையான நடராஜர் சிலை, சிலைகடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.
சிலை மீட்கப்பட்டது குறித்து சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஜ.ஜி பொன். மாணிக்கவேல் கூறுகையில், “சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். எங்கள் தரப்புக்காக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு நன்றி. தேவையான நேரத்தில் தேவையான செய்திகளை ஆன்மிகவாதிகளிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும் நன்றி. இந்த விவகாரத்தில் தமிழக அரசைக் குறை கூற விரும்பவில்லை. சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும் தமிழக அரசுக்கும் தகவல் பரிமாற்றத்தில்தான் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாம் கடவுளாக வணங்கும் சிலைகள் வெளிநாடுகளில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்க வேண்டும். தமிழக அரசு அதிகாரிகள் புரிந்து கொண்டு சிலைகளை மீட்க உதவ வேண்டும். எனது சொந்த ஓய்வூதியத்தில் பணி செய்கிறேன். இதனால், அகங்காரம் கொள்ளவில்லை. சிலையை விமானத்தில் கொண்டு வர, பணமில்லாத காரணத்தால் ரயிலில் சென்னை கொண்டு வந்தோம். இந்தச் சிலையுடன் அழகிய கலைநயமிக்க தூண்களும் ஆஸ்திரேலியாவில் உள்ளன. அவற்றையும் மீட்க வேண்டும்‘’ என்று தெரிவித்தார்.
காவல்துறையில் எண்ணற்ற வசதிகளை வைத்துக் கொண்டு முக்கிய வழக்குகளில் துப்பு துலக்க இயலாமல் திணறிவரும் சில போலீசாருக்கு மத்தியில் தன்னலமில்லாமல் தனிப்படையை வழி நடத்திச்சென்று பாரம்பரியம் மிக்க நடராஜர் சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து சாமர்த்தியமாக மீட்டு சாதித்து காட்டி இருக்கும், பொன்மாணிக்கவேலுவின் சிலை கடத்தல் தடுப்பு சிறப்பு புலனாய்வு குழுவினர் பாராட்டுக்கு உரியவர்கள்..!
டான்ஸிங் சிவா
நடராஜர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த அடிலெய்ட் ஆர்ட் கேலரி (Art Gallery of South Australia) ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பழைமையான மியூசியம் ஆகும். 1881-ம் ஆண்டு தொடங்கப்பட்ட, இந்த மியூசியத்தில் 45,000 கலைநயமிக்க பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மியூசியம் இது. இங்கு, ‘டான்ஸிங் சிவா’ என்ற பெயரில் இந்த நடராஜர் சிலை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
500 ஆண்டுகள் பழைமையான இந்தச் சிலை 1970-ம் ஆண்டு காணாமல் போனது. 1982-ம் ஆண்டுதான், வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சிலை அடிலெய்டில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வெண்கலத்தால் செய்யப்பட்ட 100 கிலோ எடை கொண்ட சிலையை அடிலெய்ட் ஆர்ட் கேலரியின் புரவலரான டயனா ராம்சே என்பவர் 4,36,000 அமெரிக்க டாலர்கள் கொடுத்து வாங்கியதாகச் சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு டயானா ராம்சே மறைந்துவிட்டார்.
- செந்தில்குமார்