தமிழகம்

சிசிடிவியில் சிக்காமல் சிறையிலிருந்து தப்பிய நைஜீரிய கைதி… : டெல்லியில் கைது செய்த தமிழக காவல்துறை..!

திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய குற்றவாளி ஒருவர் தப்பினார். சிறை மற்றும் சிறைக்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காத அவரை தமிழக போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மத்தியச் சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் இலங்கைத் தமிழர்கள், வங்கதேசத்தினர், நைஜீரியர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இதில், போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நைஜீரியாவை சேர்ந்த 32 வயதான ஸ்டீபன் பால் அப்புச்சியும் அடைக்கப்பட்ருந்தார்.

இவர் கடந்த ஜூலை 19ஆம் தேதி சிறப்பு முகாமிலிருந்து இருந்து தப்பிச் சென்றார். அன்று இரவு சோதனை செய்த போலீசாருக்கு ஸ்டீபன் பால் சிறப்பு முகாமில் இல்லாதது தெரிய வந்தது. இதை அடுத்து சிறப்பு முகாம் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் எதிலும் ஸ்டீபன் உருவம் பதிவாகவில்லை.
இதை அடுத்து சிறைக்கு வெளியே உள்ள போக்குவரத்து போலீசாரின் சிசிடிவிக்களில் பதிவாகியுள்ளதா? என பரிசோதித்தனர். அதிலும் ஸ்டீபன் உருவம் பதிவாகவில்லை. ஜூலை 19ஆம் தேதி மத்திய சிறை உள்ளே உள்ள சிறப்பு முகாமிற்குள் வந்த வாகனங்கள் குறித்து சோதனை செய்தனர்.

அதில் ஒரு தண்ணீர் லாரி வந்து சென்றது தெரிய வந்தது. விசாரணையில், தண்ணீர் லாரி அடியில் தொங்கியபடி ஸ்டீபன் தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கண்காணிப்பும், பாதுகாப்பும் மிகுந்த மத்திய சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பிச் சென்றது எப்படி என விசாரணை நடத்தப்பட்டது.
மாநகர காவல் ஆணையர் அமல்ராஜின் உத்தரவின்பேரில் தனிப்படையினர் ராஜஸ்தான், மும்பை என, 57 நாட்களாக ஸ்டீபனை தேடி வந்தனர்.

இதற்கிடையில் சென்னை புழல் சிறையில் ராஜஸ்தான் மாநில கொள்ளையன், போதை கும்பல் தலைவன் நாதுராம் உடன் பழக்கம் இருந்துள்ளது. அந்த கும்பலுடன் ஸ்டீபன் பால் தொடர்பில் இருந்து அவர்களுடன் இணைந்து போலி பாஸ்போட் எடுத்து போதை பொருட்களை சர்வதேச அளவில் கடத்துவதற்கு திட்டம் போட்டு இருந்தனர்.
தப்பியோடிய நைஜீரிய வாலிபர் பெங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் பதுங்கி இருப்பதாக அவ்வப்போது தகவல் வந்தது. தனிப்படை போலீசார் அந்த இடங்களுக்கு சென்ற போது அவர் தப்பியோடியபடி இருந்தார். தனிப்படை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதற்கிடையில் தான் நாதுராம் கொள்ளை கும்பலில் ஒருவரிடம் ஸ்டீபன் பால் செல்போனில் பேசிய தகவல் கிடைத்தது.

கடந்த 57 நாட்களுக்கு முன் சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளியின் புகைப்படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு, நாடு முழுவதும் அலைந்து திரிந்த காவல்துறைக்கு கைதியின் செல்போன் சிக்னல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அந்த தகவலை வைத்து விசாரித்த போது அவர் டெல்லியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. அங்குள்ள போலீசார் உதவியுடன் அவரை தனிப்படையினர் பிடித்தனர். அவரை கைது செய்து டெல்லியில் இருந்து திருச்சிக்கு ரயிலில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வர உள்ளனர். திருச்சி தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button