நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
உலகில் வேகமாக அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றான யானைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுக்காக ஆண்டுதோறும் ஆகஸ்டு 12 ஆம் நாள் உலக யானைகள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், காடுகளில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல், தந்தத்திற்காக வேட்டையாடப்படுதல், வாழ்விடங்கள் அருகுதல், வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல், மின்சார வேலிகள், தண்டவாளங்கள் , தோட்ட வெடிகள், உணவு வழங்கும் காடுகள் அழிக்கப்படுதல் உள்ளிட்ட மனிதர்களால் உருவாக்கப்படும் இன்னல்களால் யானைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் வெகுவாகக் குறைந்து வருவது பெரும்வேதனையளிப்பதாக உள்ளது.
விலங்கினங்களில் தனித்துவமிக்கச் சிறப்பு வாய்ந்த உயிரினம் யானை. மனிதர்களோடு நெருங்கிப் பழகும் தன்மை கொண்டது. உயிரினங்களில் அதிக நினைவுத்திறனும் உடையவை. யானைகள் காடுகளில் இருக்கும்போது, பெரிய மரங்களின் இளம் கிளைகளை ஒடித்து உணவாக உட்கொள்கின்றன. மேல்மட்ட கிளைகளை ஒடிப்பதால், சூரிய ஒளி அடர்ந்த காட்டின் தரையை அடைய முடிகிறது. தேவையான சூரிய ஒளி கிடைப்பதால், புற்கள் அதிகம் வளர்ந்து, தாவர உண்ணிகளுக்கு உணவாகின்றன. மேலும், கீழே விழும் இலை தழைகளையும் மற்ற தாவர உண்ணிகளான முயல், மான், காட்டெருமை போன்றவை உணவாக்கிக் கொள்கின்றன. தாவர உண்ணிகள் அதிகரிக்கும்போது ஊன் உண்ணிகளான சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்டவைகளுக்கு உணவு கிடைக்கின்றது. எனவே உணவுச்சங்கிலியில் யானைகள் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. யானைகள் ஒரு நாளில் 300 முதல் 350 வரை விதைகளை விதைக்கிறது. தன் வாழ்நாளில் சராசரியாக 18 இலட்சம் மரங்கள் வளரக் காரணமாக உள்ளது.
இத்தகைய பல்லுயிர்ச்சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த யானைகள் மனிதர்களின் தன்னலத்தால் அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றாக மாறிவிட்டது என்பதுதான் மறுக்கவியலா உண்மை. ஆதிகாலத்தில் உலகில் வாழ்ந்த 24 வகை யானைகள் இனங்களில் இதுவரை 22 வகைகள் அழிந்து தற்போது, உலகில் ஆப்பிரிக்கா, ஆசியா என இருவகை யானைகள் மட்டுமே உள்ளன.
1900 ஆம் ஆண்டுவாக்கில் ஒரு கோடியாக இருந்த யானைகளின் எண்ணிக்கை 1990-களில் பத்து இலட்சமாகக் குறைந்தது. தற்போது ஆப்பிரிக்காவில் 5 இலட்சம் யானைகளும் , ஆசியாவில் 1 இலட்சம் யானைகள் மட்டுமே உள்ளன. 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், இந்தியாவில் ஏறத்தாழ 31,000 யானைகளும் தமிழகத்தில் 3,500 யானைகளும் மட்டுமே எஞ்சியுள்ளன.
கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவில் 3000 யானைகள் வேட்டையாடப்பட்டு உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் மாதந்தோறும் 8க்கும் மேற்பட்ட யானைகள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பதாகவும், இதில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 17 யானைகள் உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாகவும் வெளியாகும் செய்திகள் பேரதிர்ச்சியைத் தருகின்றன.
யானைகளைப் பாதுகாக்கும் வகையில் வனங்களில் இயற்கை வளம் குன்றாமல் பாதுகாப்பது அவசியம் எனப் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு நிறுவனம் (மிஹிசிழி) எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு எத்தனை பாதுகாப்புச்சட்டங்கள் இயற்றியிருந்தாலும், அரசுசாரா நிறுவனங்களும் எவ்வளவோ முயற்சிகள் மேற்கொண்டிருந்தாலும், யானைகள் அழிக்கப்படுவதும் அழிவதும் குறைந்தபாடில்லை.
இயற்கைக்கெதிரான இந்நிலை தொடர்ந்தால் எதிர்வரும் காலங்களில் யானைகள் தினம் இருக்கும்; யானைகள் இருக்காது. மிருகக்காட்சி சாலைகளிலும், திரைப்படங்களிலும், புகைப்படங்களிலும் , புத்தகங்களிலும் மட்டுமே பார்க்கும் அரிய வகை உயிரினமாக யானைகள் மாறிப்போகும். ஏற்கனவே, மனிதர்களால் முற்றாக அழிந்துபோன உயிரினங்களால் புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம், பனிப்பாறைகள் உருகுதல், அதிக வறட்சி, குறுகிய நாளில் அதிக மழைப்பொழிவு, திடீர் புயல்கள் எனப் பல்வேறு இயற்கை சீற்றங்களை நாம் சந்தித்து வருகிறோம். பல்லுயிர்ச்சூழலில் உணவுச்சங்கிலி அறுபடாமல் பாதுகாக்கும் யானைகளின் அழிவு, அவற்றையெல்லாம் விடப் பல மடங்கு தாக்கத்தை, ஆபத்தைச் சூழலியலில் ஏற்படுத்தக் கூடியது என்றால் மிகையல்ல. ஆகவே, இவற்றையெல்லாம் உணர்ந்து மத்திய-மாநில அரசுகள், யானைகள், புலிகள் உள்ளிட்ட வன உயிரினங்களையும், அவற்றின் வாழ்விடங்களான காடுகள், மலைகள், ஆறுகள் உள்ளிட்டவற்றையும் பாதுகாக்கும் சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டுமே தவிர பன்னாட்டு பெருநிறுவனங்களின் வளவேட்டைக்காகத் தளர்த்திட முனையக்கூடாது. அது வனவிலங்குகளுக்கும் நாட்டின் வளங்களுக்கும் மட்டுமின்றி எதிர்காலத்தில் மனிதகுலத்திற்கே தவிர்க்கமுடியாப் பேராபத்தினை விளைவிக்கக் கூடும்.
மேலும், சூழலியல் பாதுகாப்பு குறித்த அரசின் சட்டங்களையும், செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிப்பதும், தவறான சட்டங்களை எதிர்த்துப் போராடுவதும், சரியான சட்டங்களை மதித்து முறையாகப் பின்பற்றுவதும் ஒவ்வொரு குடிமகனின் கடமை என்பதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். தன்னலம் விடுத்துத் தம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களையும், மலைகள், அருவிகள், ஆறுகள், காடுகள் உள்ளிட்ட இயற்கையின் பல்வேறு கூறுகளையும் நேசித்து, பாதுகாத்து இப்புவியை உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்ததாக அடுத்தத் தலைமுறைக்குக் கையளிப்பதே நம் ஒவ்வொருவரின் தலையாயக் கடமை என்பதை உணர வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- ராபர்ட்ராஜ்