ஒரே வீட்டைக் காட்டி பல லட்சம் மோசடி…
சென்னையில் குத்தகைக்கு வீடு பிடித்து தருவதாக கூறி ஒரு கும்பல் பண மோசடி செய்வதாக சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் அகர்வாலிடம் வீடியோ கால் மூலமாக புகார்கள் குவிந்தன. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து மோசடி கும்பலை தேடி வந்தனர்.
விசாரணையில் கிழக்கு தாம்பரம், அந்தோணி தெருவில் செயல்பட்டு வந்த சன் ஷைன் ப்ராப்பர்ட்டி டெவலப்பர் (Sun shine Property Developer) என்ற நிறுவனம் தான் வீடு வாடகைக்கு தேடி வரும் நபர்களை குறிவைத்து பல கோடி ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது. விசாரணை துவங்கியதிலிருந்து தலைமறைவாக இருந்த சன் ஷைன் ப்ராப்பர்ட்டி ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளரான ஈரோட்டை சேர்ந்த பிரகாஷ், நிறுவன நிர்வாகியான காயத்ரி மற்றும் காயத்ரியின் கணவரான விக்னேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் மோசடி அரங்கேற்றியது குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன தாம்பரம், சேலையூர், பம்மல், குரோம்பேட்டை, மடிப்பாக்கம், மேடவாக்கம், நன்மங்கலம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளில் வாடகைக்கு உள்ள வீடுகளை இவர்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.
பின்னர் அந்த வீட்டை குத்தகை மற்றும் மாத வாடகைக்கு விடுவதாக சமூக வலைதளங்கள் மற்றும் ஓ.எல்.எக்ஸ் 99acres.com, nobrokers.com போன்ற ரியல் எஸ்டேட் இணையதளங்களிலும் விளம்பரம் கொடுத்துள்ளனர். விளம்பரத்தை பார்த்து சன் ஷைன் நிறுவனத்தை நாடும் வாடிக்கையாளர்களிடம், தங்களை வீட்டு உரிமையாளர்கள் என போலி பத்திரங்கள் மூலம் அடையாளப்படுத்திக் கொண்டு, குத்தகை மற்றும் வாடகைக்கான சட்டப்படியான ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளனர்.
5 லட்சம் ரூபாய் முதல் 15 லட்சம் ரூபாய் வரையிலும் குத்தகைக்கு விட்டும், மாத வாடகையாக 10 ஆயிரம் ரூபாய் முதல் 20,000 ஆயிரம் ரூபாய் வரையிலும் வசூலித்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த நிறுவனம் இதுபோன்று ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வந்துள்ளது. வீட்டின் உரிமையாளர்களிடம் குறைவான வாடகையை கொடுத்தும், வாடிக்கையாளர்களிடம் அதிகமாக பணம் வசூலித்தும் இந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளது. பிரகாஷ் கும்பல் 2019 டிசம்பர் மாதம் வரை வீட்டின் உரிமையாளர்களுக்கு வாடகையை சரியாக கொடுத்து வந்துள்ளனர். 2020 ஜனவரி மாதம் முதல் வாடகை பணத்தை தராததால் வீட்டின் உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போதுதான் சன் ஷைன் நிறுவன உரிமையாளர்கள் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
வீட்டின் உண்மையான உரிமையாளர்களும், வாடகைக்கு குடியிருப்போரும் இந்த நிறுவனத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது நிறுவனத்தினர் தலைமறைவானதும் தெரியவந்தது. பிரகாஷ் கும்பல், 100 க்கும் மேற்பட்டோரிடம் இரண்டரைக் கோடி ரூபாய்க்கும் மேல் ஏமாற்றியுள்ளனர் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
மோசடி செய்த பணத்தை வைத்து சினிமா மற்றும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து பிரகாஷ் பணம் சம்பாதித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. வெள்ளைப்புறா, மஞ்ச குருவி ஆகிய படங்களில் பிரகாஷ் இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார் அதில் 40 லட்சம் ரூபாய் அளவில் முதலீடு செய்து பிரபல நடிகை நடிகர்களை வைத்து படம் எடுத்ததும் தெரியவந்துள்ளது.
- வேல்மணி