தமிழகம்

அரசு வேலைக்கு ஆர்டர் கொடுத்த போலி ஐஏஎஸ்..!

தமிழகத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டிக் கொண்டு தப்பி வந்த போலி ஐ.ஏ.எஸ் அதிகாரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

காலணா சம்பளமாக இருந்தலும் அது கவர்மெண்ட் சம்பளமாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் லட்சங்களைக் கொட்டி அரசு வேலை வாங்குவதற்கு என்று சிலர் குறுக்கு வழியில் முயன்று போலிகளிடம் பணத்தைப் பறிகொடுப்பது தற்போது அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் அரசு ஆசிரியராக சேர்ந்து பல லட்சங்களை சம்பாதித்து ஓய்வு பெற்ற ராமநாதபுரத்தைச் சேர்ந்த சேசுவடியான், டெய்சி தம்பதிகளுக்கு தங்கள் மருமகளையும் அரசுப் பணியில் சேர்க்க வேண்டும் என்று தீராத ஆசை இருந்துள்ளது.

இதனை பயன்படுத்திக் கொண்ட சென்னையைச் சேர்ந்த ஜார்ஜ் பிலிப் என்பவர் தனக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் உள்ளார், அவரிடம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் போதும் உடனடியாக அரசு வேலைக்கு அப்பாய்ண்ட் மெண்ட் ஆர்டர் கைக்கு வந்துவிடும் என்று ஆசைவார்த்தை கூறிள்ளார்.

இதற்கிடையே, சம்பவத்தன்று சுழல் விளக்கு வைத்த பொலிரோ ஜீப்பில் வந்த ஜார்ஜ் பிலிப், தன்னுடன் வந்த இளைஞர் ஒருவரை நாவப்பன் ஐ.ஏ.எஸ் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். பணத்தைக் கொடுத்தால் பணி ஆணை உடனடியாக கைக்கு வந்துவிடும் என்று அவர் சொன்னதை நம்பி, தனது மருமகள் உள்ளிட்ட 3 பேருக்கு அரசு வேலை வேண்டும் என மொத்தம் 15 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.

அதனை வாங்கிக் கொண்டு காரில் ஏறிய அந்த அதிகாரி மற்றும் ஜார்ஜ் பிலிப் ஆகியோர் அங்கிருந்து வேகமாக தப்பிச்சென்றுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ந்து போன டெய்சி, உடனடியாக ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரின் சிறப்பு பிரிவுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

எஸ்.பி உத்தரவின் பேரின் இராமநாதபுரம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். ஐ.ஏ.எஸ் அதிகாரி என பொலிரோ ஜீப்பில் தப்பிய நபர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த பொலிரோ ஜீப்பை சிறப்பு தனிப்படை சுற்றி வளைத்தது.

அதில் இருந்த ஜார்ஜ் பிலிப் மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று கூறிய நாவப்பன் உள்ளிட்ட இருவரையும் பிடித்து விசாரித்த போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஜார்ஜ் பிலிப் ஒரு மோசடி புரோக்கர் என்பதும், நாவப்பன் ஒரு போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி என்பதும் வெளிச்சத்திற்கு வந்தது.

திருவண்ணாமலையை பூர்வீகமாகக் கொண்ட நாவப்பன் என்கிற பிரகாசிடம் இருந்து ஏராளமான அரசு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. போலியாக முத்திரையிடப்பட்ட பணி ஆணைகளும் சிக்கின. செய்தித்துறை, சமூக நலத்துறை, வனத்துறை என பல்வேறு துறைகளில் பணியாற்ற ஏராளமான நபர்களுக்கு பணி ஆணை வழங்கி கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளான் என தெரிவிக்கும் போலீசார், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாதுகாப்புக்கு செல்லும் ஆயுதப்படை போலீசாருடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு, தன்னை ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி போல காட்டிக் கொண்டுள்ளான் நாவப்பன்… மேலும் கோயம்பேட்டில் செயல்பட்டுவரும் தொலைக்காட்சி ஒன்றிலும் நெருங்கிய நண்பர் ஒருவரும் இவனுக்கு இருந்துள்ளார். அவர் மூலமாக அரசு செய்தி குறிப்பு நகல்களை சேகரித்துள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு தொடர்பான தனி நபர் விசாரணை ஆணையத்தின் சம்மன் கூட அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. மோசடி செய்த பணத்தில் சினிமா தயாரிக்கப் போவதாக கூறி பல நடிகர்களை அழைத்து, தனது பிறந்த நாளுக்கு உற்சாகமாக பார்ட்டி கொடுத்த புகைப்படங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஏராளமான சின்னத்திரை நடிகைகளுடன் ஊர் ஊராக சுற்றி இருப்பதும், அதற்கு ஆதாரமாக 10க்கும் மேற்பட்ட நடிகைகளுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களும் ஸ்மார்ட் போனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வேட்டையாடு விளையாடு படத்தில் வருவது போன்று ஒரு இளைஞருடன் கூட்டுச் சேர்ந்தே இந்த சேட்டைகளை அவர் செய்திருப்பதாக கூறப்படுகின்றது. பொலிரோ ஜீப்பிற்கு அவனை ஓட்டுனராக வைத்திருந்த நாவப்பன், 50க்கும் மேற்பட்டவர்களிடம் அரசு வேலைவாங்கி தருவதாக கூறி பணம் பறித்ததாக தெரியவந்துள்ளதால் தீவிர விசாரணை நடந்து வருகின்றது.

அதேநேரத்தில் தன்னை ஐ.ஏ.எஸ் அதிகாரி என்று நம்பவைக்க கலெக்டர் அலுவலகம் போன்றே செட் போட்டு புரோக்கர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்கள் மூலமாக இந்த வேலை வாய்ப்பு மோசடியை அரங்கேற்றியதாக கூறப்படுகின்றது.

படித்து நியாயமான வழி செல்லாமல் குறுக்குவழியில் வேலைவாய்ப்பை தேடினால் சேர்த்து வைத்திருக்கும் பணம், நாவப்பன் போன்ற மோசடி பேர்வழிகளின் கைக்கு தான் போகும் என்பதற்கு சாட்சியாக நடந்துள்ளது இந்த மெகா மோசடி சம்பவம்.

  • உதுமான் அலி

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button