திருப்பூரில் பெண் சமூக ஆர்வலர் உயிருக்கு ஆபத்து..!.?
திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நெருப்பரிச்சல் கிராமம் 5 வது மற்றும் ஆறாவது வார்டு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 300 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியார் வசமிருந்து மீட்டெடுக்கப்போவதாக பெண் சமூக ஆர்வலர் போராட்டக்களத்தில் குதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை நிலவுவதால் தனது உயிருக்கு ஆபத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியிட்டிருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெருப்பரிச்சல் பகுதியில் வசித்து வருபவர் புஷ்பராணி(46), மக்கள் சட்ட உரிமை சமூக சேவை இயக்கத்தின் நிர்வாகியாகியாக பல்வேறு சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட நெருப்பரிச்சல் கிராம எல்லைக்குட்பட்ட 5 வது மற்றும் 6 வது வார்டு, வாவிபாளையம், பூலுவபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோடிக்கணக்கான மதிப்பிலான சுமார் 300 ஏக்கர் அரசுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரம்மிப்பாளர்கள் பிடியில் சிக்கியுள்ளதாகவும், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நிலங்களை ஆக்கிரமிப்பாளர்கள் சிறிது சிறிதாக ரியல் எஸ்டேட் உரிமையாளர்களிடம் விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்துள்ளார்கள். எனவே மேற்படி நெருப்பரிசல் கிராமத்திற்குட்பட்ட அரசு புறம்போக்கு நிலத்தை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு நிலங்களை மீட்டு வீடில்லா ஜனங்களுக்கு நிலம் வழங்கக் கோரி புஷ்பராணி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார்.
மேற்படி சம்பவம் குறித்து புஷ்பராணி கூறும் போது தான் சார்ந்த இயக்கம் மூலமாக போராடி தகவல் தரும் உரிமை சட்டத்தில் தகவல் பெறமுடியாமல் வழக்கறிஞர் மூலமாகத்தான் தகவல்களை பெற்றுள்ளதாகவும், அரசு புறம்போக்கு நிலங்களை மீட்க நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் தனது போராட்டத்தை தடுத்து நிறுத்த பல்வேறு தரப்பினர் தடைகள் ஏற்படுத்திவருவதாகவும், சமீபத்தில் நடந்த சம்பவத்தின் தன் மீது கவுன்சிலர் ஒருவர் தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாகவும், எனவே இந்த போராட்டத்தின் காரணமாக தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக புஷ்பராணி தெரிவித்தார்.
மேலும் புஷ்பராணியின் புகார் குறித்து வருவாய்துறையினரிடம் கேட்டபோது அவரிடம் இருந்து இது வரை எந்த புகாரும் வரவில்லை எனவும், அனுமதியின்றி நீர் நிலையை ஆக்கிரமித்துள்ளதாக கூறிய புகாருக்கு உரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தனர். மேலும் 300 ஏக்கர் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்பு குறித்த புகாருக்கு மறுப்பு தெரிவித்த வருவாய்துறையினர் அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசைமாற்று வாரியம் சார்பில் அடுக்குமாடிக்கட்டிடம் கட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.
எது எப்படியோ நெருப்பெரிச்சல் கிராமத்தில் நெருப்பில்லாமலா புகையும் ? பெண் சமூக ஆர்வலர் புஷ்பராணியின் முயற்சியால் அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டால் – துணை போனவர்களின் நிலை ????