எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வினர், தங்களின் கட்சிக்கொடிகளைக் கட்டியதால், இருதரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க நிறுவனருமான எம்.ஜி.ஆர் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளையொட்டி, அ.தி.மு.க-வினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். சிலை இல்லாத இடங்களில், அ.தி.மு.க-வினர் அவரது உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்துவார்கள். தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அதன்படி, விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு, அ.தி.மு.க-வினர் மற்றும் அ.ம.மு.க-வினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்த வந்தனர். அப்போது, சிலையின் மேல் கொடி கட்டுவதில் அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க-வினர் இடையே தகராறு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு சிலரை போலீஸார் பிடித்துச்சென்றனர். பின்னர் எச்சரிக்கை செய்து போலீஸார் அவர்களை விடுவித்தனர்.
மாலை அணிவிப்பதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில், எம்.ஜி.ஆர் சிலையைச் சுற்றி கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற அ.ம.மு.க-வினர், தங்கள் கட்சிக்கொடியை எம்.ஜி.ஆர் கையில் வைத்தனர். இதற்கு, எங்கள் கட்சித் தலைவரின் கையில் உங்கள் கட்சிக்கொடியை வைக்கக் கூடாது என அ.தி.மு.க-வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, சிலையின் மேலே இருந்த அ.தி.மு.க கொடியையும் அ.ம.மு.க-வினர் அகற்றினர். இதனால், இருதரப்பினரிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு எச்சரிக்கை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர். யாரும் கைதுசெய்யப்படவில்லை. சம்பவ இடத்தில், கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்தனர்.
ஒரே நேரத்தில் இருதரப்பினரும் மாலை அணிவிக்க வந்ததால் இந்தத் தகராறு ஏற்பட்டது. இரண்டு தரப்பினருக்கும் வெவ்வேறு நேரம் கொடுத்திருந்தால், இந்தப் பிரச்னை ஏற்படாமல் போலீஸார் தடுத்திருக்கலாம்.