
பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று “ட்ரீம் கேள்” என்கிற படம் வெளியாவதாகவும், அந்தப் படத்தில் நாயகியாக சண்டை கலைஞர் ஜஸ்டின் பேத்தியும், நடிகை பபிதாவின் மகளுமான ஹரிஸ்மிதா நடிக்கிறார் என படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதனைத்தொடர்ந்து நடிகை பபிதா, எனக்கு ஒரு மகள், ஒரு மகன் மட்டுமே, ட்ரீம் கேள் படத்தின் நாயகி யாரென்று தெரியாது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எனது அம்மா என பலபேர் கிளம்பி வந்ததுபோல், எனது மகள் என கிளம்பி உள்ளனர். இனிமேல் எனது பெயரை பயன்படுத்தினால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்வேன் என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நடிகை பபிதாவின் அறிவிப்பு சம்பந்தமாக கலைத்துறையினர் மத்தியில் விசாரித்தபோது, நாயகன், பவுணு பவுணு தான், வைதேகி காத்திருந்தாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பபிதா. எம்ஜிஆரின் உதவியாளரும், சண்டை கலைஞருமான ஜஸ்டின் மகள், இவரது கணவரும் ஒரு சண்டை கலைஞர்தான். இவர்களுக்கு லக்ஷா, ஹரிஸ்மிதா என்கிற இரு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்டது. இரண்டாவது மகள் ஹரிஸ்மிதா விமானப் பணிப்பெணணாக வேண்டும் என்கிற கனவோடு முயற்சித்து வந்துள்ளார்.

இந்நிலையில், தாய் பபிதாவுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து சென்று தனக்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளார். அதன்பிறகு தனக்கு கிடைத்த சினிமா வாய்பை பயன்படுத்தி, சினிமா உலகில் தாயை மிஞ்சிய நடிகையாக புகழ்பெற வேண்டும் என்கிற லட்சியத்தோடு, நடிக்கவும் தொடங்கியுள்ளார். அவர் கதாநாயகியாக நடித்த “ட்ரீம் கேள்” திரைப்படம் காதலர் தினத்தில் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
என்னதான் கோப தாபங்கள் இருந்தாலும், பெற்ற மகளையே தன் மகள் இல்லை என்று கூறுவது இன்றைய காலகட்டத்தில் இயல்புதான் என்றாலும், பபிதா தன்னை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டு அறிக்கை வெளியிட்டதுதான் அதிமுகவினர் மத்தியிலும், கலைத்துறையினர் மதத்திலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, கட்சி கூட்டங்களுக்கு முன்புபோல் பபிதாவை அதிகமாக யாரும் அழைப்பதில்லை. தன் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே குடும்ப பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக மாற்றி, விளம்பரம் தேடியுள்ளார். அதோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லை, அதிமுகவினர் தெய்வமாக வணங்கும் அம்மாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியிருப்பதை கட்சித் தொண்டர்களும், நிர்வாகிகளும் மன்னிக்க மாட்டார்கள் என ஆதங்கத்துடன் பேசினர்.
இதுசம்பந்தமாக நடிகை பபிதாவை தொடர்புகொண்டு விளக்கம் கேட்பதற்காக முயற்சித்தபோது, அழைப்பை ஏற்கவில்லை. மேலும், ஹரிஸ்மிதா, இயக்குநர், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளின் கருத்துக்களோடு வரும் இதழில் விரிவாக பார்க்கலாம்…



