சமூக வலைதள குற்றங்களுக்கு எதிராகப் போராடும் பெண் பத்திரிகையாளர்.!.? “ராங்கி” படத்தின் திரைவிமர்சனம்

லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், சரவணன் இயக்கத்தில், த்ரிஷா நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் “ராங்கி”.
கதைப்படி…. இணையதள பத்திரிகையாளராக பணியாற்றும் தையல் நாயகி ( த்ரிஷா ) தவறுகளை சுட்டிக் காட்டி மிகவும் தைரியமான பெண் பத்திரிகையாளராக வலம் வருகிறார். இவரது செயல்பாடுகளைப் பார்த்து இவரைப் போல் வரவேண்டும் என ஆசைப்படுகிறார் இவரது அண்ணன் மகள் சுஷ்மிதா.

இந்நிலையில் சுஷ்மிதா பெயரில் போலியான முகநூல் கணக்கு இயங்கி வருகிறது. அதில் சில அருவருக்கத்தக்க சில வீடியோக்கள் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனைப் பார்த்த சில ஆண்கள் கவர்ச்சிகரமான உரையாடல்களை பதிவேற்றம் செய்கின்றனர். அதில் ஒருவன் சுஷ்மிதா வின் தந்தைக்கு சில வீடியோக்களை அனுப்பி மிரட்டும் தொனியில் பேசியதாக தையல் நாயகியிடம் கூறுகிறார் அவரது அண்ணன்.
இந்த விஷயத்தை தையல் நாயகி கையிலெடுத்து இதில் தொடர்புடைய அனைவரையும் வரவழைத்து மிகவும் முதிர்ச்சியான முறையில் கையாள்கிறார். அதன்பிறகு அதில் தொடர்புடைய லிபியாவைச் சேர்ந்த ஆலிம் என்கிற நபருடன் உரையாடத் தொடங்குகிறாள் தையல் நாயகி.

சுஷ்மிதா என நினைத்து அவனும் உரையாடத் தொடங்குகிறான். இருவரும் பல்வேறு தகவல்களை பரிமாறிக் கொள்ளும் போது ஆலிம் தனது நாட்டின் எண்ணெய் வளத்தை சூரையாட நினைக்கும் வல்லரசு நாடுகளின் ஏஜெண்டுகளிடம் இருந்து தனது நாட்டைப் பாதுகாக்க போராடும் போராளி என கூறுகிறான். அவன் மீது பரிதாபப் படுகிறாள் தையல் நாயகி. அப்போது அவன் அனுப்பிய போட்டோவை தையல் நாயகி தனது இணையதளத்தில் பதிவிட அது வைரலாகி பிரச்சனையாகிறது.

பின்னர் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களைப் பிடிப்பதற்கு தையல் நாயகியையும், அவரது அண்ணன் மகள் சுஷ்மிதாவையும் பகடைக்காயாக பயன்படுத்துகிறார்கள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள். இதிலிருந்து தையல் நாயகியும், சுஷ்மிதாவும் மீண்டார்களா ? யார் அந்த தீவிரவாதி ஆலிம் ? என்பது மீதிக்கதை….
சமூக வலைதளங்களில் இளம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், சர்வதேச எண்ணெய் வள அரசியலையும் ஒருங்கிணைத்து சுவாரஸ்யமான திரைக்கதையிடன் அற்புதமாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். பெண் பத்திரிகையாளராக த்ரிஷா பேசும் வசனங்கள் ரசிக்கும்படியாக அமைந்துள்ளது.
இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது.