ஊரடங்கு தளர்வினால் கொழுக்குமலையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு : இயல்பு நிலைக்கு திரும்பிய சுற்றுலா சார்ந்த தொழில்கள்
தேனி மாவட்டம், போடி ஒன்றியம் கொட்டக்குடி ஊராட்சியில் கொழுக்குமலை அமைந்துள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இப்பகுதியில் பார்க்கும் இடம் எல்லாம் உயர்ந்த மலைக்குன்றுகள், பசுமையான தேயிலைத் தோட்டங்களுமாக காட்சி அளிக்கின்றன. தொட்டுவிடும் தூரத்தில் கடந்து செல்லும் பனிமூட்டங்களும், மேகக்கூட்டங்களும் எவரையும் வசீகரிக்கும் தன்மை கொண்டது.
இங்கு ஆங்கிலேயர் காலத்தில் 1935ம் ஆண்டில் அமைக்கப்பட்ட தேயிலைத் தொழிற்சாலை இன்னமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்காக சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் தேயிலைகள் விளைவிக்கப்படுகின்றன. கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இப்பகுதி, உலகிலேயே தேயிலை விளையும் உயரமான இடம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. எவ்வித ரசாயனமும் இன்றி தேயிலைகள் விளைவிக்கப்படுவது இதன் மற்றொரு சிறப்பு ஆகும். இங்கு டாப்ஸ்டேஷன், குரங்கணி உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களும் உள்ளன. இருப்பினும் கொழுக்குமலையில் டென்ட் (கூடாரம்) அமைத்து தங்கும் வசதி அளிக்கப்படுவது சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வருகிறது. இதற்காக 25-க்கும் மேற்பட்ட டென்ட்கள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன.
எஸ்டேட் பகுதி என்பதால் வனவிலங்குகள் தொந்தரவு இருப்பதில்லை. பாதுகாவலர்கள் இருவர் இப்பகுதியில் இரவு முழுவதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு கொண்டே இருக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் சீரியல் லைட்டுகளும், பாடல்களும் ஒலிபரப்பப்படுகின்றன. இதனால் ஆடல், பாடல் என்று உற்சாகத்துடன் இரவுப்பொழுதைக் கழிக்கின்றனர். காலை மற்றும் இரவு உணவு வசதியும் இங்குள்ளது.
கொழுக்குமலை அருகில் வனத்துச் சின்னப்பர் தேவாலயம் அருகே “சன்ரைஸ் பாய்ன்ட்” உள்ளது. கேரள எல்லையில் உள்ள இப்பகுதி சூரிய உதயத்தை பார்ப்பதற்கு ஏற்ற இடமாக அமைந்திருக்கிறது. ஒருபக்கம் மலைச்சரிவும், அருகிலேயே பள்ளத்தாக்கும் எதிரே செங்குத்தான மலைகளும் இங்கு அமைந் துள்ளன. மலைகளின் பின்னணியில் எழும் சூரியன் பள்ளத்தாக்கில் மேவிக் கிடக்கும் பனியை பொன்னிறமாக சிவக்க வைக்கும் காட்சி பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. செவ்வானத்தில் இருந்து பனிமூட்டத்தை கீறிக்கொண்டு பயணிக்கும் சூரியக்கதிர்களை காண்பதற்காகவே விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகின்றனர்.
கடந்த ஓராண்டாக கொரோனா ஊரடங்கினால் முடங்கிக் கிடந்த பலரும் தற்போது இப்பகுதிக்கு அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக சென்னை, பெங்களூரூ மற்றும் வடமாநில சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகம் உள்ளது. குரங்கணிக்கு மிக அருகில் அமைந்திருந்தாலும் வனப்பகுதி குறுக்கிடுவதால் சாலை வசதி இல்லை. எனவே போடிமெட்டு, சூரியநல்லி வழியாகத்தான் கொழுக்குமலை செல்லமுடியும்.
சூரியநல்லியில் இருந்து 10 கிமீ தூரம் இங்குள்ள பிரத்யேக ஜீப் மூலம்தான் பயணிக்க முடியும். இதற்காக ஜீப்பிற்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் பெறப்படுகிறது. 4 பேர் வரை பயணிக்கலாம். தனியார் தோட்டச் சாலை வழியேதான் கொழுக்குமலைக்கு பாதை செல்கிறது. எனவே ஜீப் டிரைவர்கள் ஒருமுறை சென்று திரும்ப ரூ.200 சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்குச் செலுத்துகின்றனர்.
டென்ட்டில் தங்குதல், இருவேளை உணவு என்று ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. நிர்ணயக் கட்டணமாக இல்லாமல் சீசன், விடுமுறை நாட்களுக்கு தக்கவாறு கட்டணம் மாறுபடுகிறது. வியூ பாய்ன்ட் எனும் இடத்தில் இருந்து கொட்டக்குடி, குரங்கணி, போடி உள்ளிட்ட ஊர்களை பார்க்க முடியும். மேலும் எக்கோ பாய்ன்ட், தியானப் பாறைகள், சிங்கம் போன்ற முகமுடைய பாறை உள்ளிட்ட இடங்களும் உள்ளன. வனத்துறை உதவியுடன் மலை ஏற்றத்திற்கும் செல்லலாம்.
செந்நாய், மிளா மான், காட்டுமாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரங்களில் இப்பகுதிக்கு வருவதுண்டு. எனவே இரவுப் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளதுடன், டென்ட், தங்கும் விடுதிகளில் இருந்து இரவு வெளியே வரவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இயந்திரத்தனமான வாழ்க்கைச் சூழல், பணிச் சுமை, மன அழுத்தம் உள்ளிட்டவற்றில் சிக்கித் தவிப்பவர்களுக்கு இப்பகுதி உற்சாக மனோநிலையை ஏற்படுத்தி விடுகிறது. எனவே இது சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் முக்கியத் தலமாக மாறியுள்ளது. இது குறித்து ஜீப் டிரைவர் தங்கம் கூறுகையில், கரோனா ஊரடங்கினால் முடங்கிக் கிடந்த பலரும் தற்போது சுற்றுலா செல்லும் ஆர்வத்தில் உள்ளனர். இப்பகுதியில் மலைசார்ந்த பனிச்சூழல் உள்ளதால் பலரும் இங்கு சுற்றுலா வர விரும்புகின்றனர். குறிப்பாக புதிதாக திருமணமானவர்கள், மெட்ரோ சிட்டியில் வேலை பார்க்கும் ஆண், பெண்கள் தங்கள் நண்பர்களுடன் அதிகம் வருகின்றனர்.
வேறு எங்கும் காணக்கிடைக்காத இயற்கைக் காட்சிகள், பனிமேவிய பள்ளத்தாக்கு பகுதியில் சூரிய உதயம் போன்றவற்றைக் காண தற்போது சனி, ஞாயிறுகளில் அதிக கூட்டம் வருகிறது என்றார்.
தற்போது கொழுக்குமலையில் ரம்மியமான சூழ்நிலை நிலவுவதால் சுற்றுலா சார்ந்த ஜீப், ரிசார்ட்ஸ், ஓட்டல் உள்ளிட்ட தொழில்களும் களைகட்டியுள்ளன.
அதிக உயரத்தில் இந்த மலைப்பகுதி உள்ளதால் ஆக்சிஜன் குறைவாகவே இருக்கும். எனவே முதியவர்கள் உரிய முன்னேற்பாடுகளுடன் இங்கு செல்வது நல்லது. மேலும் பனியும், குளிரும் அதிகமாக இருப்பதால் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள், குளிரை எதிர்கொள்ளும் தன்மை குறைந்தவர்கள் உரிய மருத்துவக் கருவிகளுடன் இங்கு செல்வதே சிறந்தது.
-A.முகமது ஆரிப்