ஈரோட்டில் குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல்..!
ஈரோடு அருகே குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை பேரூராட்சியின் 15வது வார்டு பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் பல ஆண்டுகளாக விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக முறையாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த 300க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் காங்கேயம் – பெருந்துறை நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னிமலை பேரூராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பவானியில் இருந்து நாள்தோறும் 23 லட்சம் லிட்டர் அனுப்பப்படும் நிலையில், தற்போது வெறும் 13 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். குடிநீர் வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்து சென்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி நிர்வாக பொறியாளர் லலிதாம்பாள் சென்னிமலை காவல் ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் ஒரு வார காலத்தில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.