தமிழகம்

பட்ஜெட்டில் பணி நிரந்தரம்! விடியலுக்காக காத்திருக்கும் பகுதிநேர ஆசிரியர்கள்

10 ஆண்டாக திமுக பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரிக்கையை சட்ட சபையிலும், பொது வெளியிலும் ஆதரித்து வந்துள்ளது. இப்போது முன்பு சொன்னதை நிறைவேற்றி தருகின்ற ஆளும் கட்சியாக உள்ளது. இதனால் பணி நிரந்தரம் செய்ய பகுதிநேர ஆசிரியர்கள் வேண்டுகோள் வைத்து வருகிறார்கள். தற்போதுள்ள விதிமுறையை திருத்தி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இல்லையெனில் சிறப்பாசிரியர்கள் நிலையில் பணியில் அமர்த்தி புதிய அரசாணையை அமுல்ப்படுத்த வேண்டும் என பகுதி நேர ஆசிரியர்கள் தரப்பில் தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

பொதுவாகவே திமுக ஆட்சி காலங்களில் தற்காலிக பணியாளர்கள் லட்சக்கணக்கானோர் பல்வேறு துறைகளில் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள்.பள்ளிக் கல்வித்துறையிலும் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்த 50ஆயிரம் அனைத்துவகை ஆசிரியர்கள் (இடைநிலை,பட்டதாரி, முதுகலை மற்றும் சிறப்பாசிரியர்கள்) கலைஞர் ஆட்சியில் ஒரே ஆணையில் நிரந்தரம் செய்யப்பட்ட வரலாறு இருக்கிறது.

கிட்டத்தட்ட 5ஆயிரம் பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் இருந்து பின்னர் நிரந்தரம் செய்து பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து வரும் வரலாறும் உள்ளது.அதுபோலவே, பள்ளிக்கல்வி துறையில் கணினி அறிவியல், உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல் திறன் கல்வி போன்ற கல்வி இணைச் செயல்பாடு பாடங்களில் 16ஆயிரம் ஆசிரியர்கள் பகுதி நேரமாக கடந்த 2012 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டு, தற்போது ரூபாய் 10 ஆயிரம் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிவரும் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் அனைவரும் திமுக தேர்தல் அறிக்கையின் படி வருகின்ற பட்ஜெட்டில் நிரந்தரம் செய்யப் படுவோம் என்ற எதிர்பார்ப்பில் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

உங்கள் தொகுதி ஸ்டாலின் விடியலை தேடி நிகழ்ச்சியில் திமுக ஆட்சிக்கு வந்த உடனே பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வோம் என தருமபுரி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் வாக்குறுதியை பகுதிநேர ஆசிரியர்களிடம் நேரிடையாக எதிர்கட்சி தலைவராக இருந்தபோதே கொடுத்து இருந்தார். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற இடங்களில் எல்லாம் பொது மக்களைப் போலவே, பகுதிநேர ஆசிரியர்களும் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இவை அனைத்தும் நிறைவேற்றப்படும் என சொல்லப்பட்டது. திமுக ஆட்சி அமைந்ததும் இதற்காகவே உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற துறையும் உருவாக்கப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் போது, பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து கவலை அடைந்து வருகிறார்கள்.

அதேசமயம், திமுக அரசின் முதல் சட்டசபை ஜூன் மாதம் நடந்தபோது முதல்வர் தேர்தல் வாக்குறுதி அனைத்தும் நிறைவேற்றப்படும் என உரையாற்றி உள்ளார். அதோடு செப்டம்பர் மாதம் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் அரசாணைகளாக வரவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டியில் பகுதிநேர ஆசிரியர்களை தேர்தல் அறிக்கையின்படி நிரந்தரம் செய்வோம் என பலமுறை தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், வருகின்ற பட்ஜெட்டில் இடம்பெறும் கோரிக்கைகளில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரமும் சேர்க்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலையும் கூட அது தான்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:

“கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில் 181வது உறுதிமொழியாக பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என குறிப்பிட்டிருந்தது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் திமுகவின் 505 தேர்தல் வாக்குறுதிகளில் 300க்கும் மேல் நிறைவேற்றி சாதனை புரிந்து உள்ளார்.ஆனால், 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரமான 181வது உறுதிமொழி வாய்மொழி அறிவிப்பாகவே உள்ளதால், இலவு காத்த கிளியாக தவித்து வருகிறார்கள். எனினும், தொடர்ந்து கோரிக்கையை எல்லா வழியிலும் வலியுறுத்தி வருகிறோம்.

அந்த வகையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள், அரசு நிகழ்ச்சிக்காக கடலூர், விழுப்புரம், திருவாரூர், கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, மதுரை, திருப்பூர், திருவள்ளூர், திருச்சி மாவட்டங்களுக்கு வந்தபோது பகுதி நேர ஆசிரியர்களின் பணி நிரந்தரம் தொடர்பாக கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம். அதுபோலவே மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சரிடம் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், திருப்பத்தூர், சேலம், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திருவாரூர் மாவட்டங்களில் நேரில் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தி வருகிறோம். மேலும் பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் சென்னை பள்ளிக்கல்வி வளாகத்தில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி நடந்த கலந்தாலோசனைக் கூட்டத்திலும் பணி நிரந்தரம் தொடர்பாக வலியுறுத்தியதுடன் மனுவும் அளிக்கப்பட்டுள்ளது. மக்களை தேடி முதல்வர் என்ற சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்த தஞ்சாவூர், தருமபுரி, திருவாரூர், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பணி நிரந்தரம் தொடர்பான கோரிக்கை மனு கொடுத்து உள்ளோம்.

அரசு தலைமை கொறடா, அனைத்து துறை அமைச்சர்கள் மற்றும் திமுக எம்எல்ஏக்கள், கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்து வருகிறோம். இதோடு, தபால், ஈமெயில், ட்விட்டர் மூலமாக கோரிக்கை அனுப்பி வலியுறுத்தி வருகிறோம். இது ஒருபுறமிருக்க, கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த பட்ஜெட் சட்டசபை கூட்டத்தொடரில் கொ.ம.தே.கட்சி பொதுச்செயலாளர் திருச்செங்கோடு எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் மற்றும் பாமக தலைவர் பெண்ணாகரம் எம்எல்ஏ கோ.க.மணி ஆகியோர் பணி நிரந்தரம் கேட்டு பேசி கோரிக்கை வைத்து உள்ளனர். அதுபோல 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த சட்டசபையில் த.வா.கட்சித் தலைவர் பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் மற்றும் மா.கம்யூனிஸ்ட் கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ மா.சின்னதுரை ஆகியோர் பணி நிரந்தரம் கேட்டு கோரிக்கை வைத்து உள்ளார்கள்.

மேலும் இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஒரத்தநாடு எம்எல்ஏ ரெ.வைத்திலிங்கம் பணி நிரந்தரம் குறித்து கேள்வி எழுப்பினார்.அப்போது பதில் தெரிவித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தேர்தல் அறிக்கையின்படி நிரந்தரம் செய்வோம் என்றார். தற்போது 12 ஆயிரம் பேருக்கும் ரூ.10 ஆயிரம் சம்பளம் கொடுக்க அரசுக்கு மாதம் ரூ.12 கோடி செலவாகிறது. இதை இடைநிலை ஆசிரியர் நிலையில் பணியமர்த்த மாதம் ஒன்றுக்கு மேலும் ரூ.20 கோடி செலவிட நேரும். ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு 300 கோடி ஒதுக்கினால் போதுமானது. இதை இந்த வேலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் விதவைகள், ஏழைகள் நிலை உயர அரசு மனிதாபிமானத்தோடு செய்ய வேண்டுகிறோம்.

அதேவேளையில் கடந்த முறை பட்ஜெட் மானிய கோரிக்கையில் கதர் கைத்தறி துறையில் தொகுப்பு ஊதியத்தில் பணிபுரிந்தோரை நிரந்தரம் செய்ய அறிவிக்கப்பட்டது.வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலர்கள் நிரந்தரம் என்று அறிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறையில் சிவாச்சாரியர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் நிரந்தரம் என அறிவிக்கப்பட்டது. முதல்வர் பதவி ஏற்கும் முன்பே கடந்த ஆண்டு மே 3ம் தேதி அன்று சுகாதாரத் துறையில் 1,212 ஒப்பந்த செவிலியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைப் போலவே, அரசின் கொள்கை முடிவில் பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரிக்கை தாயுள்ளதோடு சேர்த்து, இம்முறை நடக்கும் பட்ஜெட்டில் அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் குடும்பங்களுக்கு விடியல் தர வேண்டுகிறோம் என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button