ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு அக்ரிமெண்ட் – பல்லடத்தில் வைரலான ஒப்பந்தப் பத்திரம்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவிற்குட்பட்ட கரைப்புதூர் ஊராட்சி, தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய கிராம ஊராட்சியாகவும், மாநிலத்திலேயே அதிக வருவாயை ஈட்டுத்தருவதில் இரண்டாவது இடத்திலும் உள்ளது. சுமார் 25 கிராமங்களை உள்ளடக்கிய இந்த ஊராட்சியில் பிரபலமான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும், மிகப்பெரிய சாய சலவை ஆலைகளும் செயல்பட்டு வருவதால் தொழிற்சாலைகளும் அதனை சார்ந்த லட்சக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்களும் உள்ளனர்.
15 வார்டுகளை உள்ளடக்கிய கரைப்புதூர் ஊராட்சியில் சுமார் 30 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஊராட்சித்தலைவர் பதவியை அதிமுக தக்கவைத்துள்ளது. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த கிராம பஞ்சாயத்து தேர்தலில் அதிமுக வைச்சேர்ந்த ஜெயந்தி கோவிந்தராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் கரைப்புதூர் ஊராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் 7 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரசும், 1. வார்டில் கொ.ம.தே.கவும், 1 வார்டில் மதிமுக என திமுக கூட்டணி 9 வார்டுகளிலும், அதிமுக 4 வார்டுகளிலும், சுயேச்சை 2 வார்டுகளிலும் வெற்றிபெற்றனர்.
இந்நிலையில் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்காக திமுகவைச்சேர்ந்த 4 வது வார்டு உறுப்பினர் கார்த்திகா ம்கேஷ்வரனும் அதிமுக சார்பில் 9 வார்டில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட உமா மகேஷ்வரியும் போட்டியிட்டனர். முடிவில் 9 வாக்குக்கள் பெற்று திமுக வைச்சேர்ந்த கார்த்திகா மகேக்ஷ்வரன் வெற்றிபெற்றார். இந்நிலையில் தேர்தல் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் திடீர் திருப்பமாக சமூக வளைதளங்களில் கரைப்புதூர் ஊராட்சி துணைத்தலைவர் தேர்வில் கடந்த 10.01.2020 அன்று 20 ரூபாய் பத்திரத்தில் எழுதப்பட்ட அக்ரிமெண்ட் டாக்குமெண்ட் வைரலாக பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதில் தற்போதைய துணைத்தலைவர் கார்த்திகா மகேக்ஷ்வரன் முதல் 2 1/2 ஆண்டுகளுக்கும் அடுத்த 2 1/2 ஆண்டுகளுக்கு அய்ய்ம்பாளையத்தை சேர்ந்த 5 வது வார்டு உறுப்பினர் மல்லிகா மகாலிங்கம் அல்லது பொன்னகரை சேர்ந்த 6 வது வார்டு உறுப்பினர் சரண்யா மணிகண்டன் அல்லது அல்லாளபுரத்தைச் சேர்ந்த 14 வது வார்டு உறுப்பினர் திவ்யா செந்தில்குமார், இவர்கள் மூவரில் யாராவது ஒருவர் துணைத்தலைவர் பதவி வகிக்க ஒப்பந்தம் மேற்கொண்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தங்களது ஆதங்கத்தை வார்டு உறுப்பினர்கள் சரண்யா மணிகண்டன் மற்றும் திவ்யா செந்தில்குமார் ஆகியோர் கூறும்போது கரைப்புதூர் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், தற்போது மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் ஒப்பந்தப்படி துணைத்தலைவர் பதவியை கார்த்திகா மகேஷ்வரன் விட்டுக் கொடுக்கவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும் துணைத்தலைவர் பதவி தங்களது பகுதி மக்களுக்கு கிடைக்கவேண்டிய திட்டங்களை நிறைவேற்றவே எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.
5 ஆண்டுகால துணைத்தலைவர் பதவியில் மற்றொருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமானால் பதவியில் இருக்கும் துணைத் தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும், அல்லது தீர்மாணம் நிறைவேற்றி தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் இது போன்று 20 ரூபாய் பத்திரத்தில் ஒப்பந்தம் ஏற்படுத்தி துணைத்தலைவர் பதவியை பங்கு போட்டு பதவி வகிக்கலாமா என ஓட்டுப்போட்ட மக்கள் குழம்பிப்போய் உள்ளனர்.
சமூக வலைதளத்தில் துணைத் தலைவர் பதவிக்கான அக்ரிமெண்ட் டாக்குமெண்ட் வைரலான நிலையில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய கிராம ஊராட்சியின் அடுத்த நகர்வுகள் குறித்து பொதுமக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். சட்டத்திற்குப் புறம்பாக ஒப்பந்தம் செய்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுப்பதோடு, பதவிநீக்கம் செய்ய வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.