ஜீப் டிரைவரை சைக்கிள் ஓட்ட வைத்து அழகு பார்க்கும் பல்லடம் தாசில்தார்.!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜீப் டிரைவராக பணியாற்றிவந்த ஹரிஹரனுக்கு நேர்ந்த அவலநிலை குறித்து விவரிக்கும் செய்தி.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த ஹரிஹரனுக்கு திருமணமாகி தனது மனைவி குழந்தையுடன் சூலூரை அடுத்த காங்கேயம்பாளையத்தில் குடியிருந்து வருகிறார். மேலும் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அரசுப்பணியில் டிரைவராக வேலைக்கு சேர்ந்தார். காங்கேயம், தாராபுரம், திருப்பூர் வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்றிவந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியருக்கு ஜீப் டிரைவராக இடமாறுதல் பெற்று பணியில் சேர்ந்தார். அதன்பிறகு கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதனிடையே அங்கு பணியில் சேர்ந்த பின்னர் பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து ஹரிஹரனுக்கு வழங்க வேண்டிய கடைசி மாத முன் ஊதியச்சான்று (LPC) வழங்க விண்ணப்பித்திருந்தார். ஆனால் சான்று வழங்காமல் வட்டாட்சியர் அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.
மாதம் ரூ. 35 ஆயிரம் சம்பளம் பெற்றுவந்த ஹரிஹரனுக்கு சம்பளம் தடைபட்டதால் தனது குடும்பத்தை நடத்தவும், குழந்தையின் பள்ளிப்படிப்பை செலுத்தவும் முடியாமல் அவதியுற்றார். மேலும் நாளுக்கு நாள் பணமின்றி தவித்த ஹரிஹரன் பஸ்சுக்கு கூட காசில்லாமல் சூலூர் காங்கேயம் பாளையத்தில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்றுவிட்டு பின்னர் பணி முடிந்து 35 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சுமார் 70 கிலோ மீட்டர் சென்று பணிசெய்துவந்துள்ளார்.
இந்த அவல நிலைக்கு யார் காரணம்? தாசில்தார் நந்தகோபாலிடம் கேட்டபோது அலுவலக உதவியாளர் பாஸ்கரன் என்பவர் கடந்த மாதம் முதல் விடுப்பு எடுத்து சென்றுள்ளதாகவும், தாராபுரத்தை சேர்ந்த பாஸ்கரை தொடர்புகொள்ள முயற்சித்தபோது செல்போன் சுவிச் ஆப் ஆகியுள்ளதாக தெரிவித்தார். மேலும் பாஸ்கரிடம்தான் ரகசிய பாஸ்வேர்ட் இருப்பதாகவும், அவர் வந்தால் தான் ஹரிஹரனின் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என தெரிவித்தார். ஒரு மனிதன் மூன்று மாதமாக ஊதியம் பெறமுடியாமல் போனதற்கு மேற்படி தாசில்தார் கொடுத்த விளக்கம் ஏற்புடையதா? உதவியாளர் விடுப்பில் சென்று ஒரு மாதம் தான் ஆகிறது, அதற்கு முன்பாக ஏன் ஹரிஹரனுக்கு சம்பளம் வழங்க தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை? இதை விடக்கொடுமை தற்போது ஹரிஹரனுக்கு பதிலாக வந்திருக்கும் டிரைவருக்கும் சம்பளம் கொடுக்கப்படவில்லை என்பதுதான் ஹைலைட்!
எது எப்படியோ ஆரோக்கியத்திற்காக சைக்கிள் ஓட்டுவதை பார்த்திருக்கிறோம், போட்டிகளுக்காக சைக்கிள் ஓட்டுவதை பார்த்திருக்கிறோம் ஆனால் தற்போது இந்த நூற்றாண்டில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டாலும், கடமையே காண்ணாக கொண்டு தனது பணிவில் தொய்வில்லாமல் பணியாற்ற தினமும் சுமார் 70 கிலோமீட்டர் சைக்கிளில் சென்றுவந்து அதிகாரிகளை ஜீப்பில் கூட்டிச்சென்று பணியில் ஈடுபட்டு சம்பளமின்றி உழைக்கும் டிரைவர் ஹரிஹரனுக்கு கிடைக்கவேண்டிய சம்பளம் கிடைத்து ஆரோக்கியமாக சைக்கிள் ஓட்ட மாவட்ட ஆட்சியர் வினித் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.