தமிழகம்

டாஸ்மாக் பெயரில் மதுபானம் டோர் டெலிவரி… பணம் இழந்த குடிகாரர்கள்…

சென்னையில் வீடுகளுக்கே சென்று மதுபானம் வழங்குவதாக டாஸ்மாக் பெயரில் முகநூலில் அறிவிப்பு வெளியிட்ட ஆசாமி ஒருவன், ஏராளமான எலைட் குடிகாரர்களிடம் ஆயிரக்கணக்கில் பணம் பறித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எலைட் டாஸ்மாக்…. இந்த ஒரு வரிதான் ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் மேல்தட்டு குடிகாரர்களை வீட்டில் இருந்தபடியே பணத்தை இழக்க வைத்துள்ளது..!

பொதுவாக மது அருந்துவோரில் குடித்த வாடை கூட தெரியாமல் சமூகத்தில் கவுரவமாக வலம் வருவதாக காட்டிக் கொள்வது தான் இந்த எலைட் குடிகாரர்களின் வழக்கம். மாலை நேரத்தில் கிளப்புகளில் கூடி மது அருந்தி மகிழ்ந்த இந்த போதை ஆசாமிகள், ஊரடங்கு அறிவிப்பு வந்ததுமே நிறைய வாங்கி குவித்தனர்.

தற்போது ஊரடங்கு மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டதால் சரக்கு கிடைக்காமல் காலியான பாட்டில்களுடன் தவித்து வருவதை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். அப்போது, போன் செய்தால் போதும் வீட்டுக்கே வந்து மதுபாட்டில் கொண்டுவந்து தருவதாக எலைட் டாஸ்மாக், சென்னை அண்ணா நகர் முகவரியுடன் முகநூலில் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தங்கள் வாட்ஸ் அப் குழுவில் தகவலை பெற்றுள்ளனர்.

கொழுத்த நண்டு வளையில் தங்காது என்பது போல அந்த குறிப்பிட்ட செல்போனுக்கு போன் செய்து 5 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை மதிப்புள்ள ஃபாரின் சரக்கு முதல் உள்ளூர் சரக்கு வரை ஆர்டர் செய்துள்ளனர் நம்ம சொகுசு குடிமகன்கள்.அதற்கு எலைட் டாஸ்மாக்கில் இருந்து பேசுவதாக கூறிய அந்த ஆசாமி, பாதி பணம் கட்டினால் போதும் மீதிப் பணத்தை மது பாட்டிலைக் கொண்டு வருபவரிடம் கொடுத்து விடுங்கள் என்று நம்பிக்கையை விதைக்க, பணம் கொழுத்த குடிகாரர்கள் தாங்கள் ஆர்டர் செய்த மதுவுக்கு பாதி பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தி உள்ளனர்.

50க்கும் மேற்பட்டவர்கள் அடுத்தடுத்து அழைத்து ஆசையோடு பணம் செலுத்திவிட்டு சரக்கிற்காக வழி மேல் விழிவைத்து காத்திருந்துள்ளனர். நேரம் நீண்டு கொண்டே சென்று இறுதியில் விழிபிதுங்கிப் போனது தான் மிச்சம். சரக்கு வரவில்லை..! நீண்ட நேரம் கழித்து நண்பர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்ட பின்னர் தான் தெரிந்துள்ளது, சரக்கிற்காக சறுக்கிய சமாச்சாரம்..! செல்போனில் பேசிய நபர் சென்னை அண்ணா நகரில் இருந்து பேசவில்லை என்றும் ஒடிசாவில் இருந்து பேசியிருக்கிறான் என்பதையும் அறிந்து நொந்து கொண்டனர்.

கத்தியில்லை, ரத்தம் இல்லை, கடத்தல் இல்லை மிரட்டல் இல்லை, செயின் பறிப்பு இல்லை, ஊரே அடங்கி இருக்கின்றது..! ஆனால் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் அத்தனை பேருக்கும் மொட்டை அடித்துள்ளான் ஒரு கேடி என்பதை லேட்டாக உணர்ந்து, காவல் நிலையம் சென்றால் அவமானமாகி விடுமே என்ற எண்ணத்தில் பணம் போனதோடு சரி மானமாவது மிச்சமாச்சே என்று வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர் இந்த சொகுசு குடிகாரர்கள்..!

இதே பாணியில் பெண்களை பேசவைத்து பணம் பறித்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பான புகார்கள் ஏதும் வராததால் போலீசார் வழக்கு ஏதும் பதியவில்லை.

வீட்டுக்குள்ளே இருந்து வில்லங்கத்தை விலைக்கு வாங்காமல் அடக்கிக் கொண்டு இருங்கள், மது மாது என்று ஆசைபட்டு அழைத்தால், உங்களிடம் ஆசையாக பேசி பணத்தை ஸ்வாஹா செய்ய அண்டை மாநிலங்களில் ஒரு கும்பலே வேலை செய்து கொண்டு இருக்கின்றது என்று எச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button