பட்டா மாறுதலுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு, ஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்த VAO !
இராமநாதபுர மாவட்டம், பரமக்குடி தாலுகாவில், பகைவென்றி கிராமத்தை சார்ந்த முருகேசன் என்பவர், பட்டா மாறுதல் சம்மந்தமாக சிறகிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ( VAO ) ஈஸ்வரமூர்த்தியிடம் பத்து நாட்களுக்கு முன்பு மனு அளித்துள்ளார். தனது மனு சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், பரமக்குடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று வட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளார்.
வட்டாட்சியர் தொலைபேசி வாயிலாக கிராம நிர்வாக அலுவலரை தொடர்புகொண்டபோது, அவர் வட்டாட்சியரிடம் தொலைபேசியை முருகேசனிடம் கொடுக்க சொல்லி, அவரை ஒருமையில் கெட்டவார்த்தைகளால் தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக காவல்துறையிடம் புகார் மனு கொடுத்தும், இதுவரை அந்த புகார் மனு சம்பந்தமாக, கிராம நிர்வாக அலுவலர் ஈஸ்வரமூர்த்தி மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக முருகேசன் புலம்பி வருகிறார்.
இந்நிலையில், கிராம நிர்வாக அலுவலர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அரசு ஊழியர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என முதலமைச்சர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் எவ்வளோ அறிவுறுத்தியும், அரசு ஊழியர் இவ்வாறு தான்தோன்றித்தனமாக பேசியது கண்டிக்கத்தக்கது. இது சம்பந்தமாக, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.