நீர் பாசன சங்க பதவிகளை அதிமுகவிற்கு தாரைவார்த்த அதிகாரிகள் – கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பரமக்குடியில் நீர் பாசன சங்க பதவிகளை அதிமுகவைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரிகள் வழங்கியுள்ளதாக நான்கு கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் மேலபார்த்திபனூர், கொத்தங்குளம், மோசுக்குடி, இடையாத்தூர், பிடாரிச்சேரி புத்தூர், செம்பிலான்குடி, கீழ பருத்தியூர், கள்ளிக்குடி உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு நீர்பாசன விவசாயிகள் சங்க தேர்தல் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 31ம் தேதி முடிவுற்றது. இதில் 76 பதவிகளுக்கு 177 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் மேலபார்த்திபனூர், மோசுக்குடி, இடையாத்தூர், பிடாரிச்சேரி புத்தூர் உள்ளிட்ட 4 கிராம நீர் பாசன சங்கங்களுக்கான பதவிகளுக்கு அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றிருப்பதாக வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகம் அறிவிப்பு பலகையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலபார்த்திபனூர், மோசுக்குடி, இடையாத்தூர், பிடாரிச்சேரி புத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் யாரும் போட்டியிடவில்லை அதனால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேட்பு மனுதாக்கல் செய்தவர்கள் தாங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெறாத நிலையில் எவ்வாறு தேர்தல் முடிவுகள் அறிவிக்க முடியும் என நான்கு கிராம மக்கள் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் அறையின் முன்பாக தரையில் அமர்ந்து கோஷமிட்டு தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
நீர்பாசன சங்க தேர்தலில் அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு அதிகாரிகள் பதவிகளை வழங்கியிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். தேர்தலை நடத்தாமல் தலைவர் உறுப்பினர் பதவிகளுக்கு முறைகேடாக நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.