ஆசி வழங்குவதாக கொள்ளை முயற்சி… : 4 இளைஞர்கள் கைது..!
சேலத்தில் சாய்பாபா பிரார்த்தனை செய்யச் சொன்னதாக கூறி வீடு புகுந்து நகைப்பறிப்பில் ஈடுபட முயன்றதாகக் கூறப்படும் ஆந்திர மாநில இளைஞர்களை மூதாட்டி ஒருவரின் சமயோசித புத்தியால் பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
சேலம் பழையூர் பகுதியில் காலை ஆட்டோ ஒன்றில் சாய்பாபா உருவ சிலையை வைத்துக்கொண்டு 5 இளைஞர்கள் வலம் வந்துள்ளனர். வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தி பொதுமக்களுக்கு விபூதி, குங்குமம் வழங்கியுள்ளனர். அதிலிருந்த உண்டியலில் அப்பகுதி மக்கள், 5 ரூபாய், 10 ரூபாய் என காணிக்கைகளையும் செலுத்தியுள்ளனர்.
அந்த வகையில் அதே பகுதியைச்சேர்ந்த கண்ணம்மா என்ற மூதாட்டி, 10 ரூபாயைஉண்டியலில் காணிக்கையாகப் போட்டுவிட்டு குங்குமத்தை வாங்கிக் கொண்டு வீடு நோக்கிசென்றுள்ளார்.
5 பேர் கொண்ட அந்த கும்பலைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் மூதாட்டியைப் பின் தொடர்ந்து சென்று அவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளான்.
அதிர்ச்சியடைந்து விசாரித்த மூதாட்டியிடம் அவரது வீட்டில் சாய்பாபா பிரார்த்தனை செய்யச் சொன்னதாகக் கூறி, கையில் வைத்திருந்த தண்ணீரை அவர் மீது தெளிக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. சுதாரித்துக்கொண்ட மூதாட்டி, அவனைப் பிடித்து கீழே தள்ளி, பின்னர் விரட்டிப் பிடிக்க முயன்றுள்ளார்.
மூதாட்டிவீட்டிலிருந்து இளைஞன் ஓடிவர, அவனுடன்வந்த மற்ற நால்வரும் அடுத்தடுத்தவீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்துள்ளனர். இதனைப் பார்த்த பொதுமக்கள்,5 பேரையும் மடக்கிப் பிடித்து போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். போலீசாரின்முதற்கட்ட விசாரணையில் அவர்கள் ஐவரும் ஆந்திராவைச்சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
சாய்பாபா பெயரில் பிரார்த்தனை செய்வதாகக் கூறி பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளுக்குள் சென்று அவர்களது கவனத்தை திசை திருப்பி, நகைப்பறிப்பில் ஈடுபடுபவர்களாக இருக்கலாம் என்று கூறும் போலீசார், அவர்கள் வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூதாட்டி மீது இளைஞன் தெளிக்க முயன்ற தண்ணீரில் மயக்க மருந்து ஏதேனும் கலந்துள்ளதா என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அந்த நபர்கள், வீட்டில் தனியே இருக்கும் பெண்களை தோஷம் கழிப்பதாகக் கூறி ஏமாற்றி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் கூறினர்.