60 கார்களுடன் மாயமான மோசடி மன்னன் ! அப்பாவிகளை சிக்கவைத்த சீட்டிங் குறித்த அதிர்ச்சி தகவல் !

நம்பவே முடியாது, ஆனால் நடந்துமுடிந்த மெகா மோசடி குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி விசைத்தறியாளர்கள் மற்றும் விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதிக வருமானத்திற்கு ஆசைப்பட்டு தற்போது மோசடி வலையில் சிக்கி கோடிக்கணக்கிலான கடன் தொகைக்கு பதில் அளிக்கமுடியாமல் தூக்கத்தை தொலைத்து காவல்துறையை நாடியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த இச்சிப்பட்டிக்கு அருகேயுள்ள கருகம்பாளையத்தில் குடியிருந்து வருபவர் முருகேஷ். விசைத்தறி உரிமையாளரான இவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் அதே பகுதியில் குடியிருந்து வந்த முரளி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முரளி வாடகை கார் வாங்கப்போவதாகவும், முன்பணத்தை தானே கட்டிக்கொள்வதாகவும் முருகேஷனிடம் கூறி அவரது ஆவணங்களை பெற்று கார் வாங்கியுள்ளார். பின்னர் கடனை திருப்பி அடைத்ததாக கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி, சுமார் 12 சொகுசு கார்களை முரிகேஷ் பெயரில் மாத தவணைக்கு வாங்கியுள்ளார். பின்னர் இரு சக்கர வாகனம், தனி நபர் கடன் என சுமார் மொத்தமாக ஒரு கோடியே 25 லட்சத்திற்கும் மேலாக பல தனியார் வங்கிகளில் முருகேஷ் பெயரில் கடன் பெற்றுள்ளார்.

அதன்பிறகு கடந்த சில மாதங்களாக தவணை செலுத்தவில்லை என வங்கிகளில் இருந்து முருகேஷிற்கு போன் வந்துள்ளது. இதனையடுத்து முரளியை தொடர்புகொள்ள முயற்சித்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. முரளி போனை சுச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். அதனையடுத்து முருகேஷ் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார். மேலும் இதே போல் ஏராளமான அப்பாவி விவசாயிகள், விசைத்தறியாளர்களை நூதன முறையில் மோசடி செய்து கார்களை வாங்கியுள்ளார். சுமார் 69 கார்களுக்கு மேல் மோசடியாக வாங்கிவிட்டு தற்போது தலைமறைவாகியிருக்கும் முரளி நூறு கோடிக்கு மேல் மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

அப்பாவிகளை ஏமாற்றி வாங்கிய கார்கள் என்ன பிரண்ட் என்பதே பலருக்கு தெரியாத நிலையில் இத்தனை கார்களை என்ன செய்தார் என்பது மர்மமாக உள்ளது. மேலும் பைனான்ஸ் கம்பெனிகள் எவ்வாறு முரளி விசயத்தில் கோட்டை விட்டனர் என்பது கேள்விக்குறியாகியுள்ளது? காவல்துறை மோசடி மன்னன் முரளி மீது வழக்கு பதிவு செய்து கார்களை மீட்டு அப்பாவிகளை காப்பாற்றவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.