தமிழ்நாட்டில் முதல் இடம் பிடித்த திருப்பூர் மாநகர காவல்
திருப்பூர் மாவட்டம் பின்னலாடை துறையில் ஆண்டொன்றிற்கு சுமார் 26 ஆயிரம் கோடி அளவிற்கு ஏற்றுமதி மூலம் அன்னிய செலாவணியை ஈட்டும் நகரமாக திகழ்ந்துவருகிறது. இத்தொழிலை நம்பி சுமார் 10 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி அண்டை மாநிலம் மற்றும் அண்டை நாடுகளில் இருந்தும் அதிக அளவில் தொழிலாளர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், முகவர்கள் வந்து செல்கின்றனர்.
மேலும் திருப்பூர் மாநகரில் கடந்த ஒராண்டாக மாநகர காவல் ஆணையர் திருமதி.வே.வனிதாவின் அதிரடி நடவடிக்கையால் குற்றச்சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்து சிறையில்.அடைக்கப்பட்டது பொதுமக்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
இந்நிலையில் காவல் துறையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கிறார். மேலும் திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலையம் தமிழ்நாட்டிலேயே சிறந்த காவல்நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாநகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து மாநகர காவல் ஆணையர் திருமதி. வே.வனிதா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கடந்த ஓராண்டில் திருப்பூர் மாநகர காவல் துறையில் புதிதாக மின்னணு ரோந்து செயலி மற்றும் பிங்க் ரோந்து உள்ளிட்ட புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் கடந்த 2021 ஆம் ஆண்டில் கொலை, கொள்ளை, வழிப்பறி, கஞ்சா மற்றும் குட்கா விற்பனையில் தொடர்ச்சியாக ஈடுபட்ட 61 நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், 18 கொலை வழக்குகளில் 17 வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் திருப்பூர் மாநகரில் கடந்த 2021ஆம் ஆண்டில் நடைபெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு ரூபாய். இரண்டு கோடியே ஐந்து லட்சத்து மூன்றாயிரத்து எட்நூற்றி எழுபது மதிப்புள்ள சொத்துக்கள் மீட்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றச்செயலில் ஈடுபட்டதாக 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும், இதில் 56 வழக்குகள் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு 5 வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் கஞ்சா, குட்கா விற்பனையில் சட்டவிரோதமாக ஈடுபட்டதாக 802 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் ஆணையர் பேசும் போது திருப்பூர் மாநகரில் போக்குவரத்து விதி மீறியதாக கடந்த ஒரு ஆண்டில் 4 லட்சத்து 63 ஆயிரத்து 302 வழக்குள் பதியப்பட்டு 4 கோடியே 5 லட்சத்து 74 ஆயிரத்து 86 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
– நமது நிருபர்